🔘வாழ்க்கை குறித்து கூறப்பட்டவை குப்பைகள் அல்ல 🔘

 


விசிலடித்ததும்

விழித்துக் கொள்ளும்

மூடிய தொட்டியிலிருந்து

திறந்த தொட்டிக்குப்

பறந்து செல்லும்

வகை வகையாய்ப் பிரிந்து அமர்ந்தபின்பு

மீண்டும் உறங்கத் தொடங்கும்

அழைத்துச் செல்லும் தூயவள்

சூரியனை இரண்டாக உடைத்து

நகரும் தொட்டிக்கு சக்கரங்களாக்குகிறாள் 

வீதி கடந்து நின்றிருக்கும்

மிகப்பெரிய தொட்டியை அடைந்ததுமே 

குதிக்கத் தொடங்கிவிடும்

எல்லை , அடையாளச் சண்டைகள்

உடைக்கும் சுவிட்சை 

இயக்குகிறான் தூயவன்

திகழும் பேரமைதியில்

குடிகொள்கிறது மாபெரும் இருட்டு

யாரும் யாருடனும் பேசுவதில்லை

மிகப்பெரிய தொட்டி

வேகமாகப் பயணித்து

ஊருடன் சேராத ஊரில் உள்ள

மாபெரும் மலையை முட்டும்

அவ்வளவுதான்

ஒவ்வொருவராக இறங்கி

புதைய ஆரம்பித்து விடுவார்கள்

பூமி இறுக்கிக் கட்டிக் கொள்ளும்.




கணையாழி மார்ச் 2022

Comments