கண்ணாடிச் சில்லுகள்



🌀 பிம்பம் 1 


வறண்ட கிணற்றில்

தள்ளாடியபடியே  ஏறுகிறது வாளி 

கற்களில் மோதி இழுபடும் ஓசை 

அறவே பிடிக்கவில்லை 

கொம்புடைந்த மாட்டுக்கு 

முட்டிக் காயம் செய்த வேப்பமரம் 

பூக்களைக் கொட்டுகிறது 

தோலை அலங்கரிக்கும் 

கடிமணம் பிடிக்காமல் 

தூரத்திலிருந்து விரட்டும் முதியவர் 

அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய தலைவியின் பாதங்களை 

உடலெங்கும் ஓட விடுகிறார் 


🌀பிம்பம் 2


நடுப்பக்கத்திலிருந்து 

யாரோ கிழித்திருக்கிறார்கள் 

பகலெல்லாம் தேடியும் 

சிக்கவே இல்லை 

இரவில் சுவரெல்லாம் 

வழிந்து கொண்டிருக்கிறாள்  

வெளிச்சத்துக்கு பயந்து 

வெளியே சென்றால் 

விண்மீனில் குளித்துக் கொண்டிருக்கிறது 

வேறொரு உடல் 

குற்ற உணர்ச்சி ஏதுமின்றிப் பெருகுகிறது 

தூங்கவிடாத கடல் 


🌀பிம்பம் 3


கோழிகளில் தொடங்கியது 

நாய்களென்றால் ஓரக்கண் 

குழந்தைபோலக் கத்தும் பூனைகளை

இப்போதும் விடமுடியவில்லை 

விலங்குகள் எப்போதும் தூய்மையானவை

முகமூடி அணிந்து பார்க்கும் 

நள்ளிரவு சேனலில் 

நடித்துக் கொண்டிருக்கும் உடல்களுக்கு 

திரும்பிச் செல்ல  

எப்போதும் இருக்கிறது

ஒரு வீடு 


🌀பிம்பம் 4


இரவு நாடகத்தில் 

சரியாகப் பொருந்தாமல் 

அடம்பிடிக்கிறது

மூளைக்குள் சிரிக்கும் முகம் 

அந்த செவிகளை இழுத்தால் 

நசுங்குகிறது இந்த மூக்கு

நெற்றியைப் பெரிதாக்கினால் 

கடிக்க வருகிறது தெற்றுப்பல் 

சோர்ந்து உட்காருபவனின் 

உடலெங்கும் சுழல்கின்றன

சரணடையாத மரவட்டைகள் 




நன்றி : வாசகசாலை 

Comments