அழியாத மலர்




என்னுள் எழுந்த மலரை 

காற்றில் வீசியெறிந்தேன் 

அகலாத நறுமணத்தைக் கழுவினேன் 

தண்ணீருக்குத் தாவியது மணம் 

தொடுகின்ற விரல்கள் தோறும் 

மலர்கின்ற மலரதனை 

இதழ்களாகப் பிய்க்க முடியவில்லை 

பறித்த போதே 

இறந்திருக்குமே மலர் 

இப்போது 

எங்கள் விரல்களில் 

மணப்பது எது என்றார்கள் வாங்கியவர்கள் 

முகரும் தோறும் 

கன்னங்களை உரசியது மட்டுமின்றி 

ஆழத்தில் எதையோ அசைத்துக் கொண்டிருந்தது 

மோதல் வெடித்தது 

இதழ்களை வெட்டி எரித்து விட்டோம் 

இனி உனக்கு வடிவமில்லை 

பறக்கும் மலரைப் 

புதைப்பதே மகிழ்ச்சி என்றனர் 

அப்போது 

அவர்களின்  மூச்செல்லாம் மலர்கள் 

தத்தளிக்கும் நுரையீரலில் 

அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தது

விரல்களில் மலர்ந்த முதல் மலர் 

இனி 

தோண்டும் போதெல்லாம் 

பூமியின் ஆழத்திலிருந்து வரப்போவது 

அது மட்டுமே.


--இரா.கவியரசு 


நன்றி : சொல்வனம்

Comments