​​உயரத்தின் உச்சியில்



உயரத்தின் உச்சியில்
வெறுமனே புல் மேய்ந்து கொண்டிருக்கிறது
பெயர் தெரியாத ஆடு

மண்டையோடுகள் தொங்கிக் கொண்டிருக்கும்
கூரான கொடிக்கம்பத்தில்
எனக்கான இடத்தைத்
தேர்வு செய்கிறவன்
கொடியை ஏற்றுமாறு அழைக்கிறான்

என் பெயரை
எதிரொலிக்காத மலைகளை
வெட்டித்தள்ள வேண்டும்.
இல்லாத காற்றை
எப்படிக் கொல்வது ?

வருகின்ற வழியெல்லாம்
என் குருதித் தடங்கள் காய்ந்து விடாமல்
அடைகாக்க வேண்டுமென்றேன்

தேன்துளிகளை நோக்கி
​​விரைந்து செல்கின்றன
தடங்களை அழித்தபடி
நகரும் எறும்புகள்

கரையான் புற்றுகளை உதைத்தவன்
உள்ளிருந்த காகிதக்கூழின்
நறுமணத்துக்குத் தீவைத்துப்
பரவ விடுகிறான்

பயந்து
நான்
பின்னோக்கி இறங்குகிறேன்.
கடலுக்குள் மூழ்குகின்றன
ஏறிய மலைகள்.

பதாகை ஏப்ரல் 2019

Comments