அந்தரங்க முதலைகள்



முதலைகள் மண்டிக்கிடக்கும்
அழுக்கான குட்டை நான்

மறைத்திருக்கும் புத்தப்பாசியைக் கிழித்து
தலைகாட்டும் வாலில் தீ வைக்க
தூரத்திலிருந்து புகை சேகரிக்கும்
நீவிர் வாழ்க!

கோரப்பற்களில் சிக்கிய இதயம்
தினமும் பிழிந்துண்ணப்படுவதால்
கலக்கும் குருதியில்
மாறிக்கொண்டிருக்கிறது  உயிர்த்துடிப்பு.

வலிகள் நிறைந்த பருவத்தில்
மெல்லிய ஒட்டுண்ணிகளாகவே
குட்டிகளை என் மீது பயிரிட்டேன்
பல் முளைத்த நாளில்
சதை ருசியை
தானாகவே அறிமுகப்படுத்திக் கொண்டவை
அதற்குப்பிறகு
தினமும் உடல்கள் கேட்டு
நச்சரிக்க ஆரம்பித்தன.

முதலைகளைச் சுட்டுத் தள்ளுவதற்காக
தோட்டாக்களை விழுங்கினேன்
உருமாற்றம் செய்து கொண்டு
ஆழப் பிரதேசங்கள் நோக்கி நகர்கின்றன.

முதலைகள் கக்கும் துளி நஞ்சு
போதையேற்றும் கணத்திற்காக
சேற்றுக்குள் புதைக்கும்
கனவு உடல்களிலிருந்து
கடல் போல நிறைகிறது குருதி

முதலைகள் பற்றி
எல்லோருக்கும் தெரிந்திருந்தும்
பெயரை வெளியிட முடியாததால்
முதலைகளைக் கொல்லவே முடியவில்லை.

காற்று வெளி வைகாசி -2019

Comments