கோடுகள் எண்ணும் குயில்


குயில் கூவியது
கோடுகள் வரைந்தேன்
ஒன்பது கோடுகள் பாடியிருந்த குயில்
நிறுத்திய போது வரையத் தெரியவில்லை.
கோடுகளைப் பார்த்துக்
கூவச் சொன்னது குயில்
நான் எண்ணிக் கொண்டிருந்தேன்
ஒன்று..இரண்டு..மூன்று........ ஒன்பது.
குயில் அதற்குப் பிறகு
கணிதம் கற்றுக் கொள்ளத் தொடங்கியது
அலகைத் திறந்தால் எண்ணிக்கைதான்.
காற்றில் இல்லாது போன
குயிலின் இசைக்காக
எங்கிருந்தோ வந்த பறவைகள்
கோடுகளால் மிகுந்த குழப்பமடைந்தன.
கோடுகள் வளரிகளாக மாறி
சிறகுகளை அறுக்கும் கனவு
வந்த நாளிலிருந்து
குயில் பதட்டமாகவே இருந்தது.
கோடுகள் வளர்ந்து கொண்டே இருந்தன
குரல்வளை தெறிக்கும்படி கூவிய குயில்
எத்தனைக் கோடுகள் வந்திருக்கின்றன
இன்னும் இன்னும் பாடுகிறேன் என்றது.
என் கண்களைக் கொத்திய பறவைகள்
கரித்துண்டுகளை விழுங்கியபின்
குயிலையும் கொத்த ஆரம்பித்தன.
கோடுகளைக் காற்றில் சொல்ல ஆரம்பித்தேன்
பறக்க முடியாத குயில்
கோடுகளை மறந்திருந்தது
கூடவே கூவுவதையும்.


மலைகள்.காம் ஏப்ரல் 2019 

Comments