மாநகரப் பசு



தார்ச்சாலையில் புல் மேய்ந்து
சுவரொட்டிகள் தின்று
பால்வற்றி மடிகாய்ந்த
மாநகரப் பசு ஒன்று
யாரோ தூக்கி எறிந்த
எச்சில் வாழை இலையை
குரல்வளை அடைக்கக்
கிழித்து தின்றது

மாநகர குப்பைத் தொட்டியை
கோபத்தில் கிளறியதில்
பல வண்ண பாலித்தீன் பைகள்
மதுபான பாட்டில்கள்
நாப்கின் கவர்கள்
தேங்காய் ஓடுகள்
பிரியாணி கோழிக்கால்கள்
பிளாஸ்டிக் டம்ளர்கள்
நாற்றம் தாங்க முடியாமல்
பத்திரமாக போடப்பட்ட செத்த எலி
எல்லாம் கிடைத்தது
சிறிதும் புலப்படவில்லை
வைக்கோலோ புல்லோ.

வயலில்லாத ஊரில்
வைக்கோல் ஏது
சிமெண்ட் சாலையில்
புல் முளைப்பதேது.

எச்சில் இலைகள் தீர்ந்த நாளில்
வயிறு வீங்கி செத்துக் கிடந்தது
மாநகரப்பசு.

கொலுசு - மே 2018 

Comments