6.வான்வளி வந்து தழுவும் பிரம்ம முகூர்த்தம்-இளங்கோ கிருஷ்ணன் கவிதைகள் குறித்து

 








ஆக்ஸிமீட்டரை கவனித்துக் கொண்டிருந்த அவளது கண்கள் நடுங்க ஆரம்பித்தன. விரலைக் கவ்விப் பிடித்திருந்த அதன் திரையில் 90 நின்றது. அடுத்த வாரம் இறுதியாண்டுத் தேர்வு நிகழ  

இருந்த சூழலில் காய்ச்சல் காரணமாக பரிசோதிக்கப்பட்டவளை பெரிய மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்து வந்திருந்தார்கள். கவனித்துக் கொள்ள யாரையும் அனுமதிக்காத அந்நோயின் விசித்திரம்  அவளுக்குள் மிகுந்த கலக்கத்தை உருவாக்கியிருந்தது. அருகிலிருந்த படுக்கையில் அமர்ந்திருந்த நபருக்கு வயது நாற்பது இருக்கும். இடைவிடாது இருமிக் கொண்டே இருந்தார். நெஞ்சு வலிப்பதாகவும், வீட்டிலிருப்பவர்களைப் பார்த்து ஒரு வார காலமாகி விட்டதால் செல்ல வேண்டுமெனவும் அழுது கொண்டிருந்தார். மருத்துவமனையில் யாருக்கும் எதற்கும் அவகாசமில்லை. ஆம்புலன்ஸ் சைரன் தீராது ஒலித்துக் கொண்டே இருந்தது. புதிதாக அனுமதிக்கப்பட்டவர்களை படுக்கைகளில் ஏற்றியும் சிறிதே நலமுற்றவர்களை வராண்டாவிலும் வைத்திருந்தார்கள். நிலைமை சரியாகுமா அல்லது வேறு ஏதாவது நிகழ்ந்து விடுமா என பதறிக் கொண்டே இருந்தவர்கள், அந்நோயால் இறந்துவிட்ட நெருங்கிய உறவினர்களை நினைத்தபடியே உறங்காமல் அலைந்து கொண்டிருந்தனர். அன்றிரவு நள்ளிரவில் எழுந்த அவளுக்கு, அருகிலிருந்த நபரைக் காணவில்லை என்றதும் மூச்சு வேகமாகி இதயம் படபடக்கத் தொடங்கியது. ஆக்ஸிமீட்டரில் அவசரமாக விரலை வைத்துப் பார்த்தாள். 93 காண்பிக்கவே நிதானமானாள். ஜன்னலைத் திறந்து மருத்துவமனைக்கு வெளியே பார்த்தாள். அன்றைய தினத்தில் இறந்தவர்களின் உடலைப் பார்க்கக் கூட முடியாமல் வெடித்து அழுது கொண்டிருந்தவர்களின் குரல் நீண்டு வந்து ஒவ்வொரு ஜன்னலையும் தட்டிக் கொண்டிருந்தது. அவள் கழிவறைக்கு செல்லும் வழியில் கருப்பு உறைகளில் இறந்தவர்களை கட்டி வைத்திருந்தார்கள். அலறியபடியே ஓடிவந்தவள், பக்கத்து இருக்கையில் இருமிக் கொண்டிருந்தவர் என்ன ஆனாரென்று  செவிலியரை விசாரித்த போது " அவருக்கு நேற்றிரவு ஆக்ஸிஜன் அளவு தீடீரென குறைந்து விட்டது" என  சொல்லிவிட்டுச் சென்று விட்டார். நேற்று அவரிருந்த படுக்கையில் இன்று புதிதாக அனுமதிக்கப்பட்டவர், நெஞ்சைப் பிடித்துக் கொண்டு இருமிக் கொண்டிருத்தார். 


தீர்க்கதரிசனமாக  உருவாகியிருக்கும் இளங்கோ கிருஷ்ணனின்  இக்கவிதை  அமைதியான உருவத்திலிருந்தாலும் பேராபத்து நிகழவிருப்பதை முன்னறிவிப்பு செய்திருக்கிறது.



காற்று உறையும் நகரம் 


குடிகாரனான நமது யாத்ரீகன் 

தன் பயணத்திற்கான வரைபடத்தை 

சூதாடி இழந்துவிட்டதால் 

கால் மாறிப்போய் காற்று உறைந்து கொண்டிருக்கும் 

நகரத்திற்குள் நுழைந்தான் 

வீடுகளில் முற்றங்களில் 

கோயில்களில் பூங்காக்களில் 

எங்கும் எங்கும் கூழாங்கல்லைப் போல் 

குவிந்து கொண்டிருந்தது உறை-காற்று 

கவனிக்க நேரமற்ற நகரவாசிகள் 

தங்கள் பணிகளில் மூழ்கிக்கிடக்க 

அதன் தோற்றத்தால் வசீகரிக்கப்பட்ட 

குழந்தைகளும் பித்தர்களும் 

அதை வாயில் இட்டு அதக்கிக் கொண்டார்கள்

காற்று உறைதலால் 

முதியர்களுக்கும் குழந்தைகளுக்கும் பலகீனர்களுக்கும் 

நேரும் சுவாச வாதைபற்றி 

புரிய நேர்ந்தவன் காற்று உருக்கும் கூடங்களின் அவசியத்தைப் 

பிரசிங்கத் துவங்கிய போது 

ஆதாரமற்ற செய்திகளை நம்ப வேண்டாம் 

என்றறிவிக்கப்பட்டு நாடு விரட்டப்பட்டான் 

குடிகாரனான நமது யாத்ரீகன்.


( காயசண்டிகை தொகுப்பிலிருந்து ) 



" காற்று உறைதலால் முதியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் நேரும் சுவாச வாதைபற்றி புரிய நேர்ந்தவன்" யாத்ரீகன். கவிதையால் முன்பே அறிய நேர்ந்தவன் கவிஞன். கொரோனா முதல் அலை தாக்கிய காலத்தில் ஊரடங்கின் போது ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சி திறக்கும் போதெல்லாம் அன்றைய தினத்தில்  இறந்தவர்கள் எண்ணிக்கையே முதலில் வந்து பயமுறுத்தும். கைகளை கழுவிக் கொண்டே இருந்தாலும் வைரஸ் எங்காவது தொற்றிக் கொண்டிருக்குமோ என்ற உயிரச்சம் விடாது துரத்திக் கொண்டே இருந்தது.  உடலில் காற்று உறைந்தாலே இப்படி இருக்கிறது. வெளியில் உள்ள ஆக்ஸிஜன் உறைய ஆரம்பித்தால் வாயில் அதக்கிக் கொள்ளவெல்லாம் அனுமதிக்குமா. அதற்குப் பிறகு இந்த உலகம் எப்படி இருக்கும். வாசிக்கும் போதெல்லாம் எளிமையாக வருடுவது போல் செல்லும் கவிதையின் வரிகள் ஆழத்தில்  ரத்தத் தீற்றல்களை உருவாக்கிவிடுகிறது.



🔘🔘🔘 


மார்கழி மாத ஞாயிற்றுக் கிழமை. 

பாதி விழிப்பதும் பிறகு போர்த்திக் கொண்டு  தூங்கும் குழந்தையாக சூரியன் 

அடம்பிடித்துக் கொண்டிருந்த அதிகாலை . K.K. நகரில் 12 G பேருந்தில் மெரினாவுக்கு நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தேன். அசோக் பில்லரில் ஏறி எனது அருகில் அமர்ந்தவர்,  போத்தீஸைக் கடப்பதற்குள் தோளில் சாய்ந்து உறங்க ஆரம்பித்து வழிந்து கொண்டிருந்தார்.  இரண்டு முறை சொல்லியும் மீளவும் உறங்க ஆரம்பித்திருந்தார். எல்டாம்ஸ் ரோட்டில் இறங்கிக் கொண்டவர் கைகளை அசைத்தபடி சென்றார். "தினமும் செல்பவரா ? இன்று ஞாயிறுதானே  வேலைக்குச் செல்கிறாரே" என்று நடத்துனரிடம் கேட்டேன்."அவனது பழைய கம்பெனியை மூடிவிட்டார்கள்.வேறொரு இடத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருக்கிறான். அதிகாலையிலேயே தினமும் செல்வான். வியாபார நிறுவனமென்பதால் ஞாயிறு அன்றும் அவர்களுக்கு விடுமுறை இல்லை "என்றார்.  அடுத்து , இசபெல்லா மருத்துவமனையில் இறங்கிய செவிலியர் ஒருவர் இளஞ்சிவப்பு யூனிஃபார்மில் ஞாயிறு அன்றும் புத்துணர்வுடன் சென்று கொண்டிருந்தார். பேருந்து கண்ணகி சிலையைக் கடந்ததும் கடல் ஆரம்பித்து விட்டதை உணர்ந்தோம். கந்தர்வனின் கவிதையில் " ஞாயிற்றுக் கிழமையும் பெண்களுக்கு இல்லை " என்று வரும். விடுமுறை நாளில் வீட்டிலிருக்கக் கூடாது என்ற நிர்பந்தத்தால் காலையில் கடற்கரையில் சுற்றிவிட்டு நண்பகலில் அறைக்குச் சென்று ஒட்டுமொத்தமாக துணிகளைத் துவைத்துக் காய வைத்துவிட்டு மதியம் எப்பாடு பட்டாவது  பிரியாணி உண்டுவிட்டு அதன்பின் உறக்கம் பிறகு  இரவு, பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ ஏதேனும் ஒரு சினிமாவுக்குச் செல்வது, திரும்பியதும்  திங்கட் கிழமையை வெறுத்தபடியே உறங்குவது என இதுதான் எங்களது ஞாயிறாக இருந்தது. தூங்கி வழிந்தவருக்கும், புத்துணர்வுடன் பணிக்குச் செல்லும் செவிலியருக்கும் இந்த நாளை அளித்திருந்தால் அது எப்படி மாறியிருந்திருக்கும். 


இளங்கோ கிருஷ்ணனின் இக்கவிதையில் வருகின்ற ஞாயிறு நித்தியமானதாக மாறியிருக்கிறது. 


ஞாயிறு போற்றுதும் 


நாங்கள் இன்று நிறைவாய் இருக்கிறோம் 

இன்று விடுமுறை 

இன்று கொண்டாட்டம் 

இன்று நிம்மதி 

இன்று ஓய்வு 


இன்று எங்கள் சூரியன் 

எவரின் படுக்கையறைக்கும் 

விளக்காய் இருக்காது 

விடுமுறையாதலால் 

மைதானங்கள் நிறைந்திருக்கிறது 

பிள்ளைகள் விளையாடுகிறார்கள் குதூகலமாய் 

எங்கள் பெண்களின் முகம் 

பூத்திருக்கிறது ஒரு திவ்ய மலராய் 

நினைத்தால் குளிப்போம் 

விரும்பினால் வீட்டை நீங்குவோம் 

சாலைகளைப் பார்க்க வேண்டாம் 

சிக்னல்கள் போக்குவரத்துக் காவலன் 

எருமை மாடுகள் தொல்லையில்லை 

பக்கத்து வீட்டுக்காரருடன் அன்பாய் பேசலாம்

மனிதர்கள் இன்று மனிதராய் தெரிவர் 

வானத்தை அண்ணாந்து பார்க்கலாம் 

வாசல் மரங்களுடன் பேசலாம் 

பறவைகளை ரசிக்கலாம் 

அடுத்தவர் குழந்தைகளைக் கொஞ்சலாம் 

சொந்த வேலைகளைச் செய்யலாம் 

நூலகத்துக்கும் பூங்காவுக்கும் கடற்கரைக்கும் திரையரங்குகளுக்கும் 

செல்லும் பாதைகள்

இன்று திறந்து கொள்ளும் 

எங்கும் மகிழ்ச்சி எங்கும் ஆரவாரம் 

எங்கும் கும்மாளம் எல்லாம் சுகம் 


இன்றை நாங்கள் நேசிக்கிறோம் 

இன்றே நாங்கள் வாழ்கிறோம் 

இன்றைப் போலவே நாங்கள் வாழ விரும்புகிறோம் 

இன்றாகவே நாங்கள் இருக்கிறோம் 

இன்றே எங்கள் தியானம்

இன்றே எங்கள் கடவுள் 

இன்றில் பூமி நிலைக்கட்டும் 


( பட்சியன் சரிதம் தொகுப்பிலிருந்து ) 



"நாங்கள் இன்று நிறைவாக இருக்கிறோம் " என்பதில் இருந்து "இன்றாகவே நாங்கள் இருக்கிறோம்" என்பதாக மாறும் கவிதையின் ஒவ்வொரு வரியும் மந்திரமாகி ஒலிக்கிறது. 

ஞாயிறு காலையில் குளித்ததும் இக்கவிதையைத்தான் மனமுருகிப் பாட வேண்டியிருக்கிறது. ஞாயிறு அன்று,  பூமியில் சூரிய ஒளி ஒவ்வொரு நாட்டையும் எழுப்பும் போதெல்லாம் இதுதான் தேசிய கீதமாக இசைத்துக் கொண்டிருக்கிறது. உலகம் முழுமைக்குமான ஞாயிற்றுக்கிழமையின் சுதந்திரக் காற்று ஒவ்வொரு வீட்டையும் தட்டி, ஒவ்வொருவரையும் தழுவிக் கொள்கிறது. உயிர் நிறைக்கும் வான்வளியை வாங்கும் பிரம்ம முகூர்த்தத்தில்,

எல்லா முகங்களும் திவ்ய மலராகி ஒளிர்கின்றன.



🔘🔘🔘 


நாற்றம் தாங்க முடியாமல் மாஸ்க்கை நாசியுடன் இறுக்கிக் கொண்டார்கள், பக்கத்து இருக்கைகளில் அமர்ந்திருந்தவர்கள்.   பூட்ஸ்கள் இரண்டையும் கோபத்துடன் கழற்றியவன், அவற்றின் வாயில் அழுக்கு சாக்ஸ்களைத் திணித்தான். பூட்ஸ்கள் அழுமென்று நினைத்தான்.  பாறையைப் போல இருந்தவை, அவனைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தன. இரண்டையும் பெரிய பையில் போட்டு இறுக்கிக் கட்டினான். கால்களை காற்றுக்குக் கொடுத்தான். 

நாள் முழுதும் வியர்வையுடன் வெவ்வேறு இடங்களுக்கு அலைந்தவை பூட்ஸ்களிடமிருந்து சுதந்திரம் பெற்றுத் துள்ள ஆரம்பித்தன.

 "எங்கிருந்து புறப்பட்டு நகரமெங்கும் பரவுகிறார்கள்

இந்த விற்பனைப் பிரதிநிதிகள்

கழுத்துப்பட்டையை ஓயாமல்

சரி செய்துகொண்டு

காலை வணக்கம் ஐயா

நாங்கள் சூரிய உதயத்திலிருந்து

வருகிறோம் ..... "

ஷங்கர்ராமசுப்ரமணியன் கவிதையில் வருபவர்களைப் போன்று கம்பெனியில் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரியும் அவனுக்கு பூட்ஸ்கள் இல்லையென்றால் வேலையிலேயே இருக்க முடியாது . முதன்முதலாக பள்ளிக்குச் சென்ற போது பூட்ஸ்கள் காலில் சரியாகப் பொருந்தவில்லை. அப்பாவிடம் "விட்டுவிடுங்கள் செருப்புடனே செல்கிறேன்" என்று அழுதான். அவர் விடவில்லை. ஒழுங்கு அப்போதுதான் வருமென்று வலிக்க வலிக்க மாட்டிவிட்டார். பூட்ஸ்கள் அன்றிலிருந்து கால்களை ஆட்சி செய்ய ஆரம்பித்தன. நீந்த வேண்டிய மீன்களைக் குடுவையில் அடைத்தது போல கால்கள் காற்றை மறந்துவிட்டு பூட்ஸ்  குகைகளுக்குள் அடிமையாகிப் புகுந்தன. வீட்டை விட்டு வேலைக்கு என்று வெளியில் சென்றால் பூட்ஸ்களின் ஆதிக்கம் மட்டும்தான். பாதங்களை அரித்துத் தின்னும் வியர்வையில் சாக்ஸ் சிறிது சிறிதாகக் கிழிந்து, நேரடியாக பூட்ஸ் தின்ன ஆரம்பிக்கும் நாட்களில்  பூட்ஸ்களைத் தூக்கி எறிந்து விடலாம் என்றுதான் கழற்றுவான். ஆனாலும், முடிச்சுகளை அவிழ்க்க முடியாமல் மீண்டும் மாட்டிக் கொள்வான். 


இளங்கோ கிருஷ்ணனின் இக்கவிதை கூரான கற்கள் நிரம்பிய பாதையில் நடந்து போகும்போது வைக்கும் ஒவ்வொரு அடியும் உருவாக்கும் வலியைத் தருகிறது.



பூட்ஸ் அணிந்த சிறுமி 



எவ்வளவு நேரமாய் அந்தச் சிறுமி 

நொண்டிக்கொண்டே இருப்பாள் 

இந்த மாரிக்கால மாலைப்பொழுதொன்றின் 

சித்திரத்தை மிகக் கோரமாக்குகிறது அது 

சற்றைக்கு முன் பார்த்தேன் 

பளபளக்கும் கருப்பு பூட்ஸ் சத்தமிட 

குதிரைச்சதை மென்மையாய் அதிர 

துள்ளித் துள்ளிச் சென்று கொண்டிருந்தாள் 

- ஓட்டமும் நடையும் கலந்த நகர்தல் 

   அது பால்யத்தின் துடிப்பிற்கே சொந்தம் - 

அவளின் பூட்ஸூக்குள் சிக்கிக் கொண்டது 

சிறு கல்லோ 

மரத்துண்டோ 

இரும்புக்கட்டியோ 

கால்களை உதறி உதறி 

நடப்பதும் நிற்பதும் நொண்டுவதுமாய் 

விரல்களை உள்ளே நுழைக்கப்பார்த்தும் முடியாமல் எவ்வளவு போராட்டம் 

எவ்வளவு சிரமம் 

யாராலும் கழட்ட இயலாத 

ஒரு பூட்ஸை யார் அவளுக்கு மாட்டி விட்டது 

முடிவற்ற இந்தச்சாலையில் 

எவ்வளவு தொலைவில் இருக்கிறது 

அவள் வீடு 


( பட்சியன் சரிதம் தொகுப்பிலிருந்து ) 


" எவ்வளவு போராட்டம் ,எவ்வளவு சிரமம் யாராலும் கழட்ட இயலாத ஒரு பூட்ஸை " கழட்ட இயலாத பூட்ஸ் எது ? முடிவற்ற அந்த சாலையில் அவள் நடந்து கொண்டேதான் இருக்கிறாள். வீடு வருமா என்று ஒவ்வொரு வீடாகப் பார்த்துக் கொண்டே நடக்கிறாள். அவளைப் பின்தொடரும் நம் கால்களிலும் வலிக்க வலிக்க பூட்ஸ்களை மாட்டி விடுகிறது இக்கவிதை. 


கவிஞர் : இளங்கோ கிருஷ்ணன் 


கவிதைத் தொகுப்புகள் : 


1. காயசண்டிகை 

2. பட்சியன் சரிதம் 

3. பஷீருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும் 

4. வியனுலகு வதியும் பெருமலர்


Comments