7.பூத்துத் தளும்பும் கற்பக மரங்களின் காடு -- சபரிநாதன் கவிதைகள் குறித்து

 











அன்று சித்திரை முழுநிலவு நாள். அம்மாவின் சொந்த ஊர் திருவிழாவுக்குச் சென்று விட்டுத் திரும்புவதற்குள், எங்கள் ஊருக்கான கடைசிப் பேருந்தை தவறவிட்டிருந்தோம். ஐந்து கிலோ மீட்டர்தான் என்பதனால் அக்காவின் கையைப் பிடித்தபடி நானும், அம்மாவுடன் இன்னும் ஐந்து பேரும் நடக்க ஆரம்பித்தோம். பாடல்களாலும் கதைகளாலும் இருபுறமுமிருந்த வயல்களைக் கடந்தபடி நடந்து கொண்டிருந்தோம். இரண்டு ஊரின் எல்லைகளையும் பிரித்தபடி ஓடிக் கொண்டிருக்கும் கண்ணணாற்றை நெருங்கியதும் பயத்தில் கண்ணை மூடிக்கொண்டு அக்காவின் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டேன். ஆற்றுப்பாலத்திலிருந்து மூன்று வயல்களைக் கடந்தால் சுடுகாடு வந்துவிடும். நெற்கதிர் தோறும் பொங்கிக் கொண்டிருந்தது  நிலவின் ஒளி  .  ஆற்றுப் பாலத்தில் இளைப்பாறுவதற்காக நின்ற போது அக்கா  "கண்ணைத் திறந்து பாருடா! "என்றாள். எங்கிருந்தோ வந்த கருமேகக்கூட்டம் திடீரென்று நிலவை மறைக்க அவ்விடமெங்கும் சன்னமான ஒளியுடன்  இருள் சூழ ஆரம்பித்தது.  குடும்பம் குடும்பமாக மின்மினிகள் வயல்களில் தோன்ற ஆரம்பித்து சாலையோரங்களில் இருந்த  மரங்களுக்குப் பறந்து கொண்டிருந்தன. அக்காவின் தலைக்கு மேலேயும், என்னைச் சுற்றிலும் மின்மினிகள்."அக்கா எப்போதும்

மின்மினிகளாயிரம் சூழவே வருவாள்.... " என்பாரே வெய்யில் ஒரு கவிதையில், அது போன்ற ஒளித்தருணம். ஒரு மின்மினியைப் பிடித்து விட்டேன். அதனுடன் பேசுவதற்குள் தட்டிவிட்டாள் அக்கா. சுடுகாட்டைக் கடந்து சென்று கொண்டிருத்தோம். சில வயல்களைத் தாண்டி இருந்த சுடுகாட்டில் புகையாகவும்,  தீயின் நாவுகளாகவும் எரிந்து கொண்டிருந்தவர் சின்னச் சின்ன துகள்களாக மின்னி மின்னி மறைந்து கொண்டிருந்தார்.எலும்பாக எஞ்சியவரை அவ்வப்போது அடித்துக் கொண்டிருந்த 

ஒலி மட்டும் வெகுநேரமாகக் கேட்டுக் கொண்டிருந்தது.மின்மினிகள் ஒளியிலிருந்து இருளுக்கும், இருளிலிருந்தும் ஒளிக்குமென, வெளியில் தீராது விளையாடிக் கொண்டே இருந்தன. 



சபரிநாதன் கவிதையில் வரும் மின்மினி வெறும் மின்மினியாக மட்டுமில்லாமல் உள்நுழைந்தும் பல்லுருவங் கொண்டு அலைய ஆரம்பிக்கிறது.




மின்மினியே... 



யார் தொட்டு எழுப்பியது உன்னை 

எந்தக் கரம் உனக்கு பார்வை தந்தது

எவ்வுடல் நீங்கிப் போகிறாய் 

எவ்வுடல் நோக்கிப் பாய்கிறாய் 

கனவா நனவா கருத்த வெட்ட வெளியில் 

எதை நினைவு கூர்கிறாய் 

எதை மறக்கிறாய் 

எதை நினைவு கூர்கிறாய் 

எதை மறக்கிறாய் 

எதை நினைவு கூர்கிறாய் 

எதை மறக்கிறாய் 

எத்தனை யுகங்கள் இருட்டில் அமர்ந்திருந்தாய் கண்ணே ஊமையாய் 

பின் எத்தனை நூற்றாண்டு காய்ச்சலோடு சுருண்டு கிடந்தாய் நிலத்தடியில் 



          ( வால் தொகுப்பிலிருந்து ) 



"எதை நினைவு கூர்கிறாய் எதை மறக்கிறாய்"  மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன். லைட் சுவிட்சை திறப்பதும் மூடுவதும், இதயம் சுருங்குவதும் விரிவதும், பிரிட்ஜ் கதவைத் திறப்பதும் மூடுவதும், ஆற்றுத்தண்ணீரை அள்ளுவதும் விடுவதும், மலர்கள் மலர்வதும் கூம்புவதுமென ஆயிரமாயிரமாக விரிகிறது கனவு. சபரிநாதன்  தொட்டு எழுப்பிய பின்னர்,  உறங்காத வரம் வாங்கி, அலைந்து கொண்டிருக்கிறது அழியாத மின்மினியாகிய இக்கவிதை. 



🔘🔘🔘 



வயிற்றுக்குள் இருக்கும் போது என்னென்ன செய்தேனென்று அடிக்கடி கேட்பான் அவனது அம்மாவிடம். முப்பது வயதான மகனிடம் என்ன சொல்லுவாள் அம்மா. "ஆமாம் !போடா" வெனச் சொல்லி வெட்கத்தில் தப்பிப்பாள் . விடாமல் , பாட்டியிடம் அம்மாவின் வயிற்றுக்குள் இவனிருந்த பேறு கால கதையைக் கேட்பான். பாட்டியும் ஏதோ சொல்வாள். " ஆட்டுக்குட்டிகள் தாவும் மாமர நிழலில்தான் அம்மா பெரும்பாலும் அமர்ந்திருப்பாளாம். கருத்தரித்த பிறகும் கூட வயல் வேலைக்குச் செல்வாளாம். கால்களின் வழியே ஏறிய குளிர் உள்ளிருக்கும் உயிரை அசைத்ததோ என்னவோ அதற்குப் பிறகு செல்லவேயில்லையாம். அப்பா, அவ்வப்போது பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு வெளியூர் சென்றதால் இரவில் தாமதமாகவே வீடு திரும்புவாராம். மாதம் நெருங்குகையில் அம்மாவால் எளிதில் எழவோ உடனே அமரவோ முடியவில்லையாம். அடிக்கடி வயிற்றிலிருக்கும் குழந்தை உதைப்பதாகச் சொல்வாளாம். அப்பா இல்லாத நேரத்தில் சோர்ந்து போவாளாம். ஆனாலும் அவளது கண்கள் மட்டும் அவ்வளவு பிரகாசமாக இருக்குமாம். " அவ்வளவுதானென்று கதையை நிறுத்தி விடுவாள். தன் மனைவி கர்ப்பமுற்றிருந்த போது, வயிற்றில் கை வைத்ததும்,குழந்தை உதைக்கும். பூரிப்பில் குதிப்பான். என்ன செய்தாலும், தான் உள்ளிருந்து உதைத்த  அம்மாவின் வயிற்றை, தொட்டுப்பார்க்க முடியாது என்பதை அறிந்தவன், தன் உந்திச் சுழியைத் தொட்டுப் பார்த்துக் கொள்வான். 




சபரிநாதனின் இக்கவிதை, பார்த்தவுடன்  உருகித் தத்தளிக்க வைக்கும் வண்ணங்களால் தீட்டப்பட்ட அற்புதமான ஓவியமாக மாறியிருக்கிறது 




காற்றிலாத போதில் பூமரம் 



ஓடைக்கரையில் கர்ப்பிணி காத்திருக்கிறாள் 

எண்ணெய் பிசுபிசுக்கும் பவுடர் பூசிய முகத்தோடு 

அவள் அம்மைக்காகவா 

வீட்டுக்காரருக்காகவா, 

சுடுகுஞ்சியில்லாத பாதையில் 

நிறைவயிற்றைத் தடவுகிறாள் 

தன் குழந்தைக்காகக்  காத்திருக்கிறாளோ என்னவோ 

அதை விடத் துயரமானது 

காற்றில்லாத இப்போதில் 

பூத்துத் தளும்பும் நாட்டுவாகை மரம் 

யாராவது அவளிடம் சொல்லுங்களேன் 

கொஞ்சம் ( கொஞ்சம் தான் ) உன்னி 

அந்தத் தாழ்கொப்பை உலுக்குமாறு

யாராவது சொல்லுங்களேன் 

நான் அந்தக் குழந்தையிடம் சொல்வேன் 

எத்தனை துடிக்கும் மஞ்சள் மலர்களுக்குக் கீழே அது பிறந்தது என்று 



    ( வால் தொகுப்பிலிருந்து ) 




" அதை விடத் துயரமானது காற்றிலாத இப்போதில் பூத்துத் தளும்பும் நாட்டுவாகை மரம் " காற்று வரும் வரைக்கும் பூத்துத் தளும்பும் மரம் காத்திருக்க முடியுமா. யாராவது சொல்லுங்களேன். வாசிக்கும் போதெல்லாம் தளும்ப வைக்கும் கவிதை. நகர முடியாமல் உறைய வைக்கும் வரிகளில் அமர்ந்திருப்பவர்களின் மீது  விடாது கொட்டிக் கொண்டே இருக்கின்றன வாகைப் பூக்கள். 



🔘🔘🔘 



வெள்ளியங்கிரி மலையில் ஏறுவதற்காக மார்கழிக் குளிரில், அதிகாலை நான்கு மணிக்கு அடிவாரத்தில் நின்று கொண்டிருந்தோம். உடுக்கை ஒலியுடன் திருநீற்றையும் சேர்த்து உடம்புக்குள் அணிந்து கொண்டு, படிகளில் ஏறத் தொடங்கினோம். இருள் கவிந்திருந்த படிகளில் சிறிது சிறிதாக ஒளியை ஊற்றத் தொடங்கியிருந்தது சூரியன். முல்லையிலிருந்து,குறிஞ்சி எங்கு தொடங்குகிறது என்று ஆராய்ந்து கொண்டே நடந்தேன். பிரிக்க முடியாதபடி வளர்ந்து கொண்டே வந்த முல்லை சட்டென உயரத்தில் குறிஞ்சியாக மாறியிருந்தது. மேலே உயரே உச்சியிலே என்றபடி மலையின் அடுத்தடுத்த உயரங்களைத் தொட்டுக் கொண்டிருந்தோம். ஒரு இடத்தில் மலையிலிருந்து வரும் சுனைநீரைத் தேக்கி வைத்திருந்தார்கள். தண்டுவடத்தை உறைய வைக்கும் குளிர் நிரம்பிய நீருக்குள் நண்பர்கள் தள்ளி விட்டார்கள். முதலில் அலறினாலும் குளித்து முடிப்பதற்குள் சொல்லெல்லாம் உறைந்து அமிழ்ந்து அடங்கி மண்ணுக்குள் சென்றிருந்தது. புத்துணர்வு படரத் தொடங்கியது உடலெங்கும். அருகே யானை வேகமாகச் சென்ற தடங்களைக் கவனித்ததும், அச்சத்தில் மந்திரத்தை சொல்லியபடியே மேலே ஏறினோம். ஏழு மலைகளெனக் குறிப்பிடப்படும் வெள்ளியங்கிரியில் ஆறாவது மலையில் ஏறும்போது ஒவ்வொரு அடியும் கவனமாக வைக்க வேண்டியிருந்தது. சிறிது பிசகினாலும் கீழே சறுக்கி விழ வேண்டியதுதான். ஏழாவது மலையில் கோவிலை அடைந்த போது ,இரண்டு மாபெரும் பாறைகள் நின்றிருந்த இடத்தில் நுழைந்தேன். உச்சந்தலையில் பனியுருகி பெரிய துளியாக விழுந்தது. வழிபாடு முடிவடைந்து, பரவசத்துடன் பாடிக் கொண்டிருந்தவர்கள் அடுத்து 

செய்வதறியாது சுற்றிக் கொண்டிருந்தனர் .   ஆடைக்குள் புகுந்து உடுக்கை அடிக்க ஆரம்பித்தது குளிர் காற்று.தேங்காய்த் துண்டைக் கடித்தபடி பாறையொன்றில் அமர்ந்தேன்.  "பார்க்குமிடம் எங்கும் ஒரு  நீக்கமற நிறைகின்ற பரிபூரண ஆனந்தமே " தாயுமானவர் பாடல் ஒலிக்கத் தொடங்கியது. 



சபரிநாதனின் இக்கவிதை ஆனந்தத்தை 

அருளும் தவமியற்றிக் கொண்டிருக்கிறது 




தவம் 



பனி மூட்டத்தினுள் மலைகள் 

இன்னும் தீரவில்லை நித்திரை 

தூளிக்கு வெளி நீண்ட கைக்குழந்தையின் முஷ்டியென, சிச்சில முகடுகள் 

உள்நின்று வந்தருளும் வரம் ஒன்றிற்காக 

தவம் இயற்றும் இலையுதிர்மரங்கள் 

பொடிந்து நொறுங்க விண்ணோக்கி விரிந்த விரல்கள் 

மூடப்பட்ட ஆலை அதன் வதன வறுமை 

அசையும் வண்ணமலர்கள் அவை இருட்டினின்று வந்துள்ள இன்றைக்கான முறிகள் 

தோல் உரிய நுரையீரற் தேம்பலூடே மலையேறிகள் ஒவ்வொருவராய் 

அணையாது பொத்தி எடுத்துக் கொண்டு போகின்றனர் தம் சொந்த மௌனத்தை 

யாரும் கவனிக்கவில்லை, 

யதேச்சையாய் திரும்பிப் பார்க்கிறாய் 

பள்ளத்தாக்கில் வீற்றிருக்கிறது 

சோதியின் பேராதனம் 



( வால் தொகுப்பிலிருந்து ) 




" உள்நின்று வந்தருளும் வரம் ஒன்றிற்காக 

தவம் இயற்றும் இலையுதிர்மரங்கள் " மரங்களுக்கு வரம் கிடைத்து விட்டதா ? .  "அணையாது பொத்தி எடுத்துக் கொண்டு போகின்றனர் தம் சொந்த மௌனத்தை "   மலையேற்றும் சாகசத்தை செய்யும் செய்யும் கவிதை அங்கிருந்து அநாதரவாய் வேறு ஒன்றைத் தேடியலையும் பித்தை உருவாக்குகிறது. 




கவிஞர் : சபரிநாதன் 



கவிதைத் தொகுப்புகள் : 


1. களம்- காலம்-ஆட்டம் 


2. வால் 







Comments