5.தேன்யாமத்தில் நிகழும் காதலின் சிம்பொனி -- ஸ்ரீவள்ளி கவிதைகள் குறித்து

 





அதிகாலையில் சோளிங்கரில் இறங்கியபோது மிக உயரத்தில் தெரிந்தது ஆலயம். "ஆயிரத்துக்கும் மேற்பட்ட படிகளைக் கடந்துதான் உச்சியைச் சென்றடைய முடியும். ஆனால் செல்லும் வழியெல்லாம் குரங்குகள் விடாது தொல்லை தரும். கவனத்துடன் மேலே செல்லுங்கள் "என்று சொன்ன முதியவர்  குரங்குகளை விரட்டுவதற்காக கையில் குச்சியொன்றைக் கொடுத்தார். சத்தமிட்டபடி தொடர்ந்த குரங்குகளை விரட்டிக் கொண்டே ஒவ்வொரு படியாக ஏறுவது எளிதானதாக இல்லை. முன்னால் சென்று கொண்டிருப்பவர்களிடமிருந்து உணவைப் பிடுங்கிக் கொண்ட குரங்குகள் அருகிலிருந்த மரங்களில் ஏறி அவசர அவசரமாகப் பிய்த்து உண்டது பாதி வீசியது பாதியென ஓடிக் கொண்டே இருந்தன. தொலை தூரத்தில் இருந்த மாமரங்கள் சூரிய ஒளியில் துலங்க ஆரம்பித்தன. செவ்வண்ணம் பூசும் ஒளிக்காக காத்துக் கொண்டிருந்த மாங்காய்கள்  கவனிப்பவரற்று தனியாக தவம் செய்து  கொண்டிருந்தன. வியர்வையுடனும் சலிப்புடனும் ,சிறிது சிறிதாக ஏறி உச்சியை நெருங்கிக் கொண்டிருந்தேன். அப்போது  காலில் காயம்பட்டிருந்த குரங்குக்குட்டியைக் கண்டேன். கையிலிருக்கும் குச்சிக்கு அஞ்சி எதையோ கேட்டது. கொடுத்த வாழைப்பழங்களையும் உண்ணவில்லை. என்னதான் கேட்டது. மொழி புரியாது தவித்தேன். ஆலயத்தை நெருங்கி விட்டேன்.  கூட்டம் அதிகரிக்கவே நெரிசலில் குரங்குக்குட்டியின் குரல்  கேட்கவில்லை. குட்டியைப் புறக்கணித்து விட்டு உள்ளே சென்று தரிசனத்துக்காகக் காத்திருந்தேன். அப்போது எனக்குள்ளிருந்து கெஞ்சத் தொடங்கியது அந்தக் குரங்குக் குட்டி. அது அப்படி என்னதான் கேட்டிருக்கும். கேட்டதும்  அவ்வளவு எளிதில் தந்துவிடக் கூடியதுதானா அது. 


ஸ்ரீவள்ளியின் இக்கவிதை அடிவாரத்திலிருந்து உச்சிக்கு அழைத்துச் செல்லும்வரை  ஒவ்வொரு படியிலும் உருவாக்கும் பரிதவிப்பும் ஏக்கமும் 

தாள முடியாத இருக்கிறது.




நிலத்திலிருந்து சொர்க்கத்துக்கு 


நாம் சென்ற இடத்தில் 

கருத்த அடிகொண்ட வேங்கை மரங்களுமில்லை 

அவற்றின் பூக்களைத் தேடிவரும் 

கான மயில்களுமில்லை 

கார்பைட் வைக்கப்பட்ட மாம்பழங்களால் 

நிரம்பிக் கிடந்தது 

சங்கிலியால் கால்கள் கட்டப்பட்ட 

குரங்குக்குட்டி கையேந்திக் கேட்டபோது 

என்னை நான் உன்னிடம் கேட்டேன் 

இரைச்சல் ஓங்கிய சந்தையில் 

கேட்கும் திசையை யார்தான் அறிவார் 

ஆனால் உன் செவிகளின் முன் 

மண்டியிட்டிருந்த என்னை அப்போது 

வானம் ஆரத் தழுவிக்கொண்டது 

உனக்குத் தெரியுமா 


( ஸ்ரீவள்ளி கவிதைகள்  

தொகுப்பிலிருந்து ) 



"மண்டியிட்டுருந்த என்னை அப்போது வானம் ஆரத் தழுவிக் கொண்டது உனக்குத் தெரியுமா ".  கையேந்திய வேண்டுதலுக்கு நீ செவி சாய்க்கவில்லை. உன் முகமோ வேறொரு திசையிலிருந்தது. வானம் தழுவியதை கவிதையில் முடித்திருந்தாலும் நேரில் காணமுடியாததும், சொற்களால் சொல்ல முடியாததுமாக ஆக்கிவிடுகிறார் ஸ்ரீவள்ளி. 


🔘🔘🔘 


"நீ நீண்ட நிலவு உன் ஒளி புலரி வரை மங்குவதில்லை. உன்னை நம்பி வேங்கைப் பூக்கள் உதிர்ந்து கிடக்கும் பாறை அருகே தலைவனை நான் சந்திக்க இயலாது " என்று 

முழுமதியைத் திட்டுகிறாள் தலைவி. பொருள்வழிப் பிரிவில் தலைவியைப் பிரிந்து  வேற்று நாட்டில் இருக்கும் தலைவனோ "அவளுடன் இல்லாத இந்த   மாலையில் தப்பித்தவறியும் வந்து தொலைக்காதே. உயிரைப் பற்றி எரியச் செய்யாதே" என்று எச்சரிக்கிறான். தேவதச்சனின் நிலவும் நிலவுகளும் கவிதையில் " ....... தண்ணீரில் கல் எறிந்து ஒரு நிலவை ஆயிரம் நிலவுகளாக ஆக்குவோம் நாங்கள் ...." என்று வரும். பித்துப் பிடித்த

நிலவு, எங்கெல்லாம் காதலர்கள் பிரிந்திருக்கிறார்களோ அங்கெல்லாம் தனித்தனியாகச் சென்று விசிலடித்து குத்தாட்டம் போடுகிறது. வேட்கையைத் தூண்டிவிட்டு, துயரில் வழியும் கண்ணீரைச் சுண்டி எறிந்து சிரிக்கிறது. பகலில் ஒளிந்து கணக்கெடுத்துக் கொண்டு இரவில் சாட்டையை எடுத்து விளாசுகிறது. அதன் அடியிடமிருந்து தப்பிப் பிழைப்பவர்கள் மிகவும் சொற்பமே. 


நிலவைப் பிரிவின் உருவமாக்கும் ஸ்ரீவள்ளி அதன் தீராத வேட்டையைக் காண இக்கவிதை வழியே நம்மையும் அழைத்துச் செல்கிறார். 



பிரிவின் உருவம் 


நள்ளிரவில் ஆற்று வெள்ளத்தில் குதித்துத் 

தற்கொலை செய்து கொண்ட 

நிலாவை விட 

பிரிவின் உருவத்துக்குப் பொருந்துவது யார் 

மாண்டு போன நிலாவின் பிம்பம் 

வானில் பிசாசாக அலைகிறது 

அது கருத்தைப் பீடிக்கிறது 

காதலர்களைப் பீடிக்கிறது 

மேற்கில் நிதானமாய் மறையும் 

சூரியன் போலில்லை நிலா 

அது புகுந்து கொள்வது 

மனிதச் சிறார்களின் நெஞ்சங்களில் 

எப்போதுமே அப்போதுதான் பட்டகாயமாக 

வடுவாக மாறாத காயமாக 

அதை ஆற்ற 

பல்லாயிரம் பாடல்களைப்

பாடிப் பார்க்கிறார்கள் கவிஞர்கள் 

காதலைக் காதலித்தவர்கள் 

ஆனால் நிலாவுக்குச் செவியில்லை 

மாறிக்கொண்டே இருக்கும் அதன் வடிவம் 

கிறுக்குப்பிடிக்க வைக்கிறது 

நிலைகொள்ளாத வெண்பட்டு மிருக ஒளி 

இடையறாது வேட்டையாடுகிறது 

உங்களால் அதைத் தொட முடிந்திருக்கலாம் 

ஆனால் அதன் வெறியில் 

எந்த மாற்றமுமில்லை.



( ஸ்ரீவள்ளி கவிதைகள் தொகுப்பிலிருந்து ) 



வளர்ந்தும் தேய்ந்தும் ஒரு நிலையில் இல்லாது புத்தியை அலைக்கழிக்கும் நிலவைத் தவிர்த்து விட்டு எளிதில் உறங்க முடிவதில்லை. யாருடனும் பேசப்பிடிக்காமல் எதையும் சொல்லமுடியாமல் தனித்திருப்பவர்களை தேடி அலையும் நிலவின் வெண்பட்டு மிருக ஒளி  விடாது வேட்டையாடுகிறது. ஸ்ரீவள்ளியின் இக்கவிதையைப்  படித்தாலும் மீளவும் நினைக்காதிருப்பது காதலர்களுக்கும் கவிஞர்களுக்கும் நல்லதென நினைக்கிறேன். நினைத்தால் மாட்டிக்கொள்ள வேண்டியதுதான். எவ்வளவு கெஞ்சினாலும் விடாது. 



🔘🔘🔘 


திருவிழாவுக்கென வெவ்வேறு ஊர்களிலிருந்து வந்திருந்தவர்கள் நீண்ட திடலில் அங்கங்கே குழுமி உரையாடிக் கொண்டிருந்தார்கள். நள்ளிரவில் பணி முடிந்து பேருந்தில் இருந்து இறங்கிச் சென்றவனை சூழ்ந்து கிறங்கடித்தது மகிழம்பூக்களின் மணம்.  மரத்தினடியில் நின்ற போது  பானக்கத்தை ஊற்றித் தந்தார்கள். போதும் போதுமென்றாலும் விடவே இல்லை. சீம்பாலின் திரட்டை கிண்ணங்களில் வைத்த போது அடுத்த வாய்க்கு தயாராக இருந்தது நெய் ததும்பும் சர்க்கரைப் பொங்கல். வெல்லம் நுரைக்க காய்ச்சிய பாலின் நறுமணம் வேறு  எங்கிருந்தோ கசிந்து கொண்டிருக்கிறது. நடக்க நடக்க தித்திப்பு ததும்பும் பண்டங்களை ஒவ்வொருவராக எடுத்து வந்து கொண்டே இருந்தனர். இவ்வளவு சுவையை இந்த சிறிய நா தாங்குமா என்ற கேள்வியோடு அடுத்தடுத்த குழுக்களுக்கு நகர்ந்து கொண்டிருந்தான். பாடுபவர் யாருமின்றி காற்றின் மாபெரும் பரப்பில் பரந்து விரிந்து கொண்டிருந்தது  இசை. வரிகளை மட்டுமே பாடிய வாய் வெவ்வேறு இசைக்கருவிகள் சேர்ந்திசைத்து காட்டாற்று வெள்ளம்  போல நகரும் போது என்ன பாடுவதெனத் தெரியாமல் திக்கி நின்றது. சிறிது நேரத்திற்குப் பிறகு இசை  அங்கிருந்தவர்களைத் தூக்கித் தூரிகைகளாக்கி வானத்துக்கும் பூமிக்குமாகத் தீட்ட ஆரம்பித்தது. விரிந்து விரிந்து செல்லும் முடிவற்ற ஓவியத்தின் வண்ணங்களில் காணாமல் போனார்கள் தூரிகையானவர்கள். என்ன ஆனாலும் இசையை நிறுத்தக் கூடாது என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. யார் பேசினாலும் யாருக்கும் இசையாகவே கேட்டது. பேச்சு பயனற்றுப் போகவே  ஆடத் துவங்கினார்கள். அவர்களது கைகளையும் கால்களையும் எடுத்து சோழிகளைப் போல சுழற்றியது இசை. யாருக்குப் பக்கத்தில் யார் ஆடினார்கள் என்ற விழிப்புநிலை மறக்கடிக்கப்பட்டிருந்தது. இவ்வளவு இசையை இந்த சிறிய செவியும் நெஞ்சும் எங்கனம் தாங்குமென்றான்.  இசைக்கு ஏற்றவாறு கருவிகளை பெயரிட்டு  ஆய்ந்து கொண்டே வந்தவன் ஒரு கட்டத்தில் தன் பெயரும் மறந்து இசைக்குள் தொலைந்து காணாமல் போனான்.


ஸ்ரீவள்ளி இக்கவிதையில் உடலும் மனமும் தாங்கமுடியாத அளவுக்கு மாமழையெனப் பொழிகிறது இசை. தனக்குத்தானே இசையமைத்துக் கொண்டு தானாகவே பாடிக்கொள்ளும் கவிதையாக மாறியிருக்கிறது. 



தேன்யாமம் 


மரமல்லிகை மரங்கள் நிறைந்த வீதியாகக் கனவு விரிகிறது 

வாசம் அணைந்த வீட்டு மூற்றங்களில் 

ஆண்களும் பெண்களும் இடைப்பட்டவர்களும் 

வாத்தியங்களுக்கு வசப்பட்டிருக்கிறார்கள் 

குழல் அவர்களைத் தரையில் சாய்க்கிறது 

வீணை எழுப்பி உட்கார வைக்கிறது 

யாழ் அவர்களின் வியர்வையைத் துடைத்துவிடுகிறது

மேளமும் முரசும் வார்த்தைகளைக் 

கற்றுத் தருகின்றன 

உடுக்கை ஒலிக்க அவை உச்சாடனமாகின்றன 

பாதங்களைப் பூமியிலிருந்து இழுத்து 

மேலே தூக்கி மிதக்க வைக்கிறது நாதசுரம் 

கொம்பொலியின் அந்தரத்தில் 

ஓவியமென நிலைகொள்கிறார்கள் 

துடியும் கொடுகொட்டியும் 

பறையும் தண்ணுமையும் 

சுதி சுருதி தாளம் லயம் 

உடல்களுற்ற மனங்களின் 

மனங்களேயான உடல்களின் 

" ஆன்மா என்று வேறு இருக்கிறதா 

என்ன ? " 

களிப்பில் கேட்கிறது 

ஒரு மரமல்லிகை மரக்கிளையில் 

ஒரு மைனா இன்னொன்றைப் பார்த்து 

வெகுதூரத்திலிருந்து பறந்து வந்திருக்கின்றன 

இரண்டு மைனாக்கள் பார்க்கத்தான் 

இத்தனைக் காட்சியும் 

இரண்டு மைனாக்களும் சேர்ந்து கண்டதுதான் 

இந்தக் கனவும் 



( ஸ்ரீவள்ளி கவிதைகள் தொகுப்பிலிருந்து ) 




இரண்டு பொல்லாத மைனாக்கள் பார்க்கத்தான் இத்தனைக் காட்சிகளும் நிகழ்கின்றனவா. அதுவும் அவை சேர்ந்து கண்ட கனவுதானா. இக்கவிதை  உச்சந்தலையில் ஆயிரம் இதழ்கள் அவிழும் ஊற்றுண்ட பரிமளத்தின் திருவிருந்தாக மாறுகிறது . தேன்யாமத்தில் நிகழ்ந்த காதலின் சிம்பொனியைப் போல இடைவிடாது தொந்தரவு செய்கிறது. எந்த வரியைத் தொட்டு வாசித்தாலும் விரல்களில் தாவிக் கொள்ளும் இசையால் அதிர்ந்து கொண்டே இருக்கிறது உடலும் மனமும் உயிரும். 





கவிஞர் : ஸ்ரீவள்ளி 


கவிதைத் தொகுப்புகள் : 

1. பொன்கொன்றை பூக்க வந்த பேய்மழை 

2. பொல்லாத மைனாக்கள் 

3. ஸ்ரீவள்ளி கவிதைகள்

    




Comments