8.காரிருளில் கண்கட்டி அழைத்துச் செல்லும் ரோலர் கோஸ்டர் -- வேல்கண்ணன் கவிதைகள் குறித்து

 




திருவான்மியூர் கடற்கரையில், பொங்கி உடையும் அலைகளில் மனத்தைக் கரைத்தபடி அமர்ந்திருந்தேன். மாஸ்டர்  ஒருவர் தனது மகளுக்கும், மகனுக்கும் உடற்பயிற்சி வகுப்பெடுத்துக் கொண்டிருந்தார். அவரது சொடக்குகளில் பறந்த கட்டளைகள் இருவரையும் ஓடவும், தாண்டவும் வைத்துக் கொண்டிருந்தன. அரை மணி நேரத்துக்கும் மேலாக பயிற்சியில் இருந்ததால்  "போதும் மாஸ்டர்" என்று கெஞ்சினார்கள். சிறிய யோசனைக்குப் பிறகு ஓ.கே " Take rest " என்றதும் "அப்பா!" என்றழைத்துக் கொண்டே  ஓடி  அவரைக் கட்டிக் கொண்டார்கள். மாஸ்டர் அப்போது கரைந்திருந்தார். கடலுக்குச் சென்றதும் நீச்சலடிக்கத் தெரியாத மகள், கரையிலேயே அமர்ந்து கொண்டாள். அப்பாவும், மகனும் அலைகளில் தாவியும் பதுங்கியும்  விளையாடிக் கொண்டிருந்தார்கள். கரையிலிருந்த மகளை அழைத்து வந்தவர், அச்சம் போவதற்காக "கடலும் நீயும் ஒன்றுதான்.  பயந்து அதற்குள் மூழ்குவதற்கு பதிலாக பயணம் செய்வதாக நினைத்து கை கால்களை அசைத்துப் பார்  மீன்களைப் போன்ற துடுப்புகள் உனக்குக் கிடைக்கும்.  கடலுக்கு உன்னை மிகவும் பிடிக்கும் " என்றார். முதலில் பயந்து பின் வாங்கியவள், அப்பாவின் கைகளைப் பிடித்துக் கொண்டே கடலுக்குள் நுழைந்தாள். என் பாதங்களுக்கு அடியில் உள்ள மணலைக் கரைத்து உள்ளிழுத்துச் சென்ற அலை கிச்சு கிச்சு மூட்டியது. மீன் மணம் தூக்கவே படகுகளும், மீனவர்களும் நின்று கொண்டிருந்த இடம் நோக்கி நடந்து கொண்டிருந்தேன். ஒரு கனத்த பையைச் சுமந்தபடி அழுது கொண்டிருந்தார் கரையிலிருந்தவர். அவருக்கு சைகைகளால் ஏதோ சொல்லியபடி கடலுக்கு சென்றவர், வானத்தைப் பார்த்தபடி கடலுக்குள் மூழ்கி எழுந்தார். அழுகை தீரவில்லை. மீண்டும் மூழ்கி எழுந்தார். அழுகை இன்னும் அதிகரித்திருந்தது. நான் கரையிலிருப்பவருக்கும், கடலில் மூழ்குபவருக்கும் இடையே தத்தளித்துக் கொண்டிருந்தேன்.




வேல்கண்ணனின் இக்கவிதை சொல்லமுடியாத தத்தளிப்பை கடலென நிறைக்கிறது. மூழ்குவதைத் தவிர வேறு வழியில்லை.



கரைதலின் நிமித்தம் 



கடலை சமுத்திரம் என்றே சொல்வார் அப்பா 

சமுத்திரம் பற்றி பேசுவதற்கு அப்பாவிடம் கதைகள் இருந்தன

ஒருமுறையும் கால் நனைத்ததில்லை 



வலுக்கட்டாயமாக அலைகளில் நிறுத்தியதில் 

" ஆடேய்.. ஊஊஊ " என்று குதூகலித்த குழந்தையாய் 

குரல் எழுப்பி இறுகக் கைகளைப் பற்றிக் கொண்டார் 



சென்ற நிலமெங்கும் 

சமுத்திரத்தையும் பற்றிக் கொண்டே நடந்து வந்தார் 

அவ்விரவில் 

கைகளைக் கோர்த்துக் கொண்டே உறங்கினார் 


அன்றிலிருந்து கதைகளுக்குள் 

உப்புக்காற்று 

சேர்ந்து கொண்டது 


சமுத்திரக் கரையில் 

பெரியண்ணன் தோளின் பின்னே எறிய 

இரு கைகளாலும் 

பிடித்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது 

அப்பாவின் அஸ்தி கலசத்தை



( பாம்புகள் மேயும் கனவு நிலம் தொகுப்பிலிருந்து ) 




"இரு கைகளாலும் பிடித்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது அப்பாவின் அஸ்தி கலசத்தை ". அஸ்தியிலிருப்பதும் அப்பாதானே, கடலில் கலந்த பிறகு கடல் நீரை முகர்ந்து பார்க்கும் தோறும் தோன்றுவது அவர் முகம் தானே. உப்புக்காற்றின் தீராத கதைகளை கடல் சொல்லிக் கொண்டேதான் இருக்கப் போகிறது. அப்பா அலைகளில் வந்து கால் நனைத்துச் செல்வார்தானே. எளிய உப்புப் பரல்களுக்குள்,கடலின் ஆழம் உறைந்திருப்பது போன்று  இக்கவிதை  கண்ணீரின் உப்பு, காற்றுடன் கலந்து உருவாக்கும் தீராத கதைகளை வாசித்துக் கொண்டே இருக்கிறது.



🔘🔘🔘




தூங்கப் பிடிக்காமல்  நள்ளிரவு ஒரு மணிக்கு வீட்டு வாசற்படியில் அமர்ந்திருந்தாள்.  அழுது கொண்டே இருந்தவள், காலையில் கணவன் கொட்டிச் சென்ற,  சுடுசொற்களை மீண்டும் மீண்டும் மனதின் தட்டில் பரிமாறிக் கொண்டிருந்தாள். கொதிக்கும் தட்டுகள் பெருகிக் கொண்டே இருந்தன. வைக்கும் தோறும் வளர்ந்து கொண்டே இருந்த  வாக்கியங்களின் கழுத்தைத் திருகி வீதியில் எறியப் பார்த்தாள். மயங்கியது போன்று நடித்தவை  மீண்டும் விழித்துக் கொள்ள ஆரம்பித்தன. கொந்தளிப்பில் தன்னிலை இழந்தது கடல். விசில் ஊதியபடி சைக்கிளில் சென்ற கூர்க்கா இரவு வணக்கம் சொன்னதை கவனிக்கவே இல்லை. கொதிக்கும் சொற்கள்  மூளையிலிருந்து உடலெங்கும் பாய்ந்தோட ஆரம்பித்தன. ரத்தம் அலறிக் கொண்டிருந்த போது, அரவணைக்க யாருமற்ற தனிமை, இரவு மிருகத்தை இன்னும் மூர்க்கமாக அவள் மீது மோதவிட்டுக் கொண்டிருந்தது. வீட்டுக்குள் செல்வதும் மீளவும் வந்து தெருவை வெறிப்பதுமென நின்று கொண்டிருந்தாள்.காலையில் திட்டியதை நினைத்துக் கொண்டவனுக்கு, திடீரென விழிப்பு வந்தது ரயிலில். அவளை அழைத்து மன்னிப்பு கேட்பதற்காக தொடர்ந்து போன் செய்தபடியே இருந்தான். ஒவ்வொரு முறையும் கட் செய்தாள். பதினைந்து தடவைக்கு மேல் அவனுக்கும் பொறுமை இல்லை. அதற்குப் பிறகு அழைக்கவில்லை. நாற்பத்து ஆறு குறுஞ்செய்திகள் "Extremely sorry " என்பதைச் சுமந்தபடி குவிந்திருந்தன. தெருவின் கடைசியில் அவன் வந்து கொண்டிருந்தான்.  நாய் குரைக்கும் ஒலி கேட்டு கவனித்தவள், அழுதபடியே உள்சென்று வேகமாக கதவைச் சாத்தினாள்.தாழ்ப்பாள் போடுவதற்காக சென்ற விரல்கள் தயங்கி அந்தரத்தில் நின்றன. 



திகிலடையும் நெஞ்சைத் தடவிக் கொடுப்பது போன்று இருக்கும் வேல்கண்ணனின் இக்கவிதை அடுத்தடுத்த தருணங்களில் ரோலர் கோஸ்டர் பயணத்துக்குள் நம்மைத் தள்ளுகிறது.



வழிகளை மாற்றிக் கொள்பவன் 



மின்கம்பத்தின் கீழ் நிற்கும் இளைஞன் 

மிக நளினமாக உடையணிந்திருந்தான் 

சில நிமிடங்கள் 

அவனையே பார்த்துக் கொண்டிருக்கும் 

என்னை மட்டுமல்ல 

எதையுமே கவனித்ததாகத் தெரியவில்லை 




வலுக்கட்டாயமாகப் 

பார்வையைப் பிடுங்கிக் கொண்டு 

அவனைக் கடந்து தெருமுனையிலிருக்கும் 

தேநீர் விடுதிக்குச் சென்றேன் 



சில நிமிடங்களில் 

அவன் நின்ற திசையிலிருந்து 

வந்த ஒருவர் 

" அந்தா அங்க பஸ்ஸுக்கு 

குறுக்கால குதிச்சுட்டான்பா 

ஸ்பாட் அவுட் ..ச்ச்.. சின்ன வயசுப்பய " 

அவனாக இருக்காது என்றாலும்

திரும்பி அவ்வழிச் செல்லவில்லை 



தினமும் இதே நேரத்தில்  இவ்வழி கடப்பேன் 

இன்று

அம்மாடி வீட்டுப் பெண் 

என்னைப் பார்க்கிறாள் என்பதில் உற்சாகமானேன் 

நேற்றுவரை நான் மட்டுமே 

அவளைப் பார்த்திருந்தேன் 



மாலை திரும்பும்போது 

அந்த வீட்டில் கூட்டமாக இருந்தது 

விசாரித்ததில் 

பெண்ணொருத்தி  தூக்கிட்டுக் கொண்டாளாம் 

அவளாக இருக்காது என்றாலும்

அன்றிலிருந்து  

அவ்வழிச் செல்லவில்லை 



எல்லா வழிகளிலும் 

துயரம் நடந்து கொண்டே இருக்கிறது 

நானும் துயரங்களைத் 

தூக்கிச்  சுமப்பவனாகவே இருக்கிறேன் 



( பாம்புகள் மேயும் கனவுநிலம் தொகுப்பிலிருந்து ) 



"எல்லா வழிகளிலும் துயரம் நடந்து கொண்டே இருக்கிறது". கேள்விப்படும் விபத்துகளில் இறந்தவர் நமக்குத் தெரிந்தவராக இருக்கக் கூடாது என்ற பரிதவிப்பு ஒவ்வொரு நாளும் தோளில் கனக்கிறது. "அவளாக இருக்காது என்றாலும் அன்றிலிருந்து அவ்வழிச் செல்லவில்லை ". அவ்வழியை நிரந்தரமாக தவிர்க்க முடியாது. தற்காலிகமாக நான் வேறு வழியில் செல்ல ஆரம்பிக்கிறேன். ஒளிந்து செல்லும் புதுவழியில் கால்களைப் பிடித்து இழுக்கும் துயரத்தை தூக்கிச் சுமந்து கொண்டு நடக்கிறேன். தூக்கி வைத்திருக்கும் துயரம், நடந்து செல்லும் துயரங்களைப் பார்த்து பாடும் பாடலும் அத்தனை துயரமாக இருக்கிறது. துயர் சூழ் உலகில் தனித்த பாதைகளை உருவாக்குவது அத்தனை எளிதல்ல என்கிறது இக்கவிதை. 



🔘🔘🔘 



சர்வதேசப் பத்திரிக்கையொன்றில் வேலைக்குச் சேர்ந்திருந்த அவனுக்கு முதன்முதலாக அளிக்கப்பட்ட பணியே போர் உக்கிரமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் அந்நாட்டிலிருந்து உடனுக்குடன் புகைப்படங்களை எடுத்து அனுப்ப வேண்டியதுதான். எங்கெல்லாம் குண்டுகள்  வீசப்பட்டதோ, எங்கெல்லாம் கட்டிடங்களும் வீடுகளும் பற்றியெறிந்ததோ, எங்கெல்லாம் மரணத்தின் ஓலம் காற்றைக் கனக்கச் செய்ததோ,  அங்கெல்லாம் ஓடிக் கொண்டே இருந்தான். புகைப்படங்களை படபடவென்று சுட்டுத்தள்ளியபடியே இருந்தது அவனது கேமிரா. உயிருக்கு எந்த வகையிலும் உத்தரவாதமில்லை. எப்போது வேண்டுமானாலும் ஏதேனும் ஒரு தோட்டா அவனைச் சுட்டுவிடுவதற்கான சாத்தியங்களே அதிகமாக இருந்தன. வானிலிருந்து பறவைகளை நிர்ந்தரமாக அகற்றிய போர் விமானங்கள் காற்றைக் கிழித்துக் கொண்டு சென்றன. கர்ப்பிணிகள் வயிற்றைப் பிடித்துக் கொண்டு கதறினார்கள். இடைவிடாத குண்டு மழையில் அவனிருந்த பகுதியில் எல்லாமும் பற்றி எரியத் தொடங்கின, கூட்டம் கூட்டமாக மக்கள் பிணமாகிக் கொண்டிருந்தார்கள்.  பள்ளிக்கூடத்தின் மீதும் குண்டுவீசப்பட்டது. மண்ணில் கால்களை உதைத்தபடி அழுது அரற்றினான்.எங்கும் புகை மூட்டம். உடல் சிதறிக் கிடந்த குழந்தைகளை புகைப்படம் எடுத்து அனுப்புமாறு அவனுக்கு செய்தி அனுப்பியிருந்தார்கள். அதற்குபதில்  செத்து விடுவதே மேலென்று தெருவுக்குள் சென்றான். வெள்ளைக் கொடிக்கம்பங்கள் ரத்தச் சகதியில் வீழ்ந்திருந்தன. 



வேல்கண்ணனின் இக்கவிதை எதனாலும் நிரப்ப முடியாத ஆழமான வெறுமையை வாசிப்பவருக்குக் கொடுத்துச் செல்கிறது.



ஓர் இரவு ஓரு பகல் ஒரு வீடு




இரவு உதிர்ந்து கொண்டிருந்தது

நிலமிழந்தவர்களின் முகாமிலிருந்த 

இறந்தவர்களைச் சுமந்து செல்லும் 

வாகனமொன்றில் 

நட்சத்திரங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன 




அதில் எண் வரிசையைப் பதித்துக்கொண்டிருந்தார் 

XXX இலச்சினை பதித்த அதிகாரி 

அனைவருக்குமான வானத்தை அகற்றுவதே 

அவருக்கு இடப்பட்ட கட்டளை 

நிலவை மறைக்க குழந்தைகளைப் பாடக் 

கட்டளையிட்டு இருந்தார் 

ஆணவத்தின் பிடியுண்ட சொற்களை

அறியாத குழந்தைகள் 

பாடுங்கள் என்றவுடனே 

நடனமிட்டுப் பாடத் தொடங்கி விட்டார்கள் 

நிலவற்ற பறவைகள் மறையத் தொடங்கின 

அவரால் ஒரு நாளும் முழு இரவை 

சேகரிக்க முடியவில்லை 



பகல் கரையத் தொடங்குகிறது 

செயற்கைக் கருமுட்டைத் தயாரிக்கும் 

நிறுவனத்தின் குளிர்ப்பெட்டி இணைக்கப்பட்ட 

கண்ணாடிக் குடுவையில்

வெயிலை  அள்ளிக் கொண்டிருந்தார்கள் 


பரப்பிக் கிடந்த வெக்கையை 

நெகிழியால் வழித்துக் கொண்டிருந்தார் 

XXY இலச்சினை  தரித்த அதிகாரி 

அனைவருக்குமான நிலத்தைச் சுருட்டிக் கொள்வதே 

அவருக்கு இடப்பட்ட கட்டளை

இலை உதிர்த்த மரங்கள் 


அணுக்கழிவால்  கரையொதுங்கிய 

மீனின் கண்களாய் வெறித்துக் கொண்டிருந்தன

அவரால் எந்நாளும் ஒரு பகலை சேகரிக்க முடியவில்லை 



புத்தனின் விரல்நுனி  கதிரொளியால் மினுக்குகிறது 

மண்டிக்கிடந்த இருள் உதிரும் நள்ளிரவு

ஆதித்தாய் கூரையற்ற

ஒரு வீட்டினை நெய்து கொண்டிருக்கிறார் 



அரூபக்காலக் காட்சிகள்  சிதிலமின்றி 

நீரோவியங்களாய் 

ஒப்புக் கொடுத்து விட்டு

கடலலைகள்  திரும்பிச் செல்கின்றன 



( பாம்புகள் மேயும் கனவுநிலம் தொகுப்பிலிருந்து ) 




இன்றும் எங்காவது ஒரு நாட்டில் போர் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. போரே மனித குலத்துக்கு எதிரான குற்றம்தான் இதில் போர்க்குற்றங்களை தனியாக விசாரிக்கும் அமைப்பு இருப்பதை என்ன சொல்வது. செய்திகளில் இறந்தவர்கள் எத்தனை பேர் என்ற கணக்கீட்டை எல்லோரும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். சிறிது நேரம் துடித்துவிட்டு அடுத்த சேனலுக்கு நகரும் வண்ணம் வேகமெடுத்திருக்கிறது வாழ்க்கை. அகதி ஒருவனின் கூடாரத்துக்குள் இருப்பது அவனது சொந்த ஊர்தானா அல்லது இப்போது வந்து வசிக்கும் ஊரா அவனது வாழ்வே இரண்டுக்கும் இடையில் அந்தரத்தில் தொங்குவதுதானா . " அனைவருக்குமான வானத்தை அகற்றுவதே அவரது கட்டளை ". " அனைவருக்குமான நிலத்தைச் சுருட்டிக் கொள்வதே அவருக்கான கட்டளை " வானத்தையும் நிலத்தையும் அகற்றிவிட்டால் எங்கே வசிப்பது.  போர் நிகழும் செய்தியைக் காணும் போதெல்லாம் வேல்கண்ணனின் இக்கவிதை படரத் தொடங்கிவிடுகிறது. நாம் , இலைகளை உதிர்த்த வெறும் மரங்களாக துயரத்துடன் நின்று கொண்டிருக்கிறோம்.







கவிஞர் : வேல்கண்ணன்



கவிதைத் தொகுப்புகள் : 


1. இசைக்காத இசைக்குறிப்பு 

2. பாம்புகள் மேயும் கனவு நிலம்






















Comments