வீதிக்குத்தான் வந்து கொண்டிருக்கிறது
இழுக்க முடியாத வடமோ
முடிவற்றதாக இருக்கிறது
பிரம்மாண்டமான கனமும்
விரும்பினால் மட்டுமே அசையும்
சக்கரத்தில் ஏறி எட்டிப்பார்க்கிறான்
முகத்தை மட்டும் மறைத்தபடி
ஒளிர்கிறார் உற்சவர்
முற்றிலும் புதிதாக
அவர் இருக்கவேண்டுமென
குளிர் விண்மீன்களின்
வண்ணத்தை எங்கெங்கும் பூசுகிறான்
உச்சியிலே பறக்கிறது
தங்க சரிகைகளால் நெய்த கொடி
துளி அழுக்கும் இல்லாதவாறு
கழுவிக் கொண்டே
மிகவும் நெருங்கிவிட்டதாகவும்
ஒத்திசைவுக்கு வாய்ப்பிருப்பதாகவும்
ஓதுகிறான் சக்கரங்களின் செவியில்
இந்த நாளில்
என் வீதியை நெருங்குவீர்களென
கல்வெட்டும் செதுக்கிச் செல்கிறான்
எதிர்பார்த்திராத திசையில்
பின்னோக்கி நகரத் தொடங்குகிறது
தூள் தூளாக்குவேனென்று
சுத்தியல் ஏந்தி சபதமிடுபவன்
தொடமுடியாத தூரத்தில்
அதிவேகத்தில்
ஓடிக்கொண்டிருக்கும் தேரை
கண்ணீர் மல்க வணங்குகிறான்.
-புரவி ஆகஸ்ட் 2021
Comments
Post a Comment