செகண்ட் ஷோவுக்கு ரகசியமாக செல்லும் குதிரைகள்

 


இன்னும் சில நிமிடங்களில் 

பத்து மணிக்கான 

பிரத்யேக மின் நிறுத்தம் தோன்றிவிடும் 

உள்ளே ஓடிப் புகுந்துவிட வேண்டும் 

வழியில் பிடித்திழுக்கும் தொலைவை 

உதைப்பதற்கு அவகாசமில்லை 

நண்பர்களோடு மோதி விட்டாலோ 

குரல் வெளிச்சம் பற்றிக் கொள்ளும் 

துருப்பிடித்த இரும்பு கேட் 

பலப்பல மூக்குகளை உடைத்திருக்கிறது

கதவுகளை மூடிய பிறகு  

இருளின் விரிந்த நாவுக்குள் 

திண்பண்டமாகக் கரைந்து விடலாம் 

ஒளி பரவியதும் 

தாவித்தாவி அலையும் பேருதடுகள் 

இருக்கைக்குள் 

மூடிக்கொண்டிருப்பவர்களைத் 

திகட்டத் திகட்ட முத்தமிடும் 

சிலிர்க்கும் தண்டுவடங்கள் விட்டுவிடச்சொல்லி மன்றாடும் 

சிறிது ஒளியை 

சிறிது இருளை 

மாற்றி மாற்றி 

உடலில் ஊற்றித் 

தூண்டும் விளையாட்டில் 

தொலையும் காலம் 

இன்னும் ஒரு நிமிடத்தில் வந்துவிடும் 

நிறுத்தப்படும் மின்சாரம் 

முட்டி முட்டி உடைக்கிறது இரவை 

கணைக்காமல் 

குதிரைகள் பாய்ந்து கொண்டிருக்கும் 

போர்க்களத்தை அறியாமல்  

மெயின் ஸ்விட்சை மேலேற்றுகிறார் 

புதிதாகச் சேர்ந்திருக்கும் ஆப்பரேட்டர்

வாசலில் பாய்கிறது பார் 

ஒளிவெள்ளம் 

குதிரைகளின் கண்ணெல்லாம் 

குதிரையின் கண்ணில் 

உறைந்து நிற்கிறது.


- புரவி ஆகஸ்ட். 2021


Comments