உறங்கி விழிப்பது போல் விடுப்பு
கன்வேயர் பெல்டிலிருந்து குதிக்கும் போது
தாலாட்டுக்காக
நின்று கொண்டிருக்கின்றன
நீந்தும் தூளிகள்
உறக்கத்தில் வலித்துப் பாடுகிறான்
இடையிடையே நிறுத்தும் சாட்டைக்குரல்
எவ்வளவு தேடியும்
கிடைக்கவில்லை எனும் போது
ஆழத்துக்கு இழுக்கிறது
இடுப்புக் கயிற்றில் பிணைத்திருக்கும் பத்துமாடிக் கட்டிடம்
ஒவ்வொரு ஜன்னலாகச் சென்று
அடையாள அட்டையைக் காட்டுகிறான்
"விடுப்பு நாளில்
இங்கு பிரவேசிக்க அனுமதியில்லை "
அகண்ட மணியை உலுக்குகிறார்கள்
இருக்கையை மட்டும்
பார்த்துவிட்டுச் செல்வதாகக்
கெஞ்சி நுழைகிறான்
கவிழ்ந்து கால் நீட்டுகிறது நாற்காலி
டிராயரைத் திறந்தால்
பொங்கி வழிகிறது சோற்றுப்பானை
வேகமாக மூடிக்கொள்ளும்
ரகசிய ஆவனங்களின் பீரோ
வெறும் சாவிகளை வைத்துக் கொண்டு என்ன செய்வாயெனக் கிறீச்சிடுகிறது
"ஒரே ஒரு நாள்தானே "என்கிறான்
கையசைக்கிறார்கள்
தூளி விட்டிறங்கும் குழந்தைகள்
ஓடிக்கொண்டிருக்கும் ரயிலை
பத்துமாடிக் கட்டிடத்துடன்
ஒட்ட வைத்துப் பற்ற வைக்கிறான்
பொறிபறக்கும் நெருப்பில்
பரபரப்புடன்
புதிதாகப் பிறக்கிறான் ஊழியன்.
Comments
Post a Comment