கலகலகல...
சிறிய கேலிதான்
முக்கியமான கட்டத்தில்
புயலாகித் தூக்கியடித்தது
மலையைப் புரட்டும் மல்லனின்
பாவனையிலிருந்தவனை
சரமாரியாய் முத்தமிட்டன
பேரிடியும் பெருமழையும்
நெகிழ்ந்து நழுவும் தலையை
அவமானத்தின் கழுத்தில்
பொருத்திவிடத் துடித்தான்
சிறிதும் நாணாமல்
அது அவளைத் தேடி ஓடியது
ஒரே உதை
சுவர்கள் உடையும் பேரொலியில்
இறுகிக்கிடந்த பாகங்களைக்
கழற்றி வைத்துவிட்டு
கேலியை உமிழ்ந்தது பிரபஞ்சம்
கூடல்
இனி சாத்தியமில்லையெனவும்
அவமானத்தின் சுவடுகள்
அழிவதில்லையெனவும்
சபதம் பூண்டான்
ஒரேயொரு இரவில்
இதற்கு முந்தைய
எல்லாக் கூடல்களின் நினைவிலும்
சிரிப்பின் கொலுசைக் கட்டிவிட்டிருந்தாள்
எப்போது தீண்டினாலும்
கலகலகலகல...
பேசும் புதிய சக்தி. ஆகஸ்ட் 2021
Comments
Post a Comment