கிணற்றில் குதித்து விளையாடுதல்



மாமரத்தடியில்
புளிய விதைகளை விழுங்கி
பல்லாங்குழியைத் தோண்டி எடுக்கிறேன்
கிடாவெட்டு முடிந்து
வளையல்கள் ஒலிக்க அமர்கிறாள் அக்கா
அவளிரு பிள்ளைகள்
கைகளைப் பிடித்து இழுக்க
அந்தரத்தில் மிதக்கிறாள்.

பல்லாங்குழியை
மேலே சுழல விடுகிறேன்
கிச்சுகிச்சு மூட்டுகிறவள்
நான் துப்பும் விதைகளை
குழிகளில் நிரப்பும் போது
கிணறாக மாறுகின்றன
ஒவ்வொன்றும்.

கிணறுகளில் விளையாடும் போது
திருமணமான புதிதில்
வீட்டுக்கு வரும் அக்கா இருக்கிறாள்.
எனக்குத் தெரியாமல் அவளும்
அவளுக்குத் தெரியாமல் நானும்
புளிய விதைகளை
ஒளித்து வைக்கிறோம்
எவ்வளவு இருக்கிறது என்றால்
எப்போதும்
நிறைய நிறைய
என்று சொல்லிக் கொள்கிறோம்.

இன்னும் ஆழத்தில்
வயதுக்கு வந்த பிறகு
விளையாட வராத அக்கா நிற்கிறாள்.
காதிலிருந்து
தோடுகளைக் கழற்றி எறிகிறாள்
அவிழ்த்து எறிந்த
கொலுசின் முத்துகளை வைத்து
விளையாடுகிறேன்.

ஒவ்வொரு கிணற்றிலும்
குழந்தைகள் அழுகின்ற ஓசை வருகிறது
அக்காவுக்கு
சொல்வதற்கு ஏதுமில்லை போல
சைகைகளால் நெற்றியில் முத்தமிட்டபடி
ரயிலில் ஏறிச் செல்கிறாள்.
நான் மீண்டும்
ஒவ்வொரு கிணற்றிலும்
விழுந்து
ஏறி
பல்லாங்குழி ஆட ஆரம்பிக்கிறேன்.


வாசகசாலை டிசம்பர் 2019 

Comments