அலகிலாத் துவைத்தல்




வாஷிங் மிஷினுக்குள்
ஆடைகளைத்
திணித்துக் கொண்டிருந்தேன்.
முதுகில் யாரோ கும்முவது போலிருந்தது
உள்ளே இருந்து
அம்மாவின் கைகள் இழுக்க
நுரைத்துப் பொங்கும் கடலில்
ஆடைகளின் மீதமர்ந்து
மரணக்கிணறு சாகசங்களை ஆரம்பித்தேன்.
பார்வையாளர்கள்
ஆடைகளை வீசிக் கொண்டே இருந்தார்கள்
என் முதுகில் அமர்ந்து கும்மியபடியே
விசிலடித்துக் கொண்டிருந்தாள் அம்மா
அவள்
இடது பக்க ஆறு கைகளில்
வாங்கிய ஆடைகள்
கண் சிமிட்டுவதற்குள்
வலது பக்க ஆறு கைகளில்
புதிதாக இருந்தன
சுழலும் கடலை நிறுத்தி விடுங்கள்
என நான் கெஞ்சினேன்
உடுக்கை ஒலிக்கத் தொடங்கியதும்
அவள் உற்சாகமாக
அலகிலாத் துவைத்தல்
ஆடிக் கொண்டிருந்தாள்
உப்பு அரித்த
அவளின் நீண்ட கைரேகைகளில்
பூமியின் அழுக்கெல்லாம்
நதியென ஓடிக் கொண்டிருந்தது
கரைகளில் எழுந்த
துணி துவைக்கும் பேரொலி
பால்வெளியைக்
கலங்கடிக்க ஆரம்பித்தது
அம்மா சோர்வுற்றுத் தூங்கிய போது
வாஷிங் மிஷின் கதவை
உடைத்துக் கொண்டு வெளியேறினேன்
என் முதுகில் கும்முவதற்காக
மிக நீண்ட வரிசையில் காத்திருந்தவர்கள்
வா மகனே வா !
என சூழ்ந்து கொண்டனர்.


கணையாழி டிசம்பர் 2019

Comments