மலைப்பாதை




மலையைக் குடைந்து
ரயில் பாதை அமைத்த பிறகும்
"உள்ளே என்ன இருந்தது
உள்ளே என்ன இருந்தது "
என்று
ரயிலில் செல்பவர்கள் கேட்டார்கள்.
"இருள்தான் இருந்தது
உடைந்த கற்கள்தான்
வேறென்ன இருக்கமுடியும்" என்றான் வழிகாட்டி.
"முதல் கல் உடைந்த போது
மலை அழுததும்
ஒவ்வொரு கல்லும் கட்டிக் கொண்டு
மீண்டும் அழுததும்
வெடி வைத்துத் தகர்த்த போது
பள்ளத்தாக்கில் விழுந்ததும்
சிதறிய பெரிய கல்
பாதை செய்தவரின்
காலுக்கு அடியில்
கல்வெட்டாக மாறியதும்
உள்ளேதான் இருந்தன
உள்ளேதான் இருந்தன "
என்று யாரோ சொல்லிய போது
ரயில்
அடுத்த குகைக்கு
விரைந்து கொண்டிருந்தது.

சொல்வனம் டிசம்பர் 2019

Comments