அழைப்பு மணி



யார் வீட்டில்
அழைப்பு மணியை அழுத்தினாலும்
கதவைத் திறக்கும் முகம்
என்னுடையதாக மட்டுமே இருக்கிறது.

ஒவ்வொரு வீட்டிலும் நான் இருப்பது
அவர்களுக்கு பயமாக இருக்கிறது
திரும்பிச் செல்லுமாறு கூச்சலிடுகிறார்கள்
தலைகளை வருட ஆரம்பிக்கிறேன்.

சிலைகள் செய்வதற்காக வந்திருக்கிறேன்
பாறைகளைக் கொடுங்கள் என்றேன்
அவர்கள் கொண்டு வந்த தாழிகளில்
உள்நோக்கித் திறக்கின்றன கோபுரங்கள்.

தாழிக்குள் நுழைந்து நீந்துகிறேன்
கடல் போல விரியும் மொழி
நிறமற்ற அடிமண்ணைக் காட்டுகிறது
அதற்குள்ளிருந்து அசையும் கரங்கள்
வெவ்வேறு நிறங்களில் கோர்த்திருக்கின்றன.

ஓவியம் வரையச் செல்லும் பாதையில்
நீரற்ற வயல்களுக்கடியில்
மின்சாரம் செல்லும் கம்பிகளைக் கவ்விய
எலிகள் புதைக்கப்பட்ட நாற்றம் வீசுகிறது
அறுவடையற்ற நிலத்தில்
ஓவியம் நன்கு வருமென்கிறேன்

குகைக்குள் என்னை இழுத்துச் செல்கிறார்கள்
தேன்கூடு கலைந்த பாறைக்குள்
மின்மினிகள் தடவிப்பார்க்கும்
தலைகள் மறைந்த ஓவியங்களில்
மணக்கிறது மூலிகைச்சாறு

உங்கள் குழந்தையாக
இங்கேயே என்னால் வளரமுடியும் என்கிறேன்.
கருப்பைகளின் ஆழத்தில்
தொப்பூழ்க்கொடி வழியே வரும் மூச்சில்
ஆடிக்கொண்டே வரும் எழுத்துகள்
கடலை நினைவுபடுத்தவே
அலறி வெளியேறுகிறேன்


நடு இணை இதழ் ஆடி -2019
              ( பிரான்ஸ் )

Comments