பசியற்ற கடல்



குட்டி மீனொன்று
காத்திருக்கிறது தொட்டிக்குள்
வேடிக்கை பார்க்கும் கண்கள் உணவுத்துகள்கள் நோக்கி நகருமென

காற்று இறைக்கும் மனிதனின் வயிற்றுக்குள் நுழைந்து
வெளியேறும் அதன் லாவகம் குட்டிக்கரணமடிக்கும் சிறுமியைப் போல வியப்பை அருந்துகிறது

அதன் குறுகிய கண்களை
தங்க நிறத்தில் மின்னும் செதில்களை காற்று குடிக்கும் பிஞ்சு வாயை திசைகாட்டி ஏமாற்றும் வால் துண்டை வெளியே சிலாகிக்கிறார்கள்

அடர்ந்திருக்கும் பாசிக்குள் உள்ள குகையில் மூழ்குகிறது குட்டி மீன்               
பதற்றத்தில் கைவிரல்கள் நீண்டு கண்ணாடிக்குள் நுழைய முடியாமல் உடைந்து பின்வாங்குகின்றன

காணாமல் போன குட்டி மீனுக்காக தொட்டியைச் சுற்றிலும் ஏற்றப்படுகின்றன தேடும் விளக்குகள். அது
ஒளியில் திணறி வெளியேறும் போது கண்களை மூடிக் கொள்கிறது

பாசிக்குள் புகுந்ததால்
அதன் கண்கள் பழுதுற்றதென பார்ப்பவர் யாருமின்றி
மீண்டும் தனித்து விடப்படுகிறது தொட்டி.

சிறிது நேரத்தில்
மெதுவாகத் திறக்கும்
குட்டி மீனின் கண்களைப் பார்த்ததும் திரும்பவும் வருகிற குழந்தை
அதன் வயிற்றைத் தடவுகிறது.
அப்போது
அது பசியற்ற கடலில்
நீந்த ஆரம்பிக்கிறது.

வாசகசாலை இணைய தளம்
              ஜூலை -2019

Comments