நீருக்குள் வளரும் மலர்

நீருக்குள் மூழ்கி வளரும் தாமரையை
வலுக்கட்டாயமாக மேலே இழுத்தேன்
தண்டை உடைத்துக் கொண்டு
உள்ளே குதித்த பின்
அது ஏற்கனவே உருவாக்கிய பாதையில்
சுழன்று சுழன்று சென்று கொண்டிருந்தது.

பின் தொடரும் விரல்களை
முற்றிலும் புறக்கணித்தபடி
இதழ் இதழாகப் 
பிய்த்துக் கொள்ளத் தொடங்கியபின்
நிறைய நிறைய பாதைகளில்
ஆழத்திற்கு செல்ல ஆரம்பித்தது.

எந்த இதழைப் பிடித்து நிறுத்தினாலும்
நழுவும் தனிமையால் திமிறியபடியே
முகங்களை அழித்துக் கொண்டன.
விரல்களை விடவும்
இதழ்கள்
அதிகரித்துக் கொண்டே இருந்தன.

கரையில் தாமரைகளை
எளிதாகத் திருகி வீசிய விரல்கள்
உள் இதழ்களின் ஆழத்தைப் பிடிக்கமுடியாமல்
நகங்களைப் பிய்த்துக் கொண்டதால்
துள்ளிக்குதித்தன மீன்கள்

இதழ்கள்
ஆழத்திலிருந்து வெளியேறிய போது
அதற்கு
விரல்களை உண்ணும் பற்கள்
புதிதாக முளைத்திருந்தன.
தாமரையைக்
காணவே இல்லை.

கொலுசு
ஜூலை -2019

Comments