19. பேறுகால வலி மறந்து பாலூறச் செய்யும் பசியிலழும் சிசுவின் கண்ணீர்---நேசமித்ரன் கவிதைகள் குறித்து

 






"ஆர்டிக் வட்டத்தில் உள்ள நார்வே நாட்டின் சொம்மரோயி தீவில் ஆண்டில் இரண்டரை மாத காலம் சூரியன் மறையவே மறையாது,இருபத்தி நான்கு மணி நேரமும் பகலாகவே இருக்கும் " அப்பா சொன்னதை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்த மகனை அழைத்தாள் அம்மா. " நாளைக்கு வரலாறுதான். புவியியல் இல்லை. ஒழுங்காக சுதந்திர போராட்டத்தை படி " யாரிடமோ சொல்ல விரும்பியது போல அவனிடம் சொன்னாள். ஊஞ்சலில் நகரமுடியாமல் இருபுறத்தையும் தொட்டு தொட்டு செல்லும் பொம்மையைப் போல அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையே அவன் ஆட்டப்பட்டுக் கொண்டிருந்தான். ஐந்தாவது படிக்கும் அவனுக்கு வாரத்தில் ஒரு நாள் மட்டுமே அப்பாவைக் காண முடியும். விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இன்னும் முடியவில்லை. சிறியவனாக இருப்பதால் அம்மாவிடம் 

இருக்கலாமெனவும், வாரத்தில் அரைநாள் அப்பாவைப் பார்க்க அனுமதிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

வழக்கறிஞர் இல்லத்தில் வழக்கமாக அவ்வாறான சந்திப்பு நிகழும். இருவரும் பல் மருத்துவர்கள். காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். காதலிக்கும் போது வானத்திலிருந்த வார்த்தைகள் திருமணத்துக்குப் பிறகு தரையிறங்கி பூமியில் உருள ஆரம்பித்தன. காரணமேதுமற்ற அன்பு கோபத்தில் ஒவ்வொன்றையும் காரணமாக்கியது. மகனுக்கு ஏழு வயதிருக்கும் போது, அதே வார்த்தைகள் பாதாளத்தில் முடியைப் பிடித்துக் கொண்டு சண்டையிட ஆரம்பித்தன. நடுவில் இருக்கும் சிறுவனை அவர்கள் எறியும் ஒவ்வொரு சொல்லும் வெட்டிக் கொண்டே இருந்தது. எங்கு செல்வதென்றாலும் "அம்மாவுடன் வா ! அப்பாவுடன் வா! " .சேர்ந்து செல்லவே முடியாது. கப்பல்கள் துறைமுகத்தில் இடைவிடாது  கொணர்ந்து சேர்க்கும் பொருட்களைப் போல அவனுக்கென வாங்கி கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். முதலில் சத்தமாக சண்டை போட்டவர்கள், முறைத்தபடியே பார்த்துக் கொண்டார்கள். பிறகு வெவ்வேறு வீடுகளுக்குச் செல்வது என்று முடிவெடுத்த பின்பு பார்த்துக் கொள்வதையே தவிர்த்தனர். அவனையும் சரி பாதியாக பிய்த்துக் கொண்டு போய்விடுவோர்களோ என பயந்தான். ஒவ்வொரு ஞாயிறும் சந்தித்தால், அவனை அவரது அப்பா வசியப்படுத்தி விடுவாரோ என பயந்தாள் அம்மா. அவரும் பதினான்கு வயதான பிறகு அப்பாவுடன் இருக்கலாம் என்றார். ஞாயிற்று கிழமைகளில் அவள் கொந்தளித்த படியே அமர்ந்திருப்பாள். சாக்லேட் பாக்ஸுடன் அவனை மடியில் அமர்த்திக் கொஞ்சும் அப்பாவிடம் " நீங்கள்தான் வேண்டுமென்பான் " . "ம்ம்ம். வேண்டாம்.ஏற்கனவே சொத்தைப் பல் வந்து விட்டது . அதிகரித்தால் பல்லை பிடுங்கித்தான் ஆக வேண்டும் வேறு வழியில்லை " என எச்சரித்தாள். பேசிய போது அவளது அழகான பற்களை கவனித்து தன்னை மறந்தவர், கோபமான கண்களை பார்த்ததும் பின்வாங்கினார். மகனை இறக்கி விட்டார். அம்மாவும் அப்பாவும் அவனை தாயக்கட்டையாக்கி உருட்டி உருட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். முடிவற்றதாக நீண்டு கொண்டே இருந்த ஆட்டத்தில் தாயக்கட்டை மிகவும் அடிவாங்கி உருண்டு கொண்டிருந்தது. 




பேசுவதில் தன்னை இழந்து பரவசமடைந்த  மனங்கள், காலம் இருந்தும் பேச தவிர்ப்பதையும் கடைசியாக பேச்சு நின்று பிரிவதையும் சொல்லும் நேசமித்ரனின் கவிதை வலிக்க வலிக்க இதயத்தில் அன்பை பாய்ச்சுகிறது.




—---------------------------------------------------------

ஒரு புதிய அன்பு 

மலரும் காலத்தில்

முதல் ரிங்கில் போன் எடுக்கப்படுகிறது 


மறுநாள் ஞாயிறு போல்

பின்னிரவு தாண்டியும் வாட்ஸ்அப்

ப்ளூ டிக்  உடனடியாக ஒளிர்கிறது 


வேறு ஒரு அழைப்பில்

இருக்கிறார் .காத்திருக்கவும் 

அல்லது பின்னர் அழைக்கவும்

என்ற குரல் செவிட்டில் அறைந்து

கதவு சாத்துவதில்லை 


ஆன்லைன் பச்சை விளக்கு எரிய

என்ன சொல்லி உரையாடலை

துவக்குவது எனத் தெரியாமல்

குட்நைட்  என்று அனுப்பி விட்டு 

அப்படியே உறங்கி விட்டேன்

என்று மறுநாள் பதில் கேட்க

வேண்டியதில்லை 


ஒரு உறவு துவங்கும் காலத்தில்

யாரும் பிசியாய் இருப்பதில்லை 


சிக்னல் கிடைக்காத மலைப் பிரதேசத்திற்கு போனாலும் 

வாய்ஸ் மெசேஜ் டெலிவரி

ஆகிவிடும் 

SMS க்கு நீங்கள் இருக்கும் 

திசைக்கு கை எட்டும் 

Phantom vibration syndrome 

வராது 


வார்த்தைகளை விட 

என் மௌனத்தை புரிந்து

கொள்பவர்கள்... - status 

வைப்பதில்லை 


எப்போதும் புதிதாய் இருக்கும்

ஒரு

அன்பை அடையும் வழி

தெரியாமல் 


கன்றுக்குட்டி போல் மண்ணைத் தின்கிறது

கோவிலுக்கு போகிற கால்கள்

சர்ச்சில் மண்டியிட்டு தப்புத் தப்பாய் 

சிலுவை போட்டுக் கொள்கின்றன

கொல்லத் தெரியாதவன் 

கையில் தோலுரிக்கப்படும் 

உடலாய் சீரழிகிறது

மூச்செல்லாம் சாம்பல் மணக்க

காத்திருக்கிறது 


ஆம் 

ஒரு

உறவு துவங்கும் காலத்தில்

யாரும் பிசியாய் இருப்பதில்லை 


—----------------------------------------------------------





எல்லாவற்றுக்கும் நேரமிருந்தது. எல்லாவற்றையும் இரண்டாவதாக்கி விட்டு ஆன்மாவில் அன்பே முதலிடத்தில் இருந்தது. அழைப்புகளுக்காக காத்திருந்து குறுஞ்செய்திகளால் இடைவிடாமல் தொட்டுக் கொண்டே இருந்தவர்களை எது விலகச் செய்கிறது ?. "ஒரு

உறவு துவங்கும் காலத்தில்

யாரும் பிசியாய் இருப்பதில்லை ". அந்த உறவுதான் பிரபஞ்சத்தில் உயிராக இருந்தது. வேறெதுவுமே தேவையில்லை. உறவின் ஆதிக்கம் உடலைத் தாண்டி மனத்துக்குள் காலடி வைக்கையில், எல்லா விலங்குகளும் விழித்துக் கொள்கின்றன. "எப்போதும் புதிதாய் இருக்கும்

ஒரு

அன்பை அடையும் வழி

தெரியாமல் 

கன்றுக்குட்டி போல் மண்ணைத் தின்கிறது". எப்போதும் புதிதாய் இருக்கும் ஒரு அன்பு சாத்தியம்தானா ? சாத்தியமாக இருக்கும் போது குழந்தைமையும் பித்து நிலையும் ஒன்றாக தோன்றுகின்றன. பேசினாலும் தவிப்பு தீராததாகவே இருக்கிறது. எதைத் தேடுகிறது அந்த புதிதாகவே இருக்க முயலும் அன்பு. அதுவே போராடித் தோற்றுப் போய் பழையதாக மாறுகிறது.  அதற்கு மேல் வாழவே பிடிக்க வில்லை. இருவருக்குள்ளும் நுழைந்து "நான் இங்குதான் புதிதாக இருந்தேன் "என்று  மன்றாடுகிறது. "இல்லை நீ பழையதாகி விட்டாய். வெளியேறுவதே நல்லது " என்பவர்கள் கதவுகளை நன்றாக அடைத்து பூட்டுகிறார்கள். நேசமித்ரன் கவிதை கடத்திச் செல்லப்பட்ட ஆடு, பிரிந்த குட்டிகளை நினைக்கும் போதெல்லாம் தாய்ப்பால் சொரிவது போன்று,  வாசிக்கும் தோறும் அன்பின் நறுமணத்தை நம் மீது பீய்ச்சுகின்றது. 






🔘🔘🔘 





சைக்கிளின் முன்புறம் அமர்ந்திருந்தவன்  ரத்தம் சொட்டிக் கொண்டிருந்த நெற்றியில் கை வைத்தபடியே வலியில் அலறிக் கொண்டிருந்தான். மருத்துவர் கிளினிக்கை பூட்டிவிட்டு சென்று விடுவாரென வேகவேகமாக சைக்கிளை மிதித்தார். அவர்தான் உடைத்த சவுக்கு விறகால் அவனை அடித்திருந்தார். மாலையில் விளையாடிய போது தம்பியை அடித்து அவமானப்படுத்தியதால், பக்கத்து தெருவில் இருந்தவனை  வெட்டுவதற்காக அரிவாளை எடுத்துக் கொண்டு ஓடிய போது வழியில் நண்பர்கள் அவனை மறித்துப் பிடித்து விட்டார்கள். பக்கத்து தெருவிலிருந்து வந்தவர்கள் அவரை  மானம் போகும் படி திட்டினார்கள். மகனை போலீஸில் பிடித்துக் கொடுத்து விடுவதாகவும் மிரட்டினார்கள். அவர் அரிவாளை எடுத்த கைகளிலேயே அடித்துக் கொண்டிருந்தார். அடியில் மேலே சென்று நெற்றியை உடைத்து ரத்தம் சொட்ட ஆரம்பித்தது. "அப்பா ! வலிக்குது தாங்க முடியவில்லை "என அவரது நெஞ்சில்  தலை சாய்த்துக் கொண்டான். அவன் இரண்டு  வயது குழந்தையாக இருந்த போது நள்ளிரவில் வந்த திடீர் காய்ச்சலில்  கை கால்கள் முறுக்கிக் கொண்டு வாயில் சிறிது நுரை தள்ளியது. கண்கள் சொருகியது.  பதறியபடியே குழந்தையை தூக்கிக் கொண்டு இரண்டு கிலோ மீட்டர் தூரத்திலிருந்த மருத்துவமனைக்கு வேகமாக நடந்து சென்றார். நெஞ்சில் சாய்ந்திருந்த குழந்தை விழித்துப் பார்க்கவே இல்லை. உடைந்து நொறுங்கியவர், தானாகவே மீண்டும் ஒட்டிச் சேர்ந்து கொண்டார். "உன்னை நான் காப்பாற்றியாக வேண்டும். கட்டாயம் காப்பாற்றி விடுவேன் " என்று சொல்லிக் கொண்டே நடந்தார். அழுதபடியே ஓடி வந்த மனைவியின் குரலை மனதில் ஏற்றிக் கொள்ளாமல் "ஏதும் ஆகாது. அழக்கூடாது "  என்று தேற்றினார். அதிகமான காய்ச்சலில்  வெட்டு போல தோன்றியதாகவும் ஐந்து வயது வரை கவனமாக கவனித்துக் கொள்ள வேண்டுமெனவும் மருத்துவர் சொன்னார். அன்றிலிருந்து அவனுக்கு எப்போது காய்ச்சல் வந்தாலும் இரவில் உறங்காமல் விழித்திருப்பார் . சைக்கிளில் சாய்ந்திருந்தவனை இறக்கிய போது காய்ச்சல் வந்திருந்தது. பன்னிரெண்டு வயதில் அரிவாள் எடுக்குமளவுக்கு எங்கிருந்து கோபம் வந்தது என யோசித்துக் கொண்டே இருந்தார். கிளினிக்கில் இருந்து வெளியே வந்ததும் தலையில் கட்டுடன் இருந்தவனுக்கு தேநீரில் நனைத்த பன்னை ஊட்டினார். "அப்பாவ மன்னிச்சுடுப்பா இனிமேல் இப்படி அடிக்க மாட்டேன் "என்றழுதார். மிக நெருக்கமாக இருந்த அப்பா திருமணமான நாளிலிருந்து சிறிது சிறிதாக அவனை விட்டு விலகத் தொடங்கியிருந்தார். அவனது அம்மாவுடன் எப்போதும் போல பேசிக் கொண்டிருந்தவன், அப்பா அடிக்கடி சம்பந்தமில்லாமல் பேசுவதாக குறைபட்டுக் கொண்டான்.  குழந்தையைப்  பெற்ற ஒவ்வொருவரும் செய்ய வேண்டியதைத்தானே அப்பா தனக்கு  செய்ததாகவும் அதை நினைத்து உருக வேண்டிய அவசியமில்லை எனவும்  நினைத்தான். ஐம்பத்தைந்து வயதில் அவர் அடிக்கடி அவனிடம் திட்டு வாங்கினார். அவனிடம் தினமும் பேசுவதற்காக வரும் போதெல்லாம் "என்ன குறை. ஒழுங்கா சாப்பிட்டுவிட்டு தூங்குங்க, எப்ப பார்த்தாலும் ஏதாவது சொல்லிட்டு " என்பான். அவனுக்கு அடிக்கடி வாந்தியும், குமட்டலும் மயக்கமும்  மூட்டுவலியுமென உடலே மாற ஆரம்பித்திருந்தது. தூக்கம் இல்லாது ரத்த அழுத்தமும் அதிகரித்திருந்தது. மூச்சு விடவும் சிரம்பபட்டான். ஸ்கேன் அறிக்கையில் இரண்டு சிறுநீரகங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், சிறுநீரக மாற்று அறுவைக் கிகிச்சை செய்ய வேண்டுமெனவும் சொன்னார்கள். அப்போது அவனைக் கட்டிக் கொண்டு அழுத அப்பாவை அவனால் விலக்க முடியவில்லை. "உன்னை நான் காப்பாற்றியாக வேண்டும். கட்டாயம் காப்பாற்றி விடுவேன் " என்று சொன்னார். அவரது சிறுநீரகம் ஒன்றை எடுத்து அவனுக்குள் பொருத்துவதாக முடிவெடுத்து அவ்வாறே செய்து முடித்தார்கள். அவனுக்குள் அப்பா நிரந்தமாக தங்கியிருந்தார். அப்போதும் சுத்திகரிப்பவராகவே மாறியிருந்தார். அப்பாவை விலக்க முடியவில்லை.  ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும் போதும் அவனுக்கு  அப்பாவை நினைத்து அழுகை முட்டிக் கொண்டு வந்தது. உள்ளே இருந்த சிறுநீரகமும் அழுது கொண்டிருந்தது.



அப்பாவாக இருப்பது அத்தனை எளிதன்று எனச் சொல்லும் கவிதை அப்பாவின் மகிழ்வை, துயரை, வாழ்வை அழியாத ஓவியமாக்கி காணும் போதெல்லாம் நம்மை மௌனமாக அழ வைக்கிறது.


----------------------------------------------------------------------------


தகப்பனாய் இருத்தல்

தன் தகப்பனை உணர்தலில் இருந்து 

துவங்குவது

மூத்திரச்சுவைக்கு பழகுவது

உண்ணும் போதே பாதியில் 

மலங்கழுவிவிட்டு மீண்டும் அமர்வது

பாதி இராவில் காரணமே தெரியாமல்

அழுகிற சிசுவுக்கு முன் செய்வதறியாமல் 

கண்ணீர் கசிவது

தன் சுயம் நசிந்து 

தன் பிடிவாதங்கள் தளர்ந்து

தன் கர்வம் அழிவதை

மகிழ்வோடு பார்த்திருப்பது

முதன் முதலில் ஒரு ஆணின் முன் அஞ்சுவது

ஒரு பெண் முன் மண்டியிடுவது

பார்வையால் ஒரு ஓடு வரைந்து 

அது உடையாமல் இருக்க பதறுவது

ஒரு சிறிய நோய்க்கு தன்னை எடுத்து

பிள்ளை காக்கும்படி இறைஞ்சுவது

கைகளுக்கு சிறகாக கற்பிப்பது

பாதங்களுக்கு நீந்த 

பயிற்றுவிப்பது

அச்சாணி கழன்றாலும் விரல் நுழைத்து

சிரித்தபடி மகனுக்கு பம்பரத்திற்கு

கொய்யாக் கட்டை செதுக்கித் தருவது

எல்லா நஞ்சையும் வடிகட்டும் 

நுரையீரலாய் தன்னை மாற்றிக் கொண்டு

ஒரு உலகுயர்ந்த வைரத்திற்கான வெல்வெட்டாய் தன் உள்ளங்கையை மாற்றிக் கொள்வது

மெல்ல ஒரு பருவத்தில் நீருக்குள் 

ஒரு கண்ணாடிச் சிமிழ் போல்

தன் இருப்பை மாற்றிக் கொள்வது

கவனக் குறைவை கையாலாகத்தனத்தை

குற்றவுணர்வாய் மாற்றிக் கொள்வது

கடன்படுவது பிச்சையெடுப்பது

பதறிக் கதறுவது

அவமானம் தாங்காமல் குறுகுவது

சகலத்தையும் தாங்கி ஊன்றி எழுவது

எப்போதும் தன் இன்மையில் உணரப்படுவது

இருப்பில் விலக்கப் பட்ட கனியை சுட்டுவதால் சபிக்கப்படுவது

எப்போதும் தன் இணைத் தண்டவாளமாக

முயன்று தோற்பது 

ஆம் தகப்பனாய் இருப்பது 

எந்த வயதிலும் மகளுக்கு தோளாகவும் 

மகனுக்கு வெட்கம் விட்டு  உடைந்து அழவிரும்பும் உள்ளங்கைக் குழியாகவும் இருப்பது 

தோழனாக பின் குழந்தையாக

ஒருநாள் இருந்தும் இல்லாமல் போவதும்


--------------------------------------------------------------------------------------




குழந்தை அழும் போது பசியில் 

அழுகிறதா ? தண்ணீருக்கு அழுகிறதா ? வயிற்று வலியில் அழுகிறதா ? பூச்சி ஏதும் கடித்து விட்டதா ? எதுவும் புரிவதில்லை. புதிதாக தந்தையானவன் குழந்தையின் அழுகையை நிறுத்த முடியாமல் தத்தளிக்கும் போது தனது தந்தையை முதன்முதலில் உணர்கிறான்."பாதி இராவில் காரணமே தெரியாமல்

அழுகிற சிசுவுக்கு முன் செய்வதறியாமல் 

கண்ணீர் கசிவது". ஆமாம். குழந்தை அழுவது கண்டு தானும் அழத் தொடங்குகிறான். யார் முன்பும் அழாதவன். அழுகை மறந்தே வெகுநாளாகி விட்டது. இப்போது அழுகிறான்."மெல்ல ஒரு பருவத்தில் நீருக்குள் 

ஒரு கண்ணாடிச் சிமிழ் போல்

தன் இருப்பை மாற்றிக் கொள்வது". அப்பாக்கள் விரும்பாத அந்த பருவத்துக்குள் வேறு வழியின்றி தாமாகவே நுழைவார்கள். மகனிடமிருந்து விலகுவது. குடும்பத்துக்குள் இருந்தாலும் சம்பாத்தியம் இல்லாது, இன்னொரு கை அளிப்பதை ஏந்தும் முதல் நாளில் அவர்கள் அடையும் புரிந்து கொள்ள முடியாத குற்ற உணர்ச்சியை விளக்கிச் சொல்ல இயலாது."எந்த வயதிலும் மகளுக்கு தோளாகவும் 

மகனுக்கு வெட்கம் விட்டு  உடைந்து அழவிரும்பும் உள்ளங்கைக் குழியாகவும்

இருப்பது 

தோழனாக பின் குழந்தையாக

ஒருநாள் இருந்தும் இல்லாமல் போவதும்".  எந்த வயதிலும் நெஞ்சில் சாய்த்துக் கொண்டு தலை கோதுவது தந்தைதான். மகனை பிரிந்தும், மகளை அடிக்கடி பார்க்க முடியாமல் தவித்துக் கொண்டும் இருக்கும் தந்தைகள் அவர்களது வருகைக்காக ஒவ்வொரு நாளும் காத்துக் கொண்டே இருக்கிறார்கள். சிறுவயது முதல் வளர்த்த ஞாபகங்கள் மட்டுமே அவர்களது நெஞ்சில் அணிலாக மரமேறி விளையாடுகின்றன. 







🔘🔘🔘 




மதுராவில் இறங்கிய போது நிறைமாத கர்ப்பிணியாய் இருக்கும் மனைவியை நினைத்துக் கொண்டான். கம்சனும், வாசுதேவனும், தேவகியும் அங்கே பாடப்பட்ட பாடல்களில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். சிறைப்பட்டிருக்கும் தேவகியின் எட்டாவது குழந்தையாகிய கண்ணன் பிறக்கப் போகிறான் என்ற வரியில் மீண்டும் மீண்டும் பறந்து கொண்டிருந்தான். குளிர்ந்த நீரில் கால்களைக் கழுவிய போது உடல் சிலிர்த்துக் கொண்டது.ராதா கிருஷ்ணன்  ஆலயத்துக்குள் நுழைந்த போது மிகச்சரியாக ஆரம்பித்த குழலிசை கண்மூடி அமர்ந்தவனை எழ விடவே இல்லை. அவனுடன் வந்திருந்த மேலதிகாரி நேரமாகி விடுமென இழுத்துச் சென்று வெளியில் குளிர்ச்சியான லெஸ்ஸியை மண்குவளையில் வாங்கிக் கொடுத்தார். குழந்தையாக கண்ணன் இருக்கும் சிறிய  ஊஞ்சலொன்றை பிறக்கப் போகும் தன்னுடைய குழந்தைக்காக வாங்கினான்.   பேறு காலமென்பதால் டெல்லி செல்லத் தயங்கியவனை அவனது மனைவிதான் கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தாள். "பயணம் அழைக்கும் போதே புறப்பட்டு விட வேண்டும். நான்கு நாட்களில் ஒன்றும் ஆகிவிடாது. அன்னை இருக்கிறாள். பார்த்துக் கொள்கிறேன் " என்றாள்.  முதல் பயணமென்பதால் ஓடுதளத்தில் மிக  வேகமாக விமானம் ஓடிய போது கண்களை மூடிக்கொண்டிருந்தான். பக்கத்திலிருந்த அதிகாரி சிரித்தார். விமானம் தரைவிட்டெழுந்து வானுக்குத் தாவிய கணம், பறத்தல் என்பதை முதன்முதலாக உணர்ந்தான். அலுவலகம் இருந்த இடத்தை விட்டு, வீட்டை விட்டு மெல்ல மெல்ல விமானம் வெகு உயரத்துக்கு சென்று கொண்டிருந்தது. ஜன்னல் வழியாகப் பார்த்தான். கீழே இருந்த போது  பெரிதாகத் தெரிந்தவை யாவும் மிகச் சிறியதாக மாறியிருந்தன. பெரிய பறவையொன்றின் வயிற்றில் அமர்ந்து பறக்கும் சிறு குருவியின்  குதூகலம் தொற்றிக் கொண்டது. முதலில் துண்டு துண்டான மேகங்களில் மனம் கரைந்தான். விமானம் இன்னும் மேலே சென்று பயணிக்க ஆரம்பித்தது. மேகங்களால் மட்டுமே ஆன உலகம் தோன்றியது. சூரிய ஒளியில் பொன்னென பொலிந்து கொண்டிருந்தது அவ்வுலகம். கால்களால் நடந்த தொலைவை, ரயிலில் கடந்த தொலைவை பறந்து கடப்பது புதிதாக இருந்தது. ஊரில் வயலில் பறக்கும் ஒவ்வொரு குருவியையும் மனதில் நினைத்து வணங்கினான். டெல்லிக்கு சென்று இறங்கிய போது 11 ஆம் நூற்றாண்டிலிருந்து சுதந்திரம் பெற்ற காலங்கள் வரை வரலாறாக மனதெங்கும் கொப்பளித்துக் கொண்டிருந்தது. அதிகாரத்துக்கான போரில் எவ்வளவு குருதி இந்நிலத்தில் சிந்தப்பட்டிருக்கும். செவியில் மோதி உடையும் வாளின் ஒலிகள், துப்பாக்கி ஒலிகள், பீரங்கி ஒலிகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. முதல்நாள் மத்திய பணியாளர் தேர்வாணயத்தில் அலுவல் பணியை முடித்து விட்டு மறுநாள் தாஜ்மஹால் மட்டும் பார்க்க அழைத்துச் செல்லுமாறு மேலதிகாரியிடம் சொல்லியிருந்தான். மதியம் 40 டிகிரி செல்ஸியஸ் கொதித்துக் கொண்டிருந்த வேளையில் காரில் பயணித்து  ஆக்ராவை அடைந்தார்கள்.  பாபரும், அக்பரும், பீர்பாலும்,ஷாஜஹானும் ஒவ்வொருவராக மனதில் தோன்றினார்கள். தாஜ்மஹாலை அடைந்த போது யாரிடமும் பேச முடியாமல் சொல்லுறைந்து நின்றான். கால்களில் உறையணிந்து கொண்டு ஒவ்வொரு பகுதியையும் தூண்களையும் பலமுறை சுற்றி வந்தான். சலவைக்கற்களின் நதியொன்றில்  கால்கள் வழுக்கிச் செல்வது போலிருந்தது. யமுனை வற்றியிருந்தது. நேரமுள்ளது  மதுராவை பார்த்து விட்டுச் செல்லலாம் என்று அதிகாரி அழைத்தார். "பயணம் அழைக்கும்  போதே புறப்பட்டு விட வேண்டும்" என்ற சொல் மீண்டும் எதிரொலித்தது. பிறக்கப் போகும்  குழந்தைக்கு சொல்வதெற்கன அவன் பறந்து சென்ற பயணத்தின் கதைகள் முளைத்தெழ ஆரம்பித்தன. 





ஓரிடத்தில் நிலையாக அமர்ந்து செய்யும் தியானத்தைக் காட்டிலும் அலைந்தலைந்து  பயணங்களில்  இயற்கையிடம் தன்னை ஒப்படைப்பதும் உன்னத தியானமென்கிறது நேசமித்ரனின் இக்கவிதை. 


—---------------------------------------------------------------


உதிரிகள் 


கூழாங்கற்கள் எந்த ஆபரணத்தில்

சேர்வதற்கும் காத்திருப்பவை அல்ல

மீன்கள் முத்தமிட்டு

நதி உயரம் குறைந்தால் 

தட்டான்கள் இளைப்பாற்றி

பின்னொரு நாள்

குழந்தைகள் கைகளில் ஞாபகம் ஆகலாம்

மற்றபடி அவை மலைகளின் சேதியை

கடல்களுக்கு  கொண்டு செல்லும் 

நெடும் பயணிகள் 


பயணிப்பதால் மட்டுமே அழகாகும் 

கூழாங்கற்களைத் தவிர

பயணிப்பதின் ருசியை நீங்கள்

வேறு யாரிடம் கேட்டறிய முடியும்


—--------------------------------------------------------------


மலையில் உடையும் கல் அருவியின் உச்சியில் உள்ள குழியில் மாட்டிக் கொண்டு தவிக்கிறது. தண்ணீர் சுழற்றி சுழற்றி தேய்த்து தேய்த்து குழந்தையாக்கி குளிப்பாட்டியதில்  அழகான கல்லாகி வெளியேறுகிறது . அத்தனை உயரத்தில்   குதித்திறங்கும் கூழாங்கல் போகுமிடம் குறித்த கவலையற்று இருக்கிறது. வேகமாகப் பயணிக்கும் நதி அதை  ஒவ்வொரு அடியாக நகர்த்திச் செல்கிறது. அதனிடம் இரண்டு வாய்ப்புகள். கடலைச் சென்று சேருவது அல்லது கரையொதுங்கி குழந்தையின் கைகளில் சேர்வது. ஒரே ஒரு பிரார்த்தனை. மழை வெள்ளம் அடித்துச் செல்லும் போது எங்காவது புதைந்து மாட்டிக் கொள்ளாமல் இருப்பது. கூழாங்கல்லை சுவைத்தால் மலையின் ருசி, நதியின் ருசி, நடந்து வந்த மண்ணின் ருசி எல்லாமும் இருக்கிறது. அதன் செம்மையான நறுமணத்தில் நீண்ட பயணத்தை நுகர முடியும். 

"பயணிப்பதால் மட்டுமே அழகாகும் 

கூழாங்கற்களைத் தவிர

பயணிப்பதின் ருசியை நீங்கள்

வேறு யாரிடம் கேட்டறிய முடியும்". கூழாங்கல் கடலைச் சேர்ந்து மாபெரும் வெளியில் சரணடைவதைக் காட்டிலும் குழந்தையின் கைகளில் சேர்ந்து கதை பேசவே விரும்புகிறது. பயணத்தின் கதைகள் ஒரு போதும் வற்றாதவை என்கிறார் நேசமித்ரன்.







கவிஞர் : நேசமித்ரன் 



கவிதைத் தொகுப்புகள் : 


1. கார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள்


2. மண்புழுவின் நான்காவது இதயம் 


3. ஜெல்லி மீன்கள் கரையொதுங்கும் கடல் 


4. துடிக்கூத்து


5. ழகரி


6. அயனிப் பாதை


7.  நன்னயம்


8. பின்னங்களின் பேரசைவு


9. அயல்மகரந்தச் சேர்க்கை


10. எண்கள் விழித்திருக்கும் பிரமிடு








Comments