18. அகப்பிணி மருத்துவன் இல்லத்தில் குழந்தைகளை அச்சுறுத்துபவர் எவருமில்லை --ந. பெரியசாமி கவிதைகள் குறித்து

  





கைகளை முன்பு நீட்டி, உட்கார்வது போன்று சுவற்றில் சாய்ந்தபடியே  நின்றதால் முழங்கால் வலியெடுக்க  ஆரம்பித்திருந்தது.நெஞ்சில் ஆத்திரம் பொங்கினாலும் மாலை வெயிலில் சரிந்து நின்ற அவனது நிழல் அழுது கொண்டிருந்தது.உடற்பயிற்சி ஆசிரியர், ஒரு மணி நேரம் நிற்க வைத்துவிட்டு அனுப்பி விடுவார் என்றுதான் முதலில் நினைத்தான். காலை வழிபாட்டுக் கூட்டம் முடிந்து அனைவரும் கலந்து செல்லும் வேளையில், பதினொன்றாம் வகுப்பில் அவனது வரிசை செல்லும் போது, கையில் பிரம்புடன் அவனை மட்டும் அழைத்துச் சென்றார். முந்தைய நாள் தேர்வில் காப்பியடித்து எழுத முயன்ற போது விடைத்தாள்களை வாங்கி சிவப்பு மை பேனாவால் குறுக்கே அடித்து விட்டார். அவனது வகுப்பாசிரியரிடம் சொல்லி தேர்வறையை விட்டு வெளியே அனுப்பினார். "வேண்டாம் சார் ! சார் ! சார் " என்று எவ்வளவோ கெஞ்சினான். அவர் இரங்குவதாக இல்லை. கோபத்தில், பள்ளியை விட்டு வெளியேறும் போது அவரது சைக்கிள் சக்கரங்களில் காம்பஸால் இருபது முறைக்கு மேல்  குத்தினான். அதைப் பார்த்துக் கொண்டிருந்த இன்னொரு மாணவன் காட்டிக் கொடுத்து விட்டான். மறுநாள் காலையில் அவரது அறைக்கு கூட்டிச் சென்றதும் பிரம்பால் அடிக்க ஆரம்பித்தவர், பின்பு "எல்லோரும் பார்க்கும்படி வளாகத்தில் நிற்க வேண்டும். இடையில் சாப்பிடுவதற்கு அல்லது சிறுநீர் கழிக்க  மட்டுமே போகலாம் என்றும் மாலை வரை நிற்க வேண்டும் அதுதான் உனக்கு தண்டனை" என்றார். முதலில் சாதாரணமாக எடுத்துக் கொண்டு வீம்பாக நிற்க ஆரம்பித்தான். அங்கொன்றும் இங்கொன்றுமாக தோன்றிய  கண்கள் அவனைப் பார்த்து பரிகாசம் செய்ய ஆரம்பித்தன. ஒன்று இரண்டாக வளர்ந்த கண்கள் ஆயிரமாகி மொத்த பள்ளியும்  பார்க்க ஆரம்பித்தது. அவனுக்காக இரங்கிய சில ஆசிரியர்கள் விட்டு விடுமாறு சொன்னார்கள். "அவனை நான் தண்டிக்கவில்லை. திருத்துகிறேன் " என்றார் உடற்பயிற்சி ஆசிரியர்.  வகுப்புத் தோழிகளின் கண்கள் அவனது முகத்தைப் பார்த்த போது தலை குனிந்து கொண்டான். கழுத்து வளைந்து தொங்க ஆரம்பித்தது. மீளவும் முகத்தை மேலே தூக்கினான். ஆனால் அது நிமிர்வதாக இல்லை. ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவர்கள் " உங்களை விடமாட்டாங்களா ?  அண்ணா! " என்று கேட்டார்கள். கால்கள் பயங்கரமாக வலிக்க ஆரம்பித்தன. நிற்க முடியாமல் விழுந்து விடுவதைப் போன்று தோன்றியது. குனிந்த தலை வளாகத்திலிருக்கும் மண்ணையே பார்த்துக் கொண்டிருந்தது. பூமிக்குள் புதைந்து விட்டால் நிம்மதியாக இருக்கும் என நினைத்தான். வேடிக்கை பார்த்துப் பரிகாசிக்கும் கண்கள் குனிய வைத்த முகம், அவமானத்தை சிறிது சிறிதாக நெஞ்சில் பூசிக் கொண்டிருந்தது. நுரையீரலெங்கும் கசப்பான காற்று புகுந்து கொண்டது போன்று உறுத்தியது. வாயில் அள்ளி அள்ளி கசப்பை ஊற்றியது. துப்பினான் போகவே இல்லை. கைகள் வலுவிழந்து தொங்க ஆரம்பித்தன். மதிய உணவு உண்ணச் செல்லவில்லை.  கோபத்தை அவமானம் கடிக்க ஆரம்பித்தது. உடலெங்கும் கசப்பு படர்ந்தோடியது. மாலை பள்ளிக்கூடத்திலிருந்த தண்டவாளத் துண்டு அலறத் தொடங்கியது. யாரையும் பார்க்கப் பிடிக்கவில்லை. பையைக் கூட எடுக்காமல் சைக்கிளை எடுத்து வேகமாக மிதித்து விடுமுறை நாளில் ஆடு மேய்க்கச் செல்லும் கொல்லைக்குச் சென்றான். பரிகாசம் செய்த கண்களை உடலில் இருந்து பிய்த்துப் போட முயன்றான். தோற்று தோற்று வயலில் புரண்டு அழுதான். அருகிலிருந்த வயலுக்குத் தெளிப்பதற்காக கலந்து வைக்கப்பட்டிருந்த களைக்கொல்லியை நோக்கி வேகமாக நடந்தவன், கால்களில் யாரோ நக்குவது போலிருக்கவே கவனித்துப் பார்த்தான். நாய்க்குட்டியின் கண்களில் எந்த பரிகாசமும் இல்லாதிருந்தது.




குழந்தைகளை அடிப்பதற்காக குச்சியை  உடைத்துச் செல்லும் போது அழும் மரங்கள், விழுகின்ற ஒவ்வொரு அடிக்கும் துடித்துக் கொண்டிருக்கும் எனச் சொல்லும் பெரியசாமியின் கவிதை நம் முதுகுகளில் வலியெழுத்துகளை வரைகிறது. 





வலியின் சித்திரங்கள் 



கன்றின் காயம் உலர்த்த 

நா வருடும் பசுவின் 

நீர் கோர்த்த கண்களை நினைவூட்டி 

கலைந்து கிடந்தாள் மதுவாகினி 


தவிப்பில் முகம் ஏந்த 

எடுத்து விரித்தாள் நோட்டை

எங்களின் அனாமிகா 

தேதி வாரியாக

திட்டிய ஆசிரியர்களை

கேலிச்சித்திரமாக்கத் துவங்கினாள்

காக்கை ஒன்றை அழைத்து

ஆசிரியையின் நாவை இழுத்து

எச்சமிடச் செய்தாள்

வாத்தியாரின் முகத்தில் 

நாயை மூத்திரமிட வைத்தாள் 

அடுத்து தீட்டினாள் 

உடலை குச்சி குச்சியாக

அதட்டி அடிக்கடி குச்சியை ஓங்கும் 

குற்றத்திற்காகவாம்

கிள்ளும் டீச்சரின் காதை 

திருகித் திருகி இழுத்தாள்

தரை தொட்டுத் தொங்கும் வரை 

தலைமையாசிரியரின்  தலையை மழித்து 

கரும்பலகையாக்கி மார்க்கிட்டாள் 

அவளின் நீதிமன்றத்தில் 

அத்தனை ஆசிரியர்களையும் 

குற்றவாளிகளாகக் கூண்டில் ஏற்றி 

வலி வடித்து வெளியேறியவளை 

மடியிலிட்டு உறங்கச் செய்தேன் 


அடிக்கடி நீரிலிட்டு 

புதிது புதிதாகச் சோப்பு வாங்க

பூனை மீது பழி போடுவாள் 

வந்திடும் விருந்தினர்களின் 

செருப்புகளை ஒளிய வைத்து 

செல்லும் போது பரபரப்பாக்கி 

நாயின் மீது சாட்டிடுவாள் 

தேவைகளை வாங்கிக் கொள்ள 

உறுதியளித்தபின் தந்திடுவாள் 

தலையணை கிழித்து மறைத்த 

ரிமோட், வண்டி சாவிகளை 

பட்டியலில் அவளின் குறும்புகள் 

கொஞ்சநாளாய் ஏதுமற்று

அடிக்கடி  தனித்திடுகிறாள் 

அவ்வப்போது மொட்டை மாடியில் 

எதையோ சொல்லி திட்டிடுகிறாள் 

யாரிடம் பேசினாய் எனக் கேட்க 

எதையோ மறைத்து மழுப்புவதென 

மாற்றம் நிறைந்த செய்கைகள் 

நீர் முடிச்சாய் மண்ணில் உருள 


பதட்டத்தில் உடல் நடுங்கினோம் 

நாளை அனுப்ப வேண்டும் 

பள்ளிக்கு. 


( தோட்டாக்கள் பாயும் வெளி

தொகுப்பிலிருந்து ) 



"அடுத்த ஆண்டு பள்ளிக்குச் செல்ல வேண்டும். அங்கு உன் வாலை ஒட்ட நறுக்கி விடுவார்கள் " என்பதில் ஆரம்பிக்கிறது எல்லாமும். தெரியாத மனிதர்கள் நடுவில், படகற்ற  தனித்தீவில் மாட்டிக்கொண்டு விட்டது போன்று குழந்தை நடுங்குகிறது. "மிரட்டுங்கள் சார். ரெண்டு போடுங்க டீச்சர் அப்போதுதான் பயம் இருக்கும் "  என்று நாமாகவே வளர்த்தெடுக்கிறோம். "ஃப்ரிட்ஜைத் திறக்காதே. கதவை அடிக்காதே. பக்கத்து வீட்டில் உறங்குகிறார்கள், கத்திக்  குதிக்காதே " ஒரு கணமும் விடாமல் அவர்களை செதுக்கிக் கொண்டே இருக்கிறோம். திட்டிக்கொண்டே இருக்கும் அப்பாவிடமிருந்து விலகும் குழந்தை, அம்மாவும் அதையே செய்கையில் பள்ளியை மிகவும் நம்புகிறது. ஆசிரியர்களும் அச்சுறுத்துபவர்களாக மாறினால் அவர்கள் எங்குதான் செல்வார்கள். பிரபஞ்ச மனத்தை  பெற்றிருக்கும் குழந்தைகளின் இயல்பை சராசரி உலகிற்காக மாற்றிக் கொண்டே இருக்கிறோம். அவர்கள் வெறுத்து சோர்ந்து போகிறார்கள். "எதையோ சொல்லி திட்டிடுகிறாள் 

யாரிடம் பேசினாய் எனக் கேட்க 

எதையோ மறைத்து மழுப்புவதென 

மாற்றம் நிறைந்த செய்கைகள் 

நீர் முடிச்சாய் மண்ணில் உருள ". எத்தனை கோபத்துடன் அந்தக் குழந்தை அவளது ஆசிரியர்களை ஓவியங்களில் உருவாக்கி வலியிலிருந்து வெளியேறுகிறது. அடுத்த நாள் பள்ளிக்குச் செல்வதை நினைத்து ஒரு கணம் நடுங்குகிறது. நம்மை குழந்தையாக மாறி அழச் செய்யும் கவிதை பெற்றோராக, ஆசிரியராக மாற்றி தண்டிக்கவும் செய்கிறது. 





🔘🔘🔘






மகாதேவப்பட்டினம் கோட்டைக்குள் நுழைந்த போது மாபெரும் கதவுகள் ஏதுமற்று உடைந்த சுவர்களுடன் அவனை வரவேற்றது. செங்கற்கள் பல்லிளித்துக் கொண்டிருந்தன. ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு கல்லாகப் பிடுங்கி மண் உண்டு கொண்டிருந்தது போன்று சுவர்கள் அரிக்கப்பட்டு நின்றிருந்தன.காதலி உமா பாய்க்காக மராட்டிய மன்னர் துல்ஜா கட்டியதாக சொல்லப்பட்ட அரண்மனையின் ஒரு பக்க சுவர் மட்டும் தனிமையில் பயந்தபடியே நின்று கொண்டிருந்தது. கோட்டைக்குள் இருந்த  ஆலயத்தைச் சுற்றிலும் எலும்புகளை வரிசையாக நட்டு வைத்தது போன்று  கூரையேதுமற்ற மண்டபம் இருந்தது. செதுக்கப்பட்டிருந்த சிற்பங்கள் தலையற்றும் காலற்றும் வெவ்வேறு வடிவங்களில் பரிதாபமாகத் தோன்றின. அரண்மனையில் மன்னரின் காதலி ஆடிய தங்க ஊஞ்சல் மற்றும் ஆபரணங்களை அவள் இறந்த பிறகு சமாதியில் புதைத்து விட்டதாக சொன்னார்கள். ஆலயத்துக்குள் நுழைந்து வணங்கியபோது திகிலெழுப்பிய படி வௌவால்கள் பறந்தன. காதலிக்காக பார்த்துப் பார்த்து செதுக்கிக் கட்டிய அரண்மனையில் அவளுக்கு வாழக் கொடுத்து வைக்கவில்லை. இளவயதிலேயே இறந்து விட்டவளுக்காக மன்னன் சமாதியும் கட்டியிருந்தான். கோட்டையின் பின்புறம் இருந்த சமாதியில் பெரிய பெரிய குழிகளைத்  தோண்டி வைத்திருந்தார்கள். தங்க ஊஞ்சலைத் தேடியிருப்பார்கள் என நினைத்தான். இருந்ததாக சொல்லப்படும் வரலாற்றுடன் இல்லாத அரண்மனையைத் தேடி ஏக்கத்தை உருவாக்குவது அவனுக்கு வியப்பாக இருந்தது.  கோட்டைக்குள் செங்கற்கள் சரிந்து மண்ணில் கரைந்து கொண்டிருந்த இடத்தருகிலேயே வயல் ஆரம்பித்திருந்தது. நிலக்கடலை பயிரிட்டிருந்தார்கள். ஒரு செடியை வேருடன் பிடுங்கி மண்வாசனையை முகர்ந்தான். புதைத்தாலும் பெருகி வளர்ந்த நிலக்கடலை கொத்தாக மலர்ந்து சிரித்துக் கொண்டிருந்தது. 




அடித்தாலும் வெட்டினாலும் துப்பினாலும் 

தாங்கிக் கொள்வதுதான் நிலமென்று சொல்லும் கவிதை புதைக்கப்படுபவனையும் ஆரவாரமற்ற அமைதியுடன் உண்பதும் நிலம்தான் என்கிறது 




ஓணான் உருவாக்கிய பகை 


ஓணான் ஒன்றைச் சாகடித்தேன் 

நிலத்தில் புதைத்து அடையாளமிட்டு வந்தேன் 

கிடைக்கும் காசை எடுத்து

வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியலோடு 

இடம் அடைந்து தோண்டினேன் 

காசை பிறப்பிக்கும் முன்னே 

நிலம் ஓணானைத் தின்று விட்டிருந்தது

அன்றுதான் துவங்கியது 

நிலத்தின் மீதான என் பகை 

யார் மீதாவது கோபம் வந்தால் 

ஓங்கி மிதிப்பேன் நிலத்தை 

அடிக்கடி காறித் துப்புவதுண்டு

சொந்த நிலங்களை அப்பா விற்றபோது 

வீடு துக்கத்திலிருக்க நான் மகிழ்ந்தேன்

மனையாளின் தொந்தரவால் 

வேறு வழியற்றுச் சொந்தமாக்கினேன் 

வீட்டு மனை ஒன்றை 

இப்பவும் ஓணான் பார்க்க 

ஆசை எழுவதுண்டு 

நிலத்தின் மீதான பகையை 

முடித்துக் கொள்ள 

சனியன் வயது தடையாய்



( தோட்டாக்கள் பாயும் வெளி

தொகுப்பிலிருந்து


நிலத்திலிருந்தே எல்லாமும் தோன்றுகின்றன. நிலத்திலேயே  சரணடைந்து மறைகின்றன. "அன்றுதான் துவங்கியது நிலத்தின் மீதான என் பகை ". நிலத்துக்காக பகை தொடங்குகிறது. வேலியெழுப்புதல் எனும் பாவம் எல்லா சண்டைகளுக்கும் காரணமாகிறது. சிறிய வீடுகளுக்கிடையே தோன்றி ஊர், மாநிலமென வளர்ந்து தேசங்களுக்கு இடையே போராகவும் மாறுகிறது.  "யார் மீதாவது கோபம் வந்தால் 

ஓங்கி மிதிப்பேன் நிலத்தை 

அடிக்கடி காறித் துப்புவதுண்டு" . நிலத்தை உதைக்கிறவர்கள், துப்புகிறவர்கள் எல்லோரும் நிலத்திலேயே விழுந்து துடிக்கிறார்கள். நிலத்திடம் தோற்றுப் போகிறார்கள். திரும்பவும் மோதும் போது ரத்தம் கசிவதால் அலறுகிறார்கள். தெண்டனிட்டு வணங்கி திரும்பிப் பார்க்காமல் ஓடுகிறார்கள். நிலம், என்ன நடந்தாலும் அசைவுகளற்று அமைதியாகவே இருக்கிறது.   




🔘🔘🔘 




ஐந்தாம் வகுப்பு "அ" பிரிவில் ஒரு மாணவனுக்கு வேட்டியைக் கட்டி விடுவதற்காக போராடிக் கொண்டிருந்தான். அன்று ஆண்டு விழா. வகுப்பறை முழுவதும் வண்ண வண்ண ஆடைகள், ஒப்பனைக்கான பொருட்கள் சிதறிக் கிடந்தன. பாடல், ஆடல், நாடகத்துக்கென ஒரு வார காலமாகத் தயார் செய்திருந்தாலும், அன்றைய தினத்தில் தொற்றிக் கொள்ளும் பதற்றம் விடுவதாக இல்லை. "தாரே சமீன் பர் ( Tare Zameen Par) " படத்தின் பாடலுக்கு நடனமாடும் சிறுவர் சிறுமியர் மேடைக்கு அருகே தயாராக இருந்தனர். ஊர் மக்கள் கூடியிருந்த மைதானத்தில் அமைக்கப்பட்ட சிறிய மேடையில் அறிவிப்பு கொடுத்துக் 

கொண்டிருந்தார்கள்.  இருபது ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்த, பழைய மாணவர்கள் வெவ்வேறு இடங்களில் இருந்து வந்திருந்தார்கள். வந்ததும் அவனது கைகளைக் கட்டிக் கொண்டு நலம் விசாரித்தார்கள், அப்போதும் சிறுவனுக்கு வேட்டி கட்டுவதிலேயே கவனமாக இருந்தான். அவர்கள் ஐந்தாம் வகுப்பு படித்தபோது  நடந்த ஆண்டுவிழாவில் நடனமாடிய பாடலை ஒலிபரப்பி ஆடினார்கள். அவனும் ஆடினான். சிரித்து சிரித்துக் கண்ணீர் வழிய அவனைக் கட்டிக் கொண்டாரகள். ஒவ்வொருவரும் தங்களது பணி புரியுமிடம், இருக்கும் ஊர் குறித்து  சொல்லும் போது பழைய ஐந்தாம் வகுப்புக்குத் தாவிச் சென்றான். கீர்த்தனா நடக்கும் போதே நடனமாடிக் கொண்டு செல்வாள். அவளது வீட்டில் சொல்லி பரதநாட்டிய வகுப்புக்கு போகச் சொன்னதும், அரங்கேற்றம் முடிந்து அவனைத் தேடி ஓடி வந்து அழுததும் நினைவுக்கு வந்தது. தற்போது ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிவதாகச் சொன்னாள். அவள் அமர்ந்திருக்கும் ஐந்தாம் வகுப்பின் முதல் பெஞ்சில்  இப்போது அமர்ந்திருக்கும் பானுரேகா அவ்வளவு அழகாகப் பாடுவதாக கீர்த்தனாவிடம் சொன்னான். இஞ்சினியராக பணிபுரியும் டௌஃபிக் ஐந்தாம் வகுப்பில் எழுத்துக்களை சரியாக சேர்த்து எழுத முடியாமல் தவிப்பான். கட்டடங்களைக் கட்டுகிறான் என்றதும் வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. ரோஷனுக்கு எப்போதும் முன் பெஞ்சில் இருக்கும் சத்யனுடன் சண்டை வந்து கொண்டே இருக்கும். ஒரு முறை மண்டை உடைந்து ரத்தம் வந்து இருவரையும. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். ஐ.டி கம்பெனியில் சாப்ட்வேர் டெவலப்பராக பணிபுரிவதாகச் சொன்னான். அவன் தோளில் கை வைத்து சிரித்துக் கொண்டிருந்த சத்யன் பக்கத்து ஊரில் உள்ள பேக்டரியில் மேலாளராக இருப்பதாகச் சொன்னான். வந்திருந்த பத்து பேரும் தற்போது ஐந்தாம் வகுப்பு முடித்து பள்ளியை விட்டுச் செல்ல இருக்கும் புதியவர்களைப் பார்த்தார்கள். ஆண்டு விழா முடிந்து பழையவர்களின் கைகளைப் பிடித்துக் கொண்டு புதியவர்கள் சென்றார்கள். எல்லாவற்றையும் எடுத்துப் பூட்டி வைத்து விட்டு வெளியே சென்றவன் மீண்டும் வகுப்பைத் திறந்து மாணவர்களின் பெஞ்சில் அமர்ந்தான். பெஞ்ச் அவனை தள்ளிக் கொண்டே சென்று ஆசிரியரின் நாற்காலியில் அமர்த்தியது. எவ்வளவு முயன்றும் அவனால் பெஞ்சில் அமர முடியவே இல்லை. 



குழந்தைகளின் உலகத்தில் எல்லாமும் சாத்தியமெனச் சொல்லும் கவிதை கள்ளமின்மையின் வாழ்வுக்குள் செல்லாதவரை வெறுமை மட்டுமே நிலையானதென்கிறது.



நிலையானது 


அந்தி வேளையில் 

விளையாடிக் கொண்டிருந்தனர் சிறார்கள் 

தன்னிடமிருந்த சாக்பீசால் ஒருவன் 

நிறைய்ய கட்டங்களை வரைந்தான் 

சிறுமி  ஒரு கட்டத்துள் 

தாமரை வரைந்தாள் 

மற்றவள் வேறொன்றில் 

சூரிய காந்திப் பூ

அடுத்தடுத்து வந்தவர்கள் 

மாதுளை கொய்யா மாங்காவென 

கட்டங்களை நிரப்பினர் 

திடுமென கோடுகள் மறைந்து 

வரைந்தவைகளை  கட்டங்கள் 

உயிர்ப்பிக்கச் செய்தன 

தெருவில் மின்சாரம் பூக்கச் சிரித்து

அவரவர்களுக்கானதை எடுத்துக் கலைந்தனர் 

எனக்கானதை நிரப்பக் கட்டங்களற்று 

வெறிச்சோடிப் போனேன் 


( தோட்டாக்கள் பாயும் வெளி

தொகுப்பிலிருந்து


வரைந்தவைகளை உயிர்ப்பிக்கும் கட்டங்கள் குழந்தைகளை மட்டுமே அனுமதிக்கின்றன. பெரியவர்களால்  வேடிக்கை பார்க்க மட்டுமே முடிகிறது. குழந்தைகள் வானத்துக்குத் தாவுகிறார்கள். விண்மீன்கள் பாடுகின்றன. தொட்டதெல்லாம் துலங்குகிறது. இலைகளுடன் பேசுகிறார்கள். மரங்கள் நடனமாடிக் காட்டுகின்றன. மலைகள் குனிந்து மண்டியிடுகின்றன. எல்லாவற்றுடனும் எளிதில் இணைந்து சொந்தமாகி விடுகிறார்கள். அந்த கணத்தில் அவர்கள் பார்க்கிறார்கள். அடுத்த கணத்தில் முந்தைய கணத்தை மறந்து விடுகிறார்கள். கடுமையாகத் திட்டிய போது அழுதாலும், மனம் வருந்தி தலை கோதி முத்தமிட்டால் இயல்பாகி விடுகிறார்கள். கோபம் துளியும் உறைவதில்லை அவர்களுக்குள்." எனக்கானதை நிரப்பக் கட்டங்களற்று 

வெறிச்சோடிப் போனேன் ". இயற்கையுடன் எதுவாகவும் மாற முடியாத, எதனோடும் ஒன்ற முடியாத  கர்வத்துடன் கூடிய அறிவு தோற்றுப் போகிறது. வெறுமை மட்டுமே திரும்பி வருகிறது. பெரியசாமியின் கவிதைகள் குழந்தையின் கண்களால் பிரபஞ்சத்துடன் பேசுகின்றன. பிரபஞ்சத்திலிருந்து அடுத்தடுத்து வரும் அழைப்புகளால் துள்ளிக் குதிக்கும் குழந்தையின் குதூகலத்தை வாசிக்கும் தோறும் நமக்கு அளிக்கின்றன.





கவிஞர் : ந. பெரியசாமி 


கவிதைத் தொகுப்புகள் : 


1. நதிச்சிறை 


2. மதுவாகினி 


3. தோட்டாக்கள் பாயும் வெளி 


4. குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீல வானம் 


5. கடைசி பெஞ்ச் ( இளையோருக்கான கவிதைகள் )







Comments