17. வாதையின் கவச குண்டலங்களை அணிவிக்கும் ஆலயத்தின் வாயில் --அகச்சேரன் கவிதைகள் குறித்து

 


வளையல் கூடையை கையில் எடுத்துப் பார்த்தாள். கீழே வைத்தாள். தச்சு வேலைக்கு சென்று வந்த கணவன் குடித்து விட்டு உறங்கிக் கொண்டிருந்தான். உலை கொதித்துக் கொண்டிருந்தது. நுங்கு விற்ற இடத்தினருகே சாக்குப்பையுடன் மூத்தவளும் இளையவளும்  நின்று கொண்டிருந்தார்கள்.  "போக முடியாது " என்றவர்களிடம் "சீவிய நுங்குகளை பொறுக்கி வந்து காய வைத்தால்தான் அடுப்பெரிக்க முடியும், அப்போதுதான் சோறு" என்றாள் பாட்டி. ஆட்கள் கலைந்து செல்வது வரைக்கும் காத்திருந்து பிறகு நுங்குகளைப் பொறுக்கி மூட்டையில் கட்டி தூக்க முடியாமல் இழுத்து வந்தார்கள். மூன்றும் பெண் குழந்தைகளா ? "ஒன்றை வீடுகளுக்கு பாத்திரம் தேய்க்க  அனுப்பு. குழந்தையில்லாமல் இருக்கும் உன் அக்காவுக்கு ஒரு குழந்தையைக் கொடுத்து விடு. ஒன்றை உன் வீட்டு வேலை செய்ய, ஒத்தாசைக்கு வைத்துக் கொள் " என்றார்கள் உறவினர்கள். குழந்தைகள் விளையாடச் சென்றிருந்த போது, மீண்டும் வளையல் கூடையை எடுத்துத் தூக்கினாள்." வளையல் வளையல் கலர்கலரா கண்ணாடி வளையல் "

 சொல்லிப் பார்த்தான். வார்த்தைகள் ஒன்றோடொன்று மோதி, குழம்பி, தள்ளாட ஆரம்பித்து, கண்ணீல் நீர் கோர்த்துக் கொண்டது. அழுகையைத் துடைத்து விட்டு, மாலையில் வளையல் கூடையை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தாள்.  ஒரு தெருவுக்கு மட்டும் வியாபாரத்துக்கு  சென்று வந்தாள். இருபது ரூபாய் கிடைத்தது. கூந்தலைப் பிடித்திழுத்த கணவன், கழுத்திலேயே ஓங்கி அடித்தான் . வியாபாரத்துக்குப் போனால் கொன்று விடுவேன் என்று கொச்சையாகத் திட்டினான். இரண்டு நாட்கள் கழித்து புதிய தைரியத்துடன் வளையல் கூடையை ஒரு கையில் எடுத்துக் கொண்டு, எட்டு வயதான மூத்த மகளையும் அழைத்துக் கொண்டு சென்றாள். தெருவின் கண்களில் படிந்திருந்த சந்தேகத் துரு விலகி பார்வை துலங்க ஆரம்பித்திருந்தது. மூன்று குழந்தைகளும் வளரத் தொடங்கிய காலத்தில் வளையலை விடுத்து துணி வியாபாரம் செய்ய ஆரம்பித்தாள். அவளிடம் புடவை, நைட்டி வாங்குபவர்கள் பணத்துடன் அவர்களது வீடுகளின் துயரக் கதைகளையும் சொல்ல ஆரம்பித்தார்கள்.  குழந்தைகள் பள்ளிக் கூடத்தில் ஒவ்வொரு வகுப்பாக முன்னேறிய போதெல்லாம் தூக்கிய கட்டைப்பைகளின் எடையைக் கூட்டினாள். இன்னும் இரண்டு தெருக்களுக்கு புதிதாக ஆடைகளைக் கொண்டு சென்றாள். 



தூங்கும் காதுகளில் பாயும் ஸ்பீக்கரின் ஒலி நெஞ்சத்தை அடையும் போது தூக்கியடித்து எழும் விழிப்பை உண்டாக்குவது போல அகச்சேரனின் இக்கவிதை அன்றாடத்திலிருந்து  எழுப்பி அபூர்வமான இடத்துக்கு நம்மை நகர்த்துகிறது. 




வீறிட்ட ஒலிப்பானுக்குத் 

துணுக்குற்று நகர்கிறது 



டீ அடித்த கையோடு வரும் அன்னாசிப் 

பழத்தட்டு 


கோடை காய்த்த உடம்பில்  தாவணி சரிய 

ஜன்னல் விடாமல் எக்கி எக்குகிறது 


வியர்வையில் புரள்கிறது கழுத்துமணி 



கூச்சம் உடைக்க பருவம் பட்ட பாடுகளை 

அனாயசமாக மறக்க வைத்திருக்கிறது 

வியாபாரம் 


விழுப்புரம் தாண்டியும் 

ஜன்னலோடு பயணிக்கிறது 

சாயம் போன ரப்பர் வளையல் 


( அன்பின் நடுநரம்பு 

தொகுப்பிலிருந்து ) 


ரயிலில்" சூடான சமோசா "என்று ஒவ்வொரு பெட்டியாக கத்திக் கொண்டே செல்லும் பெண் அத்தனைக் கூட்டத்திலும் நழுவி சென்று கொண்டே இருக்கிறாள். குரலை மட்டுமே கவனிக்கும் கண்கள் காயங்களின் தழும்புகளை அறியாமல் இருக்கின்றன. விற்காத சமோசாக்களுடன் ரயில் நிலையத்தில் நிற்கும் பெண்ணைச் சுற்றிலும் கடிக்கும் பாம்புகளென வீட்டின் பிரச்சினைகள் அச்சுறுத்துகின்றன. பயந்து அடுத்த பெட்டிக்கு, அடுத்த ரயிலுக்கு என ஓடிக் கொண்டே இருக்கிறாள். "கூச்சம் உடைக்க பருவம் பட்ட பாடுகளை 

அனாயசமாக மறக்க வைத்திருக்கிறது 

வியாபாரம் ". முதன்முதலாக வியாபாரத்தைத் தொடங்கும் போது சமூகத்தின் நிர்பந்தங்கள் அவளை மிரட்டுகிறது. "ஓடி விடு அல்லது தோற்றுக் காணாமல் போய்விடுவாய் "என்று சொல்கிறது. முகத்தைக் கவ்வும் கூச்சத்தை உரக்க குரல் எழுப்பி எழுப்பி விரட்டுகிறாள். குரல் உயர உயர, பசி மறந்து வீட்டின் பிரச்சினை பாம்புகளை ஒவ்வொன்றாக கொன்று போடுகிறாள். வியாபாரத்தில் உழைப்பின் பலன் எல்லாவற்றையும் மாற்றி, அவளை தைரியமுள்ள புதிய மனுஷியாக ஆக்குகிறது.






🔘🔘🔘



அவர்கள் இருந்த தேசத்தில் ஒரு வேளை உணவு கூட தொட முடியாத உயரத்தில் இருந்தது. தினமும் எக்கிப் பார்த்துத் தோற்றுப் போனவர்கள், கண்ணீருடனும் பசியுடனும் வீட்டில் சிறைப்பட்டிருந்தனர். டீசல் விலையும் முன் எப்போதும் இல்லாத  அளவுக்கு அதிகரித்துக் கொண்டிருந்தது. உடல்நலமின்றி இருந்தவன், மீன்பிடிக்கும் தொழிலை விட்டு கம்பெனி ஒன்றில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். மின்சாரம் எப்போது வரும், எப்போது போகுமெனத் தெரியாமல் நாளொன்றுக்கு இருபது முறை மின்வெட்டு இருந்ததால்  கம்பெனியையும் மூடி விட்டார்கள். அவசர நிலை பிரகடனப்படுத்தப் பட்டிருந்தது. மருத்துவமனையில் மின்சாரமில்லாததால் கர்ப்பிணிகளை ஸ்கேன் செய்வது நிறுத்தப்பட்டிருந்தது. சத்து மாத்திரைகள், மருந்துகள் எதுவும் தரப்படவில்லை. வயிற்றிலிருக்கும் குழந்தையைக் காப்பாற்ற வேண்டுமென நினைத்தவள், கணவனிடம் "நாம் பக்கத்து தேசத்திற்கு சென்று விடலாம். அகதியாக சிறைப்பட்டாலும் உணவு கிடைக்குமென்றாள்". உள்ளிருக்கும் சிசு  பசியில் முண்டியது. நள்ளிரவில் தெருவைக் கடந்து, கடலுக்குச் சென்றவர்களை நாய் குரைத்துக் கொண்டிருந்தது. ஃபைபர் படகு நீந்திப் பாய்வதற்காக துடித்துக் கொண்டிருந்தது. ஆறு மாத கர்ப்பிணியான மனைவியை  முதலில் ஏற்றியவன், மகளைத் தூக்கிக் கொண்டு படகை இயக்கினான். வழக்கமாகக் கொண்டு வரும் மீன் பிடிக்கும் வலைகள் ஏதுமில்லை. அவர்கள் மாட்டிக் கொண்டிருந்த காலத்தின் பெருவலையைக் கிழித்துத் தப்பிக்க முடியாமல் அதைச் சுமந்தபடியே பயணித்தார்கள். கடலில் குளிர்காற்று அதிகரிக்கவே தாயை இறுகக் கட்டிக் கொண்டாள் மகள். உள்ளிருக்கும் சிசு குடுவைக்குள் நீந்தும் மீனைப் போல இருளுக்குள் உறங்கிக் கொண்டிருந்தது. படகிலிருந்த நான்கு மீன்களும் நீந்தி பக்கத்து தேசத்தின் கடற்கரையை அடைந்த போது கடலோரக் காவல்படையினர் கைது செய்தனர்.  அவர்களை,  சட்ட விரோதமாக நாட்டுக்குள் நுழைந்தவர்கள் என்பதா அல்லது அகதிகளெனக் கருதி முகாமுக்கு அனுப்புவதா என அதிகாரிகள் குழம்பிக் கொண்டிருந்தனர். நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வதற்குள், அகதிகளாகக் கருதி முகாமுக்கு அனுப்பும் படி ஆணை வந்திருந்தது. வலையிலிருந்து வெளியேறிய நால்வரும் நிம்மதியாக சுவாசிக்க ஆரம்பித்தார்கள். 



வலை வந்து சூழும் போது தப்பிக்க முடியாமல் மாட்டிக் கொள்ளும் மீனின் மரண நிமிடம் உண்டாக்கும் துடிதுடிப்பை அளிக்கும் கவிதை மீன் போன்றவர்களின் வாழ்வையும் இருதயத்தில் துடிக்க விடுகிறது.



ரெப்பை அரிந்த விழி 


இந்த நகரத்தில் மீன் கிடைக்கிறது 


ஆம். நேற்றோ அதற்கு முந்தைய நாளோ 

அதன் வாழிடத்திலேயே சாகடிக்கப்பட்டிருந்தது 


இங்கு முதன்முதலாக 

பக்கவாட்டில் உலகைப் பார்க்கிறது 


அதன் இமையாதவிழி தேடுவது 

நிச்சயமாக 

என்னையோ உங்களையோ காலத்தையோ அல்ல 


இவ்வளவிற்குப் பின்னும் 


ஐஸ் தெறிக்க மேனிச் செதில் சீவும் ஆணிப்பலகையை 

வீச்சில் துண்டாடும் வெட்டுக்கத்தியை 



( அந்த விளக்கின் ஒளி பரவாதது தொகுப்பிலிருந்து ) 



"ஆம். நேற்றோ அதற்கு முந்தைய நாளோ 

அதன் வாழிடத்திலேயே சாகடிக்கப்பட்டிருந்தது ". அது வாழிடத்திலேயே இறந்து விட்டது. இங்கு விற்பனைக்காக மட்டுமே வைக்கப்பட்டிருக்கிறது. சுதந்திரம் பறிக்கப்பட்டு, சிறையில் அகப்பட்டு உயிர் விட்டிருக்கிறது. இறந்த கண்கள் இமைக்காமல் தேடும் காலம் எங்கிருக்கிறது எனத் தெரியவில்லை.

வலைகள் விழுந்து கொண்டே இருக்கின்றன, வாழ்வெனும் பெருங்கடலில். வலையை அறுக்கும் வலிமை இல்லாது கழுத்தில் சுருக்கு மாட்டிக் கொள்ளும் மீன்களை உடனடியாக அப்புறப்படுத்தி விடுகிறார்கள். அது குறித்து பேசுவதற்கும் பயமாக இருக்கிறது. அவை, வாழத் தகுதியற்றவை செத்துவிட்டன என்கிறார்கள்.மீன்கள் சாகாவிட்டாலும் மண்டையிலடித்துக் கொன்று விட்டு,  விற்பனைக்குத் தயார் செய்வதற்காக. வெட்டுக் கத்தியும், ஆணிப் பலகையும் மீன்களைச் சுற்றி இருந்து கொண்டே இருக்கின்றன. 



🔘🔘🔘 






கூரையின் கண்கள் ஒழுகிக் கொண்டே இருந்த கார்காலத்தில், உறவினர் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தவள், கதவு திறக்கும் ஒலி கேட்டதும் விழித்துக் கொண்டாள். தட்டில் சோற்றைக் கொட்டிய 

பெண்மணி " சாயங்காலம் இங்கே வரக் கூடாது. ஏதாவது ஒரு மகனின் வீட்டிற்குச் சென்று விடு " என்றாள். சிக்குப்பிடித்த தலையை சொறிந்து கொண்டே, தட்டைத் தூக்கி நன்றி சொன்னாள். மகனின் வீட்டுக்குச் செல்ல விருப்பமின்றி அரசமரத்தடியில் உறங்கினாள். நாய் குரைக்கவே கல்லால் அடித்து கெட்ட வார்த்தைகளால் ஓட வைத்தாள். ரத்தம் வற்றிய கண்களால் வானத்தை வெறித்துப் பார்த்தாள். மத்தியானம் என்பதால் மேகங்கள் குழம்பியிருந்தன. மகன் இருந்த வீட்டின் இரும்பு கேட்டை உதைத்து விட்டு ஓடி வந்து விட்டாள். கால் வலித்தது. அரசமரத்தடிக்கு மீண்டும் சென்று கண்களை மூடினாள். உறக்கம் வராமல்   புடவையை சிறிது சிறிதாகக் கிழித்தாள். சத்தம் போட்டு அழத் தொடங்கினாள். எப்போதும் யாராவது ஒருவருடன் சண்டையிடுவதாக தனக்குத்தானே பேசிக் கொள்ளவும் ஆரம்பித்தாள். கணவன் இறந்த பிறகு, பெரிய மகனின் வீட்டிலிருந்த போது  சொத்துப் பிரிப்பு விவகாரம் முற்றி முதலில் அவளைத் தள்ளி விட்ட மகன், கோபத்தில் நிதானம் தவறி முதுகில்  உதைத்துவிட்டான். "போய் சாவுடி !" என்ற குரல் மீண்டும் மீண்டும் அவளுக்குள் ஒலிக்கத் தொடங்கியது.  அறுபத்தைந்து வயதில் தற்கொலைக்கு முயன்று குளத்தில் குதித்தவளை காப்பாற்றி விட்டார்கள். குற்ற உணர்ச்சி ஏதுமின்றி சைக்கிளில் சென்ற மகன், புலம்பிக் கொண்டே  சாலையில் நடந்து செல்லும் தாயைக் கண்டு " பைத்தியம் மானத்தை வாங்குது " என்று திட்டுவான். கைகளால் நெஞ்சிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதவள், மீண்டும் உறவினர் வீட்டுத் திண்ணைக்கு உறங்கச் சென்றாள். வெறித்த கண்களுடன் வயிற்றைத் தடவினாள், உதைத்த மகன் உள்ளே சிசுவாக இருந்தான். 



தாயாகும் போது பெண் அணிந்து கொள்ளும் கவச குண்டலங்களை சாகும் மட்டும் நீங்குவதில்லை எனச் சொல்லும் கவிதை அவளது பாடுகளில் பார்வையாளனாக மட்டுமே இருக்கும் பிள்ளைகளைப் பார்த்து அழுகிறது




அம்மா விழுந்தாள் 


அம்மா விழுந்தாள் 

நன்றாகவே பின்கட்டிலிருந்து 

தேநீர்த் தட்டோடு நடந்து வந்தவள்

வீட்டின் சகல 

ஜடங்களும் உயிர்களும் பார்க்க 

இடறி 



தூக்க எத்தனிக்காத 

என் கற் கைகளை நண்பனிடம்

குறைப்பட்டேன் 


வீட்டில் மறைந்திருந்த 

பாழ்ங் கிணற்றை அறிந்த பீதியில் 

இன்றையை தேநீரோடு 


அம்மா நடந்து வருகிறாள் 

நான் என் கைகளை கைகளை...



( அந்த விளக்கின் ஒளி பரவாதது தொகுப்பிலிருந்து ) 



அம்மா விழுந்து கொண்டுதான் இருக்கிறாள், அடுக்களையில், வாசற்படியில், நடுவீட்டில் என எல்லாவிடத்திலும். ஓடிச் சென்று தூக்குவதற்குள் அவளே எழுந்து விடுகிறாள்.  "வீட்டில் மறைந்திருந்த 

பாழ்ங் கிணற்றை அறிந்த பீதியில் 

இன்றையை தேநீரோடு

அம்மா நடந்து வருகிறாள் ". பாழுங் கிணறு அவளை நன்கு அமிழ்த்துகிறது. "வெளியில் செல்லாதே !  பிள்ளைகளும் கணவனும் பசித்திருக்கிறார்கள். போய் சமையல் செய். எப்போதும் வீட்டு வேலைகளை மறந்து விடாதே. உன்னை விட்டால் இதனைச் செய்ய யார் இருக்கிறார்கள். அனைவரையும் காக்க இயங்கிக் கொண்டே இருக்கும் தெய்வம் நீ " என்றெல்லாம் அலைப் பாடல்களை ஒலிபரப்புகிறது. அவளுக்கு பீதியாக இருந்தாலும் மறைத்துக் கொண்டுதான் வெளியே வருகிறாள். அடுக்களையில்தான் இருக்கிறது அந்த பாழ்ங்கிணறு. கட்டளைகள் துரத்துகின்றன. 

ஒவ்வொரு முறையும் வீட்டுக்குள் சென்று வெளியே வரும் போதெல்லாம் ஏதாவது உண்பதற்கு எடுத்து வருகிறாள். பசியிலிருந்தாலும், எதையும் முதலில் திண்பதை மறந்து விடுகிறாள். கவச குண்டலங்களை தாங்க முடியாமல் கழற்ற நினைக்கிறாள். கழற்ற நினைத்தாலே குருதி கசிகிறது. சோர்ந்து அடுக்களையில் நின்றபடியே உறங்குகிறாள். அகச் சேரனின் கவிதைகளில் இருக்கும் வாதை, வாசிப்பவருக்கு அதை கவச குண்டலங்களாக அணிவிக்கிறது. ஒவ்வொரு அடியிலும் இறுக்கி,  எடை தாள முடியாமல்

மண்டியிட வைக்கிறது. 













கவிஞர் : அகச்சேரன் 


கவிதைத் தொகுப்புகள் : 


1. அன்பின் நடுநரம்பு 


2. அந்த விளக்கின் ஒளி பரவாதது 


3. கற்கை ( முழுத் தொகுப்பு )

Comments