எதுவுமற்ற ஒன்றைத் தொலைத்தல்
மழையில் நடுங்கியபடி நாம் நின்றுகொண்டிருந்த காலத்தில்
தொட்டுக்கொள்ள முடியாத ஜிமிக்கிகள்
அழகாகப் பேசிக் கொண்டிருந்தன
செல்லுமிடம் தெரியாமல்
முதல் தடவை பயணிக்கையில்
"விழுந்துவிடப் போகிறாய்
சிறிதளவேனும் நெருங்கி அமரலாமே " என்றேன்
சுண்டிவிடப்பட்ட ஜிமிக்கிகள்
முன்னும் பின்னுமாக சுழன்றாடித்
தொட்டுக் கொள்வதற்கு தயாராகின
இருவருக்குமிடையே அமர்ந்திருந்த
எதுவுமற்ற ஒன்று
கண்களை விரித்து ஏதோ சொல்ல வந்தது
அதைக்
கீழே தள்ளி விட்டுவிட்டு
கைகளைக் கோர்த்துக் கொண்டோம்
எல்லாவற்றின் வயிற்றிலும்
காரணங்கள் பிறக்க ஆரம்பித்தன
சொல்வனம் ஜூன் 2021
Comments
Post a Comment