நீருக்குள் மூழ்குபவள்

 

  


கிணற்றுக்குள் குதிக்கும் போது 

தலை மட்டும் மூழ்கவில்லை 

எழுந்து நிற்கும் கூந்தல் காட்டில் 

வீறிட்டழுகிறது குழந்தை 

நீருக்குள் பரவும் ஒலி 

ஆழம் நோக்கும் பாதங்களை 

மூழ்கவிடாமல் தாங்கிப்பிடிக்கிறது 

சூழும் கொடிகளின் கண்களில்  

மின்னுவதெல்லாம் 

செழுமையான உடல் மட்டுமே 

பாம்புகளென சீறிப் பாயும் பழங்கதைகள் 

முதலில் கொத்துவது 

அவளுடைய மூளையைத்தான் 

கயிற்றை வீசி 

குழந்தையைத் தூக்கும் 

தலைவனை நோக்கி 

பாம்புகளை எறிகிறாள் 

துடிக்கும் அவனைக் கொத்தும் கதைகள் 

அறுவடை வயலைக் கொளுத்துகிறது 

உனக்கு ஒன்றுமில்லை  

நன்றாகத்தானிருக்கிறாய் 

கிணற்றுக்குள் குதிக்கும் குரல்கள் 

நெஞ்சில் மோதியதும் 

எறும்புகளாகி மடிகின்றன  

கொடிகள் முகம் நோக்கி நகரும் வேளை

சுற்ற ஆரம்பிக்கிறது கிணறு 

காப்பாற்ற யாருமில்லாத 

அலைகள் சுழலும் பெருங்கடல்

சுற்றிச் சுற்றி விரியும் சன்னதம் 

முகம் மறையும் பித்துக் கணத்தில் 

நல்ல வேளையாக மலர்கிறது உறக்கம் 

விழிக்கும் போதே மறைகின்றன 

கீழிழுக்கும் தண்ணீரும்  

மேலெழும்பிய காடும் 

எரியும் வயல்வெளியில் 

குழந்தையைக் கொஞ்சியபடியே  நடப்பவள் 

தலைவனிடம் கேட்கிறாள் 

அணைப்பதற்கு ஏன்

எந்தக் கிணற்றிலும் 

தண்ணீர் இல்லை.  


-யாவரும் பிப்ரவரி 2021 

Comments