கொல்லமுடியாத புன்னகை
சுவாசப்பாதையின் சுவர்களெங்கும்
கண்ணாடிகள் தெறிக்கின்றன
நுரையீரலில் உறைந்திருக்கும்
மஞ்சள் மலரை
கிழித்துத் துப்பும் புயலுக்கு
மீளவும்
வீட்டுக்குள் வர விருப்பமே இல்லை
கரகரப்பில் அடங்காமல்
பாய்கிறது சிறுத்தை
அலறுகிறாள்
தூளியில் உறங்கும் மகள்
குளியலறைக்கு ஓடி ஒளியுமென்னை
இழுத்து இழுத்து புகைக்கிறது இரவு
எரியும் நுரையீரல் காட்டைத்
தடவிக் கொடுக்கிறேன்
விலாவிலிருந்து
மேல்நோக்கித் தாவும் வலிமிருகம்
குரல்வளையைக் கவ்வுகிறது
பின்னங்கால்களை உறைய வைக்க
தடவப்படும் தந்திரப்பசைக்கு
நேரமென்பது எப்போதும் குழப்பும் ஓவியம்
உறக்கத்திற்கும் விழிப்புக்கும் இடையில்
நோய்மையின் கதவைத்
திறந்து திறந்து மூடுகிறேன்
வெவ்வேறு நிறங்களில்
ஜொலிக்கின்றன மாத்திரைகள்
விழுங்கியதெல்லாம் தொலைகிறது
ஆழமான மஞ்சள் மலருக்குள்
சூரணம்
கஷாயம்
கபம் அறுக்கும் லேகியம்
எப்படி அழித்தாலும்
முற்றும் தொலையாது சிரிக்கும் மலர்
இந்தக் கார்காலம் சென்று
அடுத்த கார்காலம் வா என்கிறது
கொல்லமுடியாத
புன்னகையின் முன்
தோற்று வணங்குகிறேன்
- யாவரும் பிப்ரவரி 2021
Comments
Post a Comment