அறிந்திராத விலகல்



கரப்பான் பரவாமல் 

தைலமிடும் போதும் 

மடியில் அணைத்து 

சொடக்கு மலர்த்தும் போதும் 

அறிந்திராத விலகலை 

விழுந்து வணங்கும் போது உய்த்தறிகிறான் 

நெருக்கமான வீட்டுக்குள் 

ஒரு அறை மட்டும் அந்நியமாகிறது 

கதவை மூடி 

ஒளிந்து பேசுகிறது 

ம்ஹூம் 

இந்த அடிவார ஊற்றை 

ஏற்றுக் கொள்ளமாட்டேன் 

என்கிறது மலை 

யாருமே பார்க்காத போதும் 

விழுந்து வணங்கினால் 

மேலே தாவி மறைகிறது 

மண்ணின் ஆழத்திலுள்ள 

வைரத்துடன் உரையாடச் செல்கிறது 

அடி காணமுடியா பிரம்மமென 

அத்தருணத்தில் வேடமிடுபவள் 

பண்டிகைக்கான வெல்லப்பாகை 

கிண்டிக் கொண்டே இருக்கிறாள் 

நெஞ்சுக்குள் வாரியிறைத்த 

சிவப்புச் சொற்களை அழிப்பதற்காகத்தான் 

விழுந்து வணங்குகிறான் 

வலைகளில் அகப்படாத நண்டுகள் 

கரைகளில் தப்பிக்கும்போது

நடுக்கடலில் தத்தளிக்கிறது தந்திரப்படகு 

கட்டிப்பிடிக்கவும் முத்தமிடவும் 

எளிதாகச் சிக்குவதும்

விழுந்து வணங்கும் போது 

விலகி விலகி ஓடுவதும்

இந்தக் கால்களை 

வைத்துக் கொண்டு 

என்னதான் செய்வது ? 


பேசும் புதிய சக்தி - மார்ச் 2021


Comments