மாஸ்க்குகளின் காலம்

மாஸ்க்குகளுக்கு
வீடு இருக்கின்றது எப்போதும்

துவைக்க
அயர்ன் செய்ய
மூக்கில் சரியாகப் பொருத்த
ஆட்கள் இருக்கிறார்கள்

யாருமற்ற சாலைகளில்
நடக்கும் போது துள்ளும் மாஸ்க்குகள்
வீதிகள் பிரியும் இடத்தில்
காத்திருக்கும் சைரனுக்கு பயந்து
எத்தனை நாளைக்கு இப்படியென்று
குறுக்கு சந்துகளில் ஒளிகின்றன

மாஸ்க்குகளுக்கு
விதவிதமாக திண்பண்டங்கள்
சேகரித்த மூட்டைகளில்
ஓட்டையிடும் எலிகளை வேட்டையாடுதல்
என சூப்பராகச் செல்கிறது விடுமுறைக்காலம்

எதையும்
 ஃபெர்பெக்டாகச் செய்யும் மாஸ்க்
சாம்பாருக்கு துவரம் பருப்பை
மலரவிடவில்லையா என்கிறது
என்னென்ன படிக்க வேண்டும்
எப்படித் திரைப்படங்களைப்
பார்க்க வேண்டும்
எப்போது குசு விட வேண்டும்
முழங்கிக் கொண்டே இருக்கிறது

அறிவிக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டதாக
மூட்டைகளுடன் வரும் குழந்தைகளை
நிறுத்துகிறது புதிய எல்லைக் கோடு
நோய்பரப்பும் கிருமிகளை
உள்ளே விடாதீர்கள் என
அலறுகின்றன மாஸ்க்குகள்

குழந்தைகள் முதியவர்களின் உயிரை
விரும்பி உண்ணும் கிருமிகள்
பெரிய மூக்கு மாஸ்க்குகளை
எதுவுமே செய்வதில்லை

மாசு படியுமென்றால்
கிளைகளை வெட்டுவது
இலைகளைப் பிய்த்தெறிவது
எல்லாமே கை வந்த கலை
மாஸ்க்குகளுக்கு

இறந்தவர்களின் எண்ணிக்கையை
அறிவிக்கும் தொலைக்காட்சிகளை
தூசி படியாமல் துடைக்கும் போது
தங்களையறியாமல் அழுது விடும்
மாஸ்க்குகளின் கருணை
வானை விடவும் பெரிது
கடலினும் ஆழமானது


வாசகசாலை மார்ச் 2020

Comments