தூக்கத்தின் வரைபடம்




பெரிய மகளின் தூளி
வடக்கு தெற்காக
சிறிய மகளின் தூளியோ
கிழக்கு மேற்காக
இரண்டையும் ஒரே நேரத்தில் ஆட்டுபவன்
X- அச்சிலும் Y -அச்சிலும்
வரைந்து கொண்டே இருக்கிறான் தூக்கத்தை
தூங்காத காலத்தின்
குட்டிக் குட்டிக் கட்டங்கள்
தரையெங்கும் விரிகின்றன
ஒவ்வொரு கட்டமாக பாடல் நிரம்பும் போது
எழுந்து பறக்கும் தூக்கத்தின் துகள்கள்
கண்களைச் சேரும் நேரம்
பொருந்தாமல் தப்பியோடுகிறது
பெரிய மகள் விளையாடத் துவங்க
சொருகுகின்றன சிறிய மகளின் கண்கள்
X- அச்சின் தூளி ஆடி நிற்கும் போது
கலைக்கக்கூடாததாக மாறுகிறது
மையத்தில் வழியும் அமைதி
Y- அச்சின் தூளிக்கு
வேறு பாடலை ஊற்றுகிறான்
கீழே உள்ள கட்டங்களில் நகர்கிற தூக்கம்
பெரிய மகளின் முதுகைத் தட்டுகிறது
திடீரென மறையத் தொடங்கும் வரைபடம்
அந்தரத்தில் தொங்கும் தூளிகளிடம்
தூக்கம்
இப்போது
எந்தக் கட்டத்திலிருந்து
எந்தக் கட்டத்துக்கு செல்கிறது என்று
கேட்டுக்கொண்டே வெளியேறும் போது
கால்களை உதைத்தபடியே
சிரிக்கிறார்கள்  இருவரும்
"தூளியை ஆட்டாமல்
தூங்கி வழிய வேண்டியது "
பின்தலையில் கொட்டும்
வளையல் கையினால்
அடிவாங்கியபடியே
கனவிலிருந்து
ஓடுகிறார் கணக்கு வாத்தியார்

-சொல்வனம் ஏப்ரல் 2020

Comments