பகுத்தறிவு



தாழப் பறந்த விமானம்
தெருவுக்குள் நுழைந்த போது
இடிந்த வீடுகளை மறந்து விட்டு
உற்சாகத்தில் மேலே ஏறி குதித்தோம்.
இறக்கைகளின் பணிவுக்கு
சொத்தெழுதி வைக்கலாம் என்றான் நண்பன்.
விமானத்தின் மூக்கை முட்டிய பறவை
வயிறு குலுங்க சிரித்தபடி
காணாமல் போன கூட்டைத் தேடியது.
அதே நிறத்தில்
அதே உயரத்தில்
இன்னொரு விமானம் நடந்து வந்து
எங்களை அழைத்து
உள்ளே சுற்றிக் காண்பித்தது.
விமானத்தின் உபசரிப்புக்கு
உயிரையேக் கொடுக்கலாம் என்றேன் நான்.
விமானங்கள் எதற்காக இறங்கின என்று
யோசிக்கத் தொடங்கும் முன்
மாடுகளின் சண்டை தொடங்கியிருந்தது
கொம்புகள் மோதிக் கொள்ளும் ஓசையை
நாங்கள் இருபக்கமாக நின்று ரசித்தோம்.
என் பக்க மாடு
நண்பனின் விலாவில் குத்தியது.
விசிலடித்த கூட்டத்தைக்
கலைத்த மாடுகள்
கட்டித் தழுவியபடி நகர்ந்த போது
விரட்டியடிக்க
தெருவில் கற்களே இல்லை
மார்பிள் சதுரங்களைப்
பதித்துக் கொண்டிருந்தவர்கள்
விமானங்களுக்கு
சேறு நிறைந்த பாதைகள்
உகந்தவை அல்ல என்றார்கள்.


வாசகசாலை நவம்பர் 2019

Comments