தொப்பூழ்க்கொடி






நீருக்குள் அமிழ்த்திய பனைவிசிறி
தெளிக்கும் காற்றில் விரிகின்றது
கால்சட்டைகள் அவிழ்ந்து விழ
நுங்கு வண்டிகள் விரைந்தோடும் வீதி.
சோளக்களியிலிடும்
கருப்பட்டித் துண்டுகளை
வாய்க்குள் அதக்கும் சிறுவனின்
கன்னத்தைக் கிள்ளும் மூதாட்டி
கொட்டாங்குச்சி ததும்ப
சீம்பால் தருகிறாள்.
நஞ்சுக்கொடி மறைத்துத் தொங்கும்
ஆற்றங்கரை மரத்தில்
கூடு கட்டும் காகம்
கன்றுடன் விளையாடுகிறது வயலில்.
பதனீர் விற்பவரின்
வண்டியின் பின்னால்
புழுதி பறக்க ஓடிவரும் சிறார் கூட்டம்
கள்ளருந்தும் தந்தைகளின்
அடிக்கு பயந்து கலைந்து செல்கிறது.
சுட்ட பனங்கிழங்குகள் விற்கும் ரயிலில்
தூரத்திலிருந்து தெரியும் பனைமரங்கள்
வற்றிய ஏரியிலும் வளருகின்றன
தோலுரித்து உண்ணும் பொழுதில்
உள்நாக்கில் சுடுகிறது பழங்கோடை.
பனங்கல்கண்டு  இருமலுக்கு நல்லது
நுணுக்கும்போது ஊரை உடைத்து
இனிக்கும் வீதிகளை
வயிற்றில் செரித்துக்
கழித்து விட்டு அழுத்தும் பொத்தானில்
பொங்கிப் பாயும் நீரில் மறைகிறது ஆறு.
பனைமரங்களை வெட்டிவிட்டால்
தொப்பூழில் சுழலும் தாயின் மூச்சை
நிரந்தரமாக நிறுத்தி விடலாமென்று
பிழைப்பு நகரத்தின் இரும்புக்குரல்
தினமும் ஓதுகிறது கனவில்.
வெட்ட வெட்ட வளரும் செதில்கள்
ஒவ்வொரு எலும்பிலும்
பொத்திப் பாதுகாக்கிறது
பனையை.



கணையாழி நவம்பர் 2019 

Comments