ஒளியுடன் பேசுதல்

புதிதாகப் பிறந்திருக்கும்
குழந்தையின் வீடு தேடி
வெகுதூரம் பாய்ந்து வருகிறது
முற்றாத ஒளி.
ஓடுகளிடையே சிரித்துக் கொண்டிருக்கும்
கண்ணாடியின் மீதேறி
குழந்தை விழித்ததும்
தவழ்ந்து நுழைகிறது.
கடைவாயில் பால் உமிழும் குழந்தை
ஒளியின் திசையை சுழல வைத்து
இருளின் கதையைச் சொல்ல
அறையெங்கும் அமர்கிறார்கள்
அதன் தோழர்கள்.
கால்களை உதைத்து
மெல்லிய ஒலியில்
குழந்தை சொல்லும் கதை
கண்ணாடி வழியே
ஒளி ஒளி ஒளி ஒளி
ஒளி ஒளி ஒளி ஒளி
ஒளி ஆண்டுகள் கடந்து
பயணித்துக் கொண்டே இருக்கிறது
அந்த முனையிலிருந்து வரும் கைத்தட்டல்
வயிற்றில் பால்வெளியை நிரப்புகிறது.
பஞ்சுமிட்டாயின்
நுண்ணிய இளஞ்சிவப்பில்
ததும்பி அலையும் ஒளி
இருளை அணைத்துக் கொண்டு
தன் கதையைச்
சொல்லத் தொடங்குகையில்
எல்லாமும் தானாகவே மாறிவிடுவதால்
தோற்றுப் போய்
குழந்தையின் கால் விரல்களில் துடிக்கும்
 நரம்புகளின் பச்சையை
முத்தமிட்டுக் கொண்டிருக்கிறது.

சொல்வனம் நவம்பர் 2019

Comments