நினைவுக்குத் தப்பிய ஒரு சொல்



மீன்கள் நீந்தும் பாதைகளின் வரைபடத்துடன்
தனக்குப் பிடித்த மீனைப் பிடிப்பதற்காக
கடலுக்குள் சென்று கொண்டிருந்தவனிடம்
பறவைகள் சொல்லிச் சென்றன
"மீன்களுக்காக மட்டும் கடல் அல்ல"

ஒவ்வொரு முறையும்
வலையில் அகப்படும் கணத்தில்
அவன் பிடித்த மீன்
பறவையாக மாறியது.
பறத்தலில்
விரித்த வலைகள் அவிழ்ந்திருந்தன.

பொறுமையிழந்து
கடலைத் தோண்ட ஆரம்பித்தான்
அந்த மீனைத் தவிர
எல்லாமும் வந்து கொண்டிருந்தன.

கடலைக் கடந்தவர்களிடம் கேட்டு
வரைபடங்களை
மீண்டும்
மாற்றி வரைந்த பின்பு
கடலுக்குள் குதித்தான்

அவன் வீட்டின் ஒவ்வோரு அறையும்
இன்னொரு பிரதியைப் போல
ஆழத்தில் மிதந்து கொண்டிருந்தது.

ஒவ்வொரு பொருளாக
பார்த்துக் கொண்டே வந்தவன்
பறவையாக மாறும் மீன்
எங்குமே இல்லாமல்
இன்னும் இன்னும்
மூழ்க ஆரம்பித்தான்

கடலுக்கு அடியில்
இன்னொரு வழியில் வெளியேறி
மீனை மறந்து
பறந்து கொண்டிருந்தான்.

பதாகை இணைய இதழ் ஜூன்-2019 

Comments