மழை விற்பவன்



மழையை விற்கலாம் என்று
புதிதாகக் கடையைத் திறப்பவன்
எந்தப் புள்ளியிலிருந்து
மழையை அறுப்பதெனத் தெரியாமல்
அதன் பின்னே ஓடிக்கொண்டே இருக்கிறான்.

நெகிழிப் பைகள் தடையிருந்ததால்
வெறும் கையில் மழை வாங்க வந்தவர்கள்
சிந்தாமல் மழையை அறுத்துத் தரும்படி
திட்ட ஆரம்பிக்கிறார்கள்.

கூரான கத்தியை மழைக்குள் செருகுகிறான்
நழுவுகிற மழையைப் பார்த்து 
மண்ணில் ஒட்டிய மழை வேண்டாம்
நேரடியாகப் பிடித்த
உயிர்போகத் துடிதுடிக்கும் மழை
மிகவும் ருசியாக இருக்குமென்கிறார்கள்.

பக்கவாட்டில் மழையை வெட்டுகிறான்
அவன் ஆடைகளை யாரோ
மண்ணுக்குள்ளிருந்து இழுக்கிறார்கள்
தலைகுனிந்து நிற்பவனின்
நிர்வாணத்தை
மூடுகிறது மழை.

மழையை விற்கமுடியாதவன்
கடலுக்குள் குதித்து மறைகிறான்.

கோபத்தில்
கடையைப் பிளக்கும் கூட்டம்
வெறியில் மழையைப்
பச்சையாகக்  கடிக்க ஆரம்பிக்கிறது
ஓட்டைப் பற்கள் வழியே தப்பிக்கிறது மழை.

மழையைக் கொன்று பிடிக்க
ஆயுதங்களேந்திய பெரும்படை
தூசிபறக்க விரைகிறது
மேல்நோக்கிப் பின்வாங்கும் மழை
மேகங்களில் மறைகிறது.

வெறும் கைகளுடன் வீடு திரும்பியவர்கள்
தண்ணீரைத்
திரும்பத் திரும்ப அடிக்கிறார்கள்
அது
முகங்களை முத்தமிடுகிறது.

--ஆனந்த விகடன் ஜூன் -2019

Comments