சோமாலியா

தண்ணீர் கொஞ்சம் கிடைக்கும்
அரிசியும் உண்டு
நாற்பது வயது கிழவனை
மணப்பது குறித்து யோசிக்காதே
திருமணம் செய்து
எப்படியாவது இங்கிருந்து ஓடி விடு
அங்கு போய் செத்து விட்டால்
எனக்கும் நிம்மதி.
செத்த ஒட்டகங்களின் எலும்புகள் உருக்கும்
ஆப்பிரிக்க சூரியன்
உன் சதையைக் குடித்த பிறகும்
நீ பெண் போலவே இருக்கிறாய்
நாளைக்கு உனக்கொரு மகள் பிறந்தால்
தண்ணீர் எங்கே எனக் கேட்பாள்
அவளையும் நீ
திருமணம் வாயிலாக நாடு கடத்து
எப்படியும் ஒருநாள்
நைல் தொட்ட பின் மடியும் நம் வம்சம்.
வரிசையாக செத்துக் கிடக்கும்
உன்னோடு விளையாடிய
நம் கிராமத்துக் குழந்தைகள்
எலும்புகளாக
உன்னை வழியனுப்புகிறார்கள்.
சுடுமணலில் வெந்து பொசுங்குகிறது
உன் கண்ணீர்.
தண்ணீர்
தண்ணீர்
தண்ணீர்
அலைகிறது உன் நாக்கு.
உன் கணவன்
வறட்சியிலும் உறவுக்கு அழைப்பான்
வலித்தாலும் அழாதே
தண்ணீர் குடித்த பின்
செத்துப் போ
அது போதும்.

கொலுசு - ஜூன் 2019

Comments