முதுகுகளின் உரையாடல்


நாம் சண்டையிட்ட முகங்களை திருப்பியபடி
துயில்வதற்கு முயன்றிருந்தோம்
முதுகுகள் உரையாட ஆரம்பித்தன

தொடுதல் தவிர
அவற்றிடம்  வேறு எந்த சொல்லும் இல்லை
விலகிக்கொள்ளும் உடல்களின் சலிப்பில்
சுழித்தோட ஆரம்பித்தது
பாவனையற்ற பிரியத்தின் நதி

கண்டிப்புகளை வேலியாக்கி
சீனப்பெருஞ்சுவர் போர்வைகளை
பரப்பி வைக்கிறாய்
கார்த்திகையின் குளிரில்
உடைகின்றன சுவர்கள்

துருத்திய என் எலும்புகள்
மோதிய உன் முதுகில்
கொந்தளிக்கிறது கடல்

என்னைத் திட்டுகிறாய்
தீபாவளிக்கு வெடிசத்தம் கேட்டபடி
கண்மூடித் தலைகுளிக்கும் சிறுவனின்
குதூகலமாக
இளவெந்நீர் ஊற்றாகிறது
இடையே பாய்ந்த நதி

கெஞ்சிய முதுகை
உதைக்கும் முதுகு
தூக்கியெறிகிறது

சொற்களற்ற பாறைகள்
நெகிழ்ந்து மோதி
கரைய ஆரம்பிக்கின்றன

சுற்றிச்சுற்றி நடந்து வந்த
கண்கொத்தும் துயில்பாம்பு
முதுகுகளின் உரையாடலில்
சோர்ந்து தூங்க ஆரம்பித்து விட்டது.

தூக்கம் வருகிறது
தூக்கம் வருகிறது
என
எரிச்சலாக மாறுகின்ற முகங்களை
திரும்ப வைக்காமல்
வெல்கின்றன முதுகுகள்.

Comments