குருவிகளின் இரவுப் பேச்சு



பல இரவுகளை
கதவுகளுக்குள் ஒளித்து வைத்திருக்கும்
வீடுகளின் பகல்கள்  குறித்து
பேசிக்கொண்டிருக்கின்றன குருவிகள்

அலகுகளில் உமிழப்படும்
ரகசியங்களின் ஒலிக்குறிப்புகள்
இலைகளால் உறிஞ்சப்படுகின்றன

ஒளிந்து கொள்ளும்
முதல் இரவுக்குள்
புதிதாக நுழைந்த இரை
நழுவி அழும் பொழுதை
திமிறும் பசி
கொல்லும் வேகத்துடன் பாய்வதைக் கண்ட குருவிகள்
காய்ச்சலில் முனகின

இரண்டாம் இரவுக்குள்
தனித்தனியே சேர்ந்த அலகும் மீனும்
ஒன்றையொன்று கவ்வி உண்ணும்
வினோத வயலாக மாறியிருந்த வீட்டில்
வாய் நனைத்த குருவிகள்
தீப்பிடித்த கண்களோடு
நடுங்கிக் கொண்டிருக்கின்றன

மூன்றாம் இரவுக்குள்
உதிர்ந்த இறகு
ஒரு வீட்டின் படுக்கையறை ஜன்னலில்
எரிந்து சுழலத் தொடங்கிய கதையை
கீச்சிட்ட குருவியின் அலகை
இலைகளால் மூடின
மற்ற குருவிகள்

குருவிகளின் கண்கள் நல்லவை
எதையும் பெரிது படுத்தாதவை
என
வீடுகளின் பகல்கள்
ஒளித்துவைக்கும் இரவுகளிடம்
மீண்டும் சொல்ல ஆரம்பித்தன.

- இரா.கவியரசு

நன்றி : கீற்று இணைய இதழ் 24.01.2019

Comments