கண்மணிப் பாடல்


நிலைத்தலற்றுப் பறக்கும்
கண்மணியின் பார்வைகள்
தாவிக்கொண்டே செல்கின்றன

ஒரு முறை அப்பாவைப்பார்
என்று கேட்கும் போதும்
அவள்
பறந்து கொண்டேதான் பார்க்கிறாள்

செல்ல முத்தம் என்றபோதும்
இதழ்களின் அச்சு
எல்லாக் கன்னத்திலும்
ஒன்று போலவே இருக்கிறது

வாசலுக்கு செல்லக்கூடாது
வாகனம் வரும் என
நான் வழிமறிக்கும் போதும்
காற்றாகி
கால்களுக்கு அடியில்
நுழைந்து வெளியேற முடியும் அவளால்

கண்டிப்புகளின் சொற்கள்
கட்டெறும்புகளாய்
அவள் காதில் நுழையும் முன்
தித்திப்பு மழலை குழைந்து நிறைகிறது
விடுதலையை எடுத்துக் கொள்கிறாள்

கோபத்தில் உடல் பற்றி எரியும் போது
தோளைணைத்துக் கொஞ்சும் கணத்தில்
காலால் உதைத்துக் கடல் ஊற்றுகிறாள்

பக்கத்தில் இருந்தாலும்
பத்து முறை அப்பா அப்பா என்றழைத்து
என்னிலிருந்து உயிர் நகலெடுத்து
அவளைச் சுற்றி உட்கார வைத்து
கலைடாஸ்கோப் ஆக்குகிறாள்

நேர்க்கோடுகளை வளைப்பது
ஒழுங்கமைப்புகளை சிதறடிப்பது
திட்டமிடுதல்களை உடைப்பது
எல்லாவற்றுக்கும்
யாரிடமிருந்தோ அழைப்பு வருகிறது
இவளுக்கு

ஒரு பனித்துளி என் மகளென
கைகளுக்குள் பொத்தி வைக்கும்
என் பிரியங்களின் நடுக்க இடைவெளியில்
காற்றாவியாகி
மேலே பறந்து வானமாகி
குழந்தை மட்டுமே
நான் என்கிறாள்.


காற்று வெளி - ஜனவரி 2019 

Comments