காலத்தின் கவிக்குரல் - கவிஞர் குட்டி ரேவதி நேர்காணல்கள் நூல் குறித்து

 




குட்டி ரேவதி தமிழின் மிகச்சிறந்த கவிஞர்களில் ஒருவர். "பூனையைப் போல் அலையும் வெளிச்சம்" (2000) தொடங்கி சமீபத்திய "ஒளியின் முகம்" (2025) வரை பதினெட்டுக்கும் மேற்பட்ட கவிதைத்தொகுப்புகள், சிறுகதைகள், நாவல் என விரிவான படைப்புலகம் அவருடையது. பெண் படைப்பாளிகளுக்கென பிரத்யேகமாக வெளிவந்த பனிக்குடம் சிற்றிதழின் ஆசிரியர். பாடலாசிரியர், ஆவணப்படங்கள் மற்றும் சிறகு, கோடை இருள் ஆகிய திரைப்படங்களின் இயக்குநர் என இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர்.ஒவ்வொரு படைப்பாளிக்கும் வாழ்வென்பது மாபெரும் ஆட்டக்களம். நமக்குத் தெரிவதெல்லாம் அவர்கள் வெற்றிக்கோட்டைத் தொட்டு நிற்கும் இடம் மட்டுமே. ஓடிய பாதையையும், விழச் செய்யும் தடைகளையும், தோற்கச் செய்வதற்காக கூச்சலிடும் கூட்டத்தையும், பரிகாசத்தையும், குருதி கசியும் பாதங்களின் வலியையும் காண வேண்டுமென்றால் சிறிது பின்னோக்கி பயணிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களது வாழ்வை சிறிதளவேனும் உணர இயலும். கவிஞர் குட்டி ரேவதியின் நேர்காணல்கள் அத்தகைய காலத்திற்குள்ளாக நம்மை அழைத்துச் செல்கின்றன. ஒவ்வொரு உரையாடலும் அவருடன் நேரடியாக அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்கும் அனுபவத்தை அளிப்பதுடன் அவரது படைப்புலகில் இதுவரை நாம் பிரவேசிக்காத இடங்களைத் தெள்ளத் தெளிவாக்குகிறது. கவிதை குறித்த உரையாடலொன்றில் " கவிதை வெளியிலிருந்து கிடைக்கும் ஒரு கருவின் வழியாக உருவாவதில்லை. புறவெளியையும் சேர்த்த அனுபவத்தில் உள்ளிருந்து எழுவது " என்கிறார். அதிலிருந்து அவரது கவிதைகளின் வீரியமும், எரிமலைக் குழம்பான லாவாவைப் போன்ற மொழியும் எதனால் உண்டானது என்று கண்டுகொள்ள முடிகிறது. ஒவ்வொரு பதிலிலும் பாலைச் சூரியனின் உக்கிரம். உண்மை சுட்டுப் பொசுக்குகிறது. சித்த மருத்துவத்தில் தொடங்கி, கவிதை, சிறுகதை, நாவல், திரைப்பாடல்,இயக்குநர் என காலந்தோறும் வளர்ந்து மாபெரும் ஆளுமையாக உருவெடுத்து இருக்கும் அவரது கனவும், அதையொட்டிய செயல்பாடுகளையும் இதில் காணமுடிகிறது. இலக்கியத்தில் அவர் இயங்கத் தொடங்கிய காலத்தில் இருந்த ஆதிக்கச் சூழல், எதிர்ப்புகள் அதைக் கடந்து கவிதையில் முன்னேறிய விதம் எல்லோருக்குமான பாடம். பெண்ணியம், பௌத்தம், அம்பேத்கரியம், தமிழ் ஈழம், உடலரசியல் குறித்த அவரது பார்வையும் தீர்க்கமும் நாம் இதுவரை உடுத்தியிருந்த பழமையைத் தோலுரிக்கிறது. தமிழிசை குறித்த உரையாடலில் " ஆய்வாளர் தொ.பரமசிவன் அவர்களின் கூற்றுப்படி தமிழரின் முக்கியமான இரண்டு விஷயங்களான தமிழிசையோடும், தமிழ் மருத்துவத்தோடும் என்னை தற்செயலாக இணைத்துக் கொண்டேன். அந்த பிடிமானத்தை விட்டுவிடாமல் இவ்விரண்டையும் அறிந்து கொள்வதிலும், கொண்டு சேர்ப்பதிலும் என்னைக் கூடுதலாக தகுதிப்படுத்திக் கொள்கிறேன். இயங்கி வருகிறேன் " என்றும் சொல்கிறார். அதன் தொடர்ச்சியாக தமிழிசையை இயக்கமாக கருணாமிர்த சாகரம் நூலை ஆபிரகாம் பண்டிதரின் சாதனையை பரப்புவதன் வாயிலாக தொல்தமிழின் பெருமையை மீட்டெடுக்கும் பணிகள், ஆவணப்படம் உருவாக்கித் திரையிட்டு வருவது, எல்லோருக்கும் அதைக் கொண்டு சேர்ப்பது என்ற மாபெரும் பணியைக் குறித்து விளக்குகிறார். திரைத்துறையில் இயங்கும் போது உள்ள சவால்கள் அதற்கு மேலாக அங்கு தகுதியிருந்தால் மட்டுமே தொடர்ச்சியாக இயங்க முடியும் சூழல் குறித்தும் விரிவாகப் பேசியிருக்கிறார். தமிழில் முதன்முதலாக ஒரு பெண் படைப்பாளிக்கு இவ்வாறான நேர்காணல்களைத் தொகுப்பதன் வாயிலாக கவிஞர் குட்டி ரேவதியின் படைப்புலகத்தின் கதவுகளை எல்லோருக்கும் மீளவும் திறந்து வைப்பதை இந்நூலின் தொகுப்பாசிரியர் நா.கோகிலன் செய்திருக்கிறார். வாசிக்க வேண்டிய நேர்காணல் நூல்களில் இது முக்கியமான இடத்தில் என்றும் இருக்கும்.


Comments