ரகசியம்
அந்தியின் ஆன்மா
வெளியேறிக் கொண்டிருக்கிறது
எச்சப்தமும் எழுப்புவதில்லை
சாம்பல் மேகங்கள்
நிராதரவின் வெளிச்சம்
பீறிடத் துவங்கி
விழுங்கிக் கொள்கிறது
குட்டி மேகத்தை
தப்பிக்கும் வழி தெரியாத
வளர்ந்த மேகம்
காற்றடிக்காத திசையில்
பாடிக் கொண்டிருக்கிறது
பாசாங்குப் பாடலை
ஒரு துளியும் மீதமின்றி
உறிஞ்சப்படும் நீலத்துக்காக
காத்திருக்கும் வௌவால்கள்
பெரிய மேகங்களுக்கு அடியில்
அரற்றி விரிக்கின்றன இறக்கைகளை
அந்தந்த இடங்களிலேயே
காணாமல் போவதற்கு
பழக்கப்படுத்தப்பட்டிருப்பதுதான்
சாம்பல் மேகங்களின்
சொல்லக்கூடாத ரகசியம்.
Comments
Post a Comment