முக்தியடைதல்

 

வயிற்றில் நீல ஆடை அணிந்து 
ஒற்றைத் தாளுடன் துயில்பவனை 
மூன்றாண்டுகளாக கேட்பாரில்லை  
குண்டான தோழர்கள் 
நெருக்கும் போதெல்லாம் 
கதறி அழுதிடுவான் 
ஒவ்வொரு முறை 
பீரோவைத் திறக்கும்போதும் 
இன்று நான் 
வெளியே சென்று விடுவேன் 
தோழர்களிடம் 
பெருமிதத்துடன் சொல்லுவான் 
பூட்டிய பிறகு 
நிறையும் இருளில் 
ஒரே ஒரு தாள் உடலை 
இன்னும் குறுக்கிக் கொள்ளுவான் 
இன்று பார்த்து வந்திருக்கிறது 
ராஜ வாழ்வு 
உடனே கேட்கிறார்கள் 
மிக மிக அவசரமாம் 
எல்லா அடுக்குகளிலும் பயங்கர களேபரம் 
தூசியை ஊதியபடி 
தயார் செய்து கொள்ளும் ஒல்லிப்பையன் 
எட்டிப்பார்க்கிறான் பெருமிதத்துடன்
அழகாகத் திலகமிட்டபின் 
அவனுக்கடியில் வைக்கப்படுகிறது
மிகப்பெரிய ரெக்கார்டு 
பலூனைப் போல உப்பியதால் கத்துகிறான் 
"நானும் குண்டாகி விட்டேன் போங்கடா ! "
மர்மமாக  சிரிக்கிறார்கள் பீரோவிலிருக்கும் தோழர்கள் 
கையொப்பங்கள் நகர்த்தும் எஸ்கலேட்டரில் 
உயர்ந்த இடம் நோக்கிச் செல்பவன் 
முற்றாக்க முடியாத 
காவியமாகிடும் கனவிலிருக்கும்போது 
சொல்லாமல் உருவப்படுகிறது  மிகப்பெரிய ரெக்கார்டு 
நடவடிக்கைத் தேவையில்லையென 
சாதாரணமாக
முற்றுப்பெறுகிறது 
வாழ்வு. 


வாசகசாலை - டிசம்பர் - 2020

Comments