நோய்த்தொற்று

ஒவ்வொருவருக்கும் சொல்லப்படுகிறது
நோய்த் தொற்று 
கண்டறியப்பட்டவரின் பெயர் 
கிருமி நாசினியால் குளிப்பாட்டப்படுகிறது 
அவர் 
கடைசியாக அமர்ந்திருந்த நாற்காலி 
நாற்காலியை எரித்துக் கடலில் வீசிவிடலாம் 
உப்புநீரில் கிருமி வளராது என்கிறார்கள் 
சக நண்பர்கள் 
லிப்டில் 
அன்று அவருடன் இறங்கியவர்கள் 
இன்னும் இறுக்கமாக 
தங்களை மூடிக் கொள்கிறார்கள்
எப்படியோ நுழைந்து 
தொந்தரவு செய்யும் காற்று
அவரது நாசியிலிருந்துதான் வந்திருக்குமென 
அடித்து விரட்டுகிறார்கள் 
அவர் ஏன் வந்தார் 
வீட்டிலேயே இருக்கக்கூடாதா 
இவ்வளவு மோசமானவரை 
நாங்கள் பார்த்ததே இல்லை 
பேரொலிகள் எழும்போது 
திகிலெழுப்பியபடி பறக்கின்றன வௌவால்கள்
நீண்ட அறையெங்கும் 
வழிந்து நிரம்பும் பதற்றம் 
கால்களைக் கவ்வி ஏறுகிறது 
எல்லா இடமும் 
அவர் நடந்த இடம் போல மாறுகிறது 
பார்க்கும் பொருளனைத்தும் 
அவர் தொட்டதாக மின்னுகிறது 
எல்லோருக்கும் வந்துவிடுகிறது 
கிருமியைக் கண்டறியும் கண்கள்
குழந்தைகளுடன் விளையாடுபவர்கள்
தனி அறைக்குள் ஓடுகிறார்கள் 
அறைகளற்ற வீட்டில் 
ஒளிந்து கொள்பவனை  
கட்டிக்கொண்டு சிரிக்கின்றன குழந்தைகள்
மீண்டும் மீண்டும் 
கைகளைக் கழுவுகிறார்கள் 
ஆனாலும் அவர் 
இருந்து கொண்டே இருக்கிறார் 
மனதை விட்டு அகலாத அவரை 
பத்தாவது மாடியிலிருந்து 
ஐம்பது பேர் தூக்கி எறிகிறார்கள் 
அவர் 
நான் எதுவுமே செய்யவில்லை 
மாத்திரை வாங்க மட்டுமே சென்றேன் 
கெஞ்சிக் கொண்டே இருக்கிறது அவர் குரல் 
தோய்த்தொற்று கண்டறியப்பட்டவர் 
ஐம்பது உடல்களாக கீழே விழும் போது 
கைகளை மீண்டும் 
கழுவத் தொடங்குகிறார்கள் 


நடுகல் ஜூலை -2020

Comments