மச்சங்களோடு பேசுபவன்



அயர்ந்துறங்கும் பயணிகளிடையே 
ஏதோ ஒரு வேகத்தடையில்
அவளது விலாவின் ஓரத்தில் 
விழிக்கிறது ஒரு மச்சம் 
நீர் அருந்தும் போது 
ஏதேச்சையாகப் பார்த்தவன் 
நடுக்கமுற்றுப் பின்வாங்குகிறான் 
மச்சம் இப்போது 
நெற்றி மையத்தில் வட்டமடித்து 
உள்ளே இறங்குகிறது 
இப்போது அவர்களிடையே ஒளிர்கின்றன இரண்டு மச்சங்கள்
பேசத் தொடங்குகிறான் 
வெளியே சுழலும் மச்சத்துடனும் 
உள்ளே குடையும் மச்சத்துடனும் 
யாராவது பார்த்துவிட்டால் 
உதை விழுவதற்கு 
உத்திரவாதம் உள்ளது என்கிறான் 
ஆனாலும் விடமறுக்கிறது மச்சம் 
உள்ளே நீ என்னுடன் பேசுவதை
வெளியே நான் பார்க்க வேண்டும் 
கண்களை மூடினால் 
காட்டிக் கொடுத்துவிடுவேன் என மிரட்டுகிறது 
வெளி மச்சத்திலிருந்து 
திடீரெனத் தோன்றுகிறார் 
மனநல மருத்துவர் 
உள்ளே என்ன பேசுகிறாய் 
உள்ளே என்ன பேசுகிறாய் 
மீண்டும் மீண்டும் 
அதே வரியில் சுழலவிடுகிறார் இசைத்தட்டை 
"மச்சத்திலிருந்து நாற்றிசை வரைந்தேன் 
ஒவ்வொன்றும் 
உடலைக் கொல்லும் அம்பு 
விழுங்கிக் கொண்டிருந்தேன் உன்னை
கடைவாயில் தெறித்த 
துளிக்குருதி எங்கே சென்றது 
ஆம் ! 
மச்சமாக துருத்திக் கொண்டிருந்தாய் 
உன்னிலிருந்து  
பிற மச்சங்களைத் தேடுவதற்காக 
அலையும் மிருகமொன்றின் கண்களை 
காட்டிலிருந்து எடுத்து வந்தேன் 
ஒவ்வொன்றாக வேட்டையாடினேன் 
மச்சங்கள் கூட்டமாக சிரித்த போது 
புதைகுழியில் விழுந்து அலறினேன் 
மச்சங்களின் ஒலி 
மச்சங்களின் ஒலி "
நாயொன்று குறுக்கே பாய்ந்ததில் 
தூக்கியடித்து நின்ற பேருந்தில் 
ஒளிந்து கொண்டது வெளி மச்சம்
மனநல மருத்துவரைத் தேடுபவன் 
உள்ளே உள்ள 
மச்சத்தின் வாயை மூடுகிறான் 
அடங்காமல் ஓடுகிறது 
அதே இசைத்தட்டு 


-நடுகல் ஜூலை -2020 

Comments