உதை வாங்கும் கதவு

படாரென்று கதவைத் திறக்கிறது காற்று
தூங்குகிறாள் மகள் என்று
சொல்லவா முடியும்
இருந்தாலும் நேற்று சொன்னான்
மெதுவாக வா
சப்தமிடாமல் கதவைத் திற என்று 
சொன்னதை மறந்து விடுகிறது
படாரென்றுதான் மோதுகிறது இப்போதும்

நினைவுகளற்ற காற்றிடம்
வீட்டைப் பற்றியும்
குழந்தைகளைப் பற்றியும்
சொல்லிக் கொண்டேதான் இருக்கிறான்
நிறுத்துவதே இல்லை
அது ஒரு வியாதி
சொல்லுதல்தானே வாழ்வு

போனவருடம்
கூரையைப் பறக்கவிட்ட
புயலைக் கூட அது மறந்து விட்டது
பட்டம் விடுவதற்காக
வா என்று அழைத்தபடி
ஓடிக்கொண்டே இருக்கிறான்
தெருவில் தவழும் பட்டம்
வராத காற்றைத் திட்டுகிறது
கிழிந்த பட்டத்துடன்
வீட்டுக்குள் நுழையும் போது
புழுதி பறக்கிறது வாசலில்

எவ்வளவு சொன்னாலும் கேட்பதில்லை
நினைவிலும்  இருப்பதில்லை
அடி வாங்கப் போகிறாய் என்று
மிரட்டும் போது
"அப்பா ! காத்துப் பா
காத்து அடிக்குது பாருங்க !"
சொல்லியபடியே ஓடும் மகள்
படாரென்றுதான் உதைக்கிறாள்
வீட்டுக் கதவை

சொல்வனம் மே 2020

Comments