உலகக் கவிதைகளின் வாசல்

--உன்னைக் கவிதையாக மாற்றுகிறவன் -

 தமிழாக்கக் கவிதைகள்- 

கவிஞர் க. மோகனரங்கன் 


கவிதை எழுதப்பட்ட மொழியில்  வாசிக்கப்படும்போது மலைகளில் மோதி குறுகிய பரப்பில் எதிரொலிப்பதாக மட்டும்  நிறைவடைகிறது அதன் பயணம்.வெவ்வேறு தேசங்களுக்கு மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்கப்படும்போது  வானத்திலிருந்து வரும் குரலாக விரிவடைகிறது. ஒவ்வொரு மனத்திலும் முகம் தெரியாத கவிஞனின் கவிதை நிகழ்த்தும் மாயங்கள் வாழ்வு முழுவதையும் வசீகரமானதாக மாற்றி வைக்கிறது.  வாசிப்பவன் அந்தக் கவிதையை முத்தமிடுவதன் வாயிலாக சிலநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கவிஞனை முத்தமிட்டுத் தழுவிக் கொள்கிறான். என்னுடைய இருதயத்தை இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே நீ எப்படி உள்சென்று பார்த்தாய் என பூரிப்படைகிறான் . தேசங்களைக் கடந்து பயணிக்கும் கவிதை கவிஞன் மரித்தாலும் சதா காலங்களிலும்  வாழ்ந்து கொண்டிருக்கிறது. 

 உன்னைக் கவிதையாக மாற்றுகிறவன் தமிழாகக் கவிதைத் தொகுதியில் கவிஞர் க.மோகனரங்கன் அவருக்குப் பிடித்தமான அவரை பாதித்த கவிஞர்களின் தேர்ந்த கவிதைகளை மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கிறார்.  ஒவ்வொரு கவிஞனுக்காகவும் இருதயத்திலிருந்து  தமிழ்க் குரல் கொடுத்திருக்கிறார். யூஜின் கில்லெவியின் கவிதைக் கலை என்ற கவிதையில் 

" என்னுடைய வார்த்தைகளை 

என் குரலில் உங்களுக்குள் 

நீங்கள் கேட்கிறீர்கள் 

என்று நினைக்காதீர்கள்

இது எதிர்காலத்தை நோக்கி

நகரும் நிகழ்காலத்தின் குரல்,

உங்கள் சொந்த உடலுக்கு 

உள்ளிருந்து எழும் குரல்." 


என வரும் வரிகள் இந்த மொத்த தொகுதிக்கும் பொருத்தமானது என்று தோன்றுகிறது.எந்தக் கவிதையும் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல என ஒவ்வொரு பக்கத்திலும் உச்சபட்ச கவிதையனுபவம் சாத்தியமாகியிருக்கிறது. இக்கவிதைகளை வாசிக்கும் போது உலகெங்கிலும் நவீன  கவிதை எவ்வளவு எளிமையான நேரடியான மொழியில் அலங்காரங்களின் துணையின்றி விளங்கி வந்திருக்கின்றது என்பதைப் பார்க்க முடிகிறது. அதன் தாக்கம் தமிழ்க்கவிதைகளில் உருவான மாற்றங்களையும் உணர்ந்து கொள்ள முடிகிறது.  கவிதைகள் மீண்டும் மீண்டும்  குறிப்பிட்ட கருப்பொருட்களுடன் சுழல்வதைப் போலத் தோன்றினாலும் வகைமையில்  சொல் முறையில் எப்படியெல்லாம் புதுப்புது அனுபவங்களில் திளைத்திருக்கிறது எனக் காண்பது மெய்யாகவே வியப்பளிக்கும் அனுபவம். நிசார் கப்பானியின் வரிகள் " 


“இன்றைய உங்களது 

காதலின் ஆழம் 

நாளைய உங்களது 

காயத்தின் ஆழம் " 


எல்லாக் காலங்களுக்கும் எல்லாக் காதல்களுக்கும்  பொருந்துகிறது. எந்த ஒரு பொருளையும்  சாதாரணமாகக் கருதுவதே இல்லை கவிஞன். சின்னஞ்சிறு பூச்சி கூட மாபெரும் தரிசனத்தை அவனுக்கு அளிக்கும் என்பது “பில்லி காலின்ஸ்” கவிதை வாயிலாக சொல்லப்படுகிறது. ஒரு டன் எடையுள்ள கோவில் மணியின் மீது உறங்கும் அந்துப்பூச்சிக்காக அதீத கவலை கொள்ளும் மனம் அதனையொட்டிய போராட்டங்களையும் வளர்த்தெடுக்கிறது . வெவ்வேறு தேசங்களில் வாழ்ந்த மனிதர்களின் அப்போதைய வாழ்வு, பண்பாடு, புராதனச் சின்னங்கள், வழிபாட்டு நடைமுறைகளில் மட்டும் மூழ்காமல்  இறைவனை நோக்கிச் செல்லும் மார்க்கங்களின் கொடை, ஆட்சியாளர்களின் ஆதிக்கம், போரின் வெற்றி, தோல்வி, மரணங்கள் என ஒவ்வொன்றையும் மிக அருகில் அதிர்ச்சியூட்டும்படிக் காட்டும் கவிதைகளாலும் சிறிது தூரத்தில் கண்ணாடியில் வெளிப்படும் காட்சிகளின் பிம்பங்களினால்  சப்தமற்ற ஆனால் வலிமிகுந்த காயங்களை உருவாக்கும் கவிதைகளாலும் இத்தொகுப்பு நிறைந்திருக்கிறது. மஹ்மூத் தர்வீஷ் எழுதிய "போர் விமானங்கள் " கவிதையில் 


" போர் விமானங்கள் 

சென்று மறைந்ததும்

புறாக்கள் எழுந்து பறக்கின்றன

வெண்மையிலும் வெண்மையாக.

தமது சுதந்திரமான சிறகுகளால் 

வானத்தின் கன்னத்தைக் 

கழுவித் துடைப்பதோடு ..."


இன்றும் காசாவில் போரினால் கொல்லப்பட்டவர்களின் உடல்களுக்கு மேலே அலட்சியமாகப் பறந்து செல்லும் போர் விமானங்களை அண்ணார்ந்து  பார்த்து பயந்தபடி நிற்கும்  குழந்தையின்  கைகளைப் பிடித்துக் கொள்கிறது  இந்தக் கவிதை. வானத்தின் கன்னம் போர் விமானங்களால் கீறப்பட்டு ரத்தம் வழிகிறது. வானத்தின் கண்கள் போர் பூமியைப் பார்த்து அழுது கொண்டே இருக்கின்றன. இந்த வெண்புறாக்கள் கன்னத்தைக் கழுவித் துடைக்கின்றன. சில  கவிதைகள் வாசித்த பிறகு இருதயத்தைப் பிடித்தபடி தொகுப்பை மூடி வைத்துவிட்டு அழத் தோன்றுகிறது. இவ்வளவு பெரிய வலியை மொழிபெயர்த்து அதே எடையுடன் நம் மீது வைக்கிறார்  மோகனரங்கன். 

                                                                             °°°


ஒரு கவிதையை மொழிபெயர்க்கும் போது  கவிதை நிகழ்ந்த தேசத்துக்குள், காலத்துக்குள் கவிஞனின் ஆழ்மனத்தின் அடுக்கிற்குள் சஞ்சரிப்பவன் அதே தாக்கத்தை தன் மொழியில் உருவாக்குகிறான். கவிதை மறுபடியும் தன்னைத் தானே எழுதிக் கொள்கிறது. வார்த்தைகளின் வல்லமை சிறிதும் குறையாது இருக்கிறது. மோகனரங்கன் ஒவ்வொரு கவிதையிலும் அந்தந்த கவிஞராக உருவெடுத்திருக்கிறார். சிறிய வயதில் அட்லஸ் வைத்துக் கொண்டு வட, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பிய, ஆசிய கண்டங்களில் உள்ள தேசங்களைக் குறித்தும் வெவ்வேறு காலங்களாகப் பிரிந்திருக்கும் ஒரே  பூமியில் மனிதர்கள் இந்நேரம் என்னென்ன செய்து கொண்டிருப்பார்கள், ஒரு குழந்தை பள்ளிக்கு அழுது கொண்டே செல்வதும், வேறொரு தேசத்தில் பள்ளியிலிருந்து குழந்தைகள் விடுதலையடைந்து துள்ளிக்குதித்து வெளியேறுவதையும் நினைத்துப் பார்ப்பேன். எத்தனை வகையான வீடுகள், ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு வாழ்வு, எத்தனை விதமான கவிஞர்களின் கவிதைகள் அது தரும் எல்லையற்ற விசித்திர அனுபவங்கள் எல்லாவற்றையும் தொகுத்துப் பார்ப்பதற்கு இத்தொகுதி மாபெரும் வாய்ப்பளிக்கிறது. மேலும் இது என்னுடைய கவிதை, அது அவருடைய கவிதை என நொடிக்கொரு முறை அடையாளத்தைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடும் சூழலில் இந்தத் தொகுப்பில் உள்ள கவிஞர்களின் பெயர்கள் நினைவில் தங்காமல் அவர்களது கவிதை மட்டுமாகவே ஆழமாக ஊடுருவி இதயங்களை ஆக்கிரமிக்கிறது. கவிதை குறித்து நாம் வைத்திருக்கும் சம்பிரதாயங்களை உடைக்கிறது.  இத்தொகுதியில் மனதுக்கு நெருக்கமான மேலும் சில கவிதைகளுக்குள் பயணித்துப் பார்க்கலாம்.



   கவிஞன் ஒரு வகையான உளவாளி எல்லாவற்றையும் எல்லோரையும் உற்று கவனிக்கிறான் மனதால் தொட்டு உணருகிறான். அவன் எப்படி நமது  ரகசியங்களை, வலிகளைக் கண்டறிந்தான் என்று நாம் ஆச்சர்யம் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.   ஆனி செக்ஸ்டன் கவிதையில் 


“ எழுதும் ஒரு பெண் 

எப்போதும் கூடுதலாக உணர்கிறாள்,

அந்த பித்து நிலைகளையும் 

அடுத்து நடக்க விருப்பதற்கான முன்னறிகுறிகளையும் !..

……………………………….

………………………………

ஓர் எழுத்தாளர் அடிப்படையில் 

ஓர் உளவாளி “ 


அன்றாடங்கள் கவிஞருக்குப் போதுமானதாக இல்லை. நட்சத்திரங்களை எச்சரிக்கும் அளவுக்கு உலகைக் கடந்து செல்கிறார்கள். 


     மிகப்பெரிய கவிதைகள்தான் ஆழமாக உரையாடும் என்பதில்லை குறுங்கவிதைகள் காட்டும் தரிசனம் அதை விடவும் மேலானது. வானத்தை நீலமாக்கிப் பரவும் ஒளியைப் போலவே காகிதத்தில் ஒரு புள்ளியில் துல்லியமாகக் குவிந்து பற்றியெரியச் செய்யும்  சூரியக் கதிர் ஆழமாக வினைபுரிவதாக இருக்கிறது. சார்லஸ் சிமிக் கவிதையில் 


“ குறுங்கவிதை என்பது 

இருண்ட பிரபஞ்சத்தில் 

எரியுமொரு தீக்குச்சி “ 

என்கிறார். தீக்குச்சிதானெனினும் உரசலும் பற்றுதலும் உன்னதமானது. சுகுமாரன் கவிதையைப் போன்று புகைந்து கொண்டே இருப்பதை விட ஒரு கணமேனும் பற்றி எரிவதே மேல் என்பதையும் இங்கே இணைத்துப் பார்ப்பது வேறொரு அனுபவத்தை அளிக்கிறது.


    இத்தொகுப்பில் கவிதை குறித்து எழுதப்பட்ட எல்லாக் கவிதைகளும் கிளாசிக் வகைமையில் அடங்குகின்றன. போலியாக நாம் செய்து வைத்திருக்கும் கவிதை குறித்த  வகைபாடுகளை சிதறடிக்கின்றன. கவிதைக் கலையைக் கற்றுக்கொள்ள குறுக்குவழிகளைத் தேடுகிறவர்களுக்கு ஒரு எச்சரிக்கையைப் போல இருக்கிறது ரிச்சர்ட் சிகெனின் கவிதை 


“ அவர்கள் தொடர்ந்து 

கவிதையின் அர்த்தம் என்ன?

கவிதையின் அர்த்தம் என்ன ?

என்று என்னிடம் கேட்கிறார்கள்.

…………………………………………

ஏனென்றால் கவிதைக்கு முற்றான 

அர்த்தம் என்று ஒன்றுமில்லை 

அவை குறிப்புணர்த்துகின்றன

அவை நிகழ்கின்றன

அவை நினைவுகூர்கின்றன

அவ்வளவுதான்.” 


என்ன எப்படி எதை என்றெல்லாம் ஆவலுடன் காத்திருப்பவர்களுக்கு கவிதை “ அவ்வளவுதான்” என்று பதிலளித்து விட்டு மாயமாகிவிடுகிறது. புறவயமாக கவிதைகளை விசாரிப்பவர்களை அது பகடி செய்து விளையாடுகிறது. 


       17 வயதுக்குட்பட்ட 20000 குழந்தைகள் காஸாவில் கொல்லப்பட்டிருப்பதாகவும் ஊட்டச்சத்து குறைபாட்டினாலும், மருந்துகள் இல்லாமலும் இறக்கிற குழந்தைகளின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டிருப்பதாக செய்தி வழியாக மட்டுமே நாம் அறிந்தோம்.   இறப்பின் வலி இன்னும் அகலாத சூழலில் இன்று ஈரான் மீது அமெரிக்கா இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் ஒரு பள்ளியில் முந்நூறு குழந்தைகள் குண்டுவீச்சினால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.32 வயதான பாலஸ்தீன கவிஞர் ஹிபா அபு நடா இஸ்ரேலிய குண்டுவீச்சில் பலியானார். போரின் கொடூரங்களை எழுதிக் கொண்டிருக்கும்போதே கவிஞர்களும் கொல்லப்படுவதை என்னவென்று சொல்வது.    முகமது எல் குர்த் கவிதையில் 


‘ மருத்துவமனையில் 

பணியிலிருந்த அந்தச் செவிலி 

எதிர்பாராத வருகையாளரைக் கண்டு 

திடுக்கிட்டுப் போனாள்.

செவிலியின் கணவன் சடலம் 

தள்ளுவண்டியில் வந்து சேர்ந்தது.

…………………………………………….

…………………………………………….

ஒருவேளை நாம் ஒன்றாகச் சேர்ந்து 

இறந்துபோக வேண்டியிருந்தால் 

இன்றிரவு கூடிக் 

குடும்பத்தோடு மரித்துப் போகலாம் 

என்றுதானே கூறியிருந்தேன்” 


மரணங்கள் மிகச் சாதாரணமாக நிகழ்கின்றன. இறந்தவர்களை அடையாளம் கண்டு சொல்லவோ, அவசர ஊர்தியில் இல்லத்திற்கு எடுத்து வரவோ இயலாத அசாதாரணமான சூழலில் இந்தக் கவிஞர் இறந்த கணவனிடம் பேசும் செவிலியின் குரலில் யாருடன் உரையாடுகிறார். ஒட்டுமொத்த மானுடத்திடம் இல்லையா ? 



  ரேமண்ட் கார்வர், ஆடம் ஜகாஜெவ்ஸ்கி, மிலரேபா,ரெய்னர் மரியா ரில்கே, அப்பாஸ் கியாரெஸ்தமி என 73 கவிஞர்களின் கவிதைகள் இத்தொகுப்பில் இருக்கின்றன. இந்தக் கவிதைகளின் வாயிலாக ஒவ்வொரு கவிஞரையும்  தேடி வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதும் அதன் வழியாக மொழி, தேசம் கடந்து உலகக் கவிதைகளின் வாசகனாக அந்தப் பேரனுபவத்தை அடைபவனாக அவனை மாற்றுவதும் இத்தொகுப்பு ஆற்றும் மாபெரும் பணியாகக் கருதுகிறேன்.





Comments