சமன் குலைவு
இயக்கம்
நீண்டகாலத்துக்கு நன்றாகவே
நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது
யாரும் அறியாமல்
குடிபுகுந்து ஆள்கின்றன
பாவனைகளின் தெய்வங்கள்.
சகிக்கமாட்டாமல்
ஒரு பக்கத்துக்காலை
வாரிவிடத் தோன்றுகிறது.
"எங்காவது போய்த்தொலை"
காதலர்கள் ஏற்றி வைக்கிறார்கள்
சமன் குலைவின் சரவெடித் திரியை.
இன்னொரு காலை உடைக்கும்
உன்னத நேரமிது.
பிரிந்தவர்கள்
உணவகத்தில் சந்திக்கும்போது
கட்டாயம் வந்திடுவான் சொந்தக்காரன்
இன்றிரவு அடிதடி சரவெடி
நிச்சயம் உண்டு.
மூன்றாவது காலைச் சுரண்ட
வலுவான காரணங்கள் வேண்டுமே.
போன் செய்யும் போதெல்லாம்
'பிஸி' டோன் ஒலிக்கட்டும்.
வாட்சப் அழைப்புகளை
மழைக்காற்று கொரகொரவாக்கட்டும்.
ஒன்று மட்டும் உயரத்திலிருந்தால்
நாங்கள் என்ன தக்காளித் தொக்கா ?
உடைந்த மூன்று கால்களும்
காத்துக் கொண்டிருக்கின்றன.
மறுமுறை சந்திக்கும்போது
முதல் வாக்கியமே
"எவன் /எவள் கூட
என்ன செய்து கொண்டிருந்தாய்?"
ஒரேடியாக ஒழித்துக்கட்டும் போது
அலாதி ஆனந்தம்தான்.
எல்லாக் கால்களும்
சமமாகி விட்டனவா ?
பாவம் காதலர்கள்
இறுகத் தழுவி
அழவைத்துவிட்டால்
எல்லாமும்
புதிதாகத் தொடங்கிவிடும்.
கூச்சலிட்டபடியே வானில் ஓடுகின்றன
பாவனைகளின் தெய்வங்கள்.
மறுபடியும்
இயக்கம்..........
.jpeg)

Comments
Post a Comment