மாரிலடிக்கும் ஒப்பாரி





கால்வலிக்க நின்று கொண்டிருக்கிறார்கள்

துக்கத்துக்கு செல்லும் தாய்மார்கள். 

தொங்கு பட்டையை விட்டுவிட்டு 

மாரிலடித்துக் கொண்டு 

அழத் தூண்டுகிறது.


ஒவ்வொரு நிலையத்திலும் 

கசகசத்து ஏறுபவர்களால் 

பேசவும் பேசமுடியாமலும் 

கத்தரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.


யார் முகமும் தெரியவில்லை

யாருக்கும்.  


இறந்தவளின் ஊர் நிலையம் 

நெருங்க நெருங்க

ஒவ்வொரு தொங்குபட்டையிலிருந்தும்

ஆவேசத்துடன் 

பொங்குகிறது 


அடக்க முடியாமல் 

தொங்கு பட்டையை விட்டு 

முதலிலொருவள் மாரிலடிக்க 

ஓங்கி எழுகிறது 

ஒப்பாரி. 

Comments