ஒவ்வொரு இலையாக
இந்த இடத்தில் வந்து
அமர்ந்துற்ற பொன்விதியால்
ஆயிரமாயிரம் மனிதர்களின் தலையைத் தொட்டுத் தொட்டு விம்முகிறது
அம்மரம்.
தலைகள் என்றும் தீருவதில்லை.
விழுதூஞ்சல் ஆடுகிற குழந்தைகளும்
இழுத்துச் செல்லப் படுகிறார்கள்
காலந்தோறும்.
நிற்கவே கூடாத வாகனங்களும்
அனிச்சையாக
ஓடிக்கொண்டே நடக்கப்பழகிவிட்டவர்களும்
சிவப்பு மஞ்சள் பச்சைக்காகவே
நேர்ந்துவிடப்பட்ட ரயில்களும்
மொய்த்துக் கிடக்கும் நிலையத்தின் முன்பு
மரமாக வாழ்வதென்பது
ஒவ்வொரு இலையாக தலைதிருகி
கொன்று புதைப்பது
காலாவதியாவதற்காகவே
தூசிக்காற்றை
முகர்ந்து முகர்ந்து
உயிர்த்தைலத்தை
பலியிடுவது.
Comments
Post a Comment