உலோக நதி

 




நீட்டியும் மடங்கியும் 

உள் சுழன்று 

ஓடிக் கொண்டிருக்கிறது.

வாரிச் சுருட்டி இழுத்துவிடுமென 

கரையிலேயே நிற்கிறாள் அம்மா 

வெகுநேரமாய். 

"செத்து விட மாட்டாய் 

வந்து தொலை "

 கத்துகிறான் 

கீழிறங்கிவிட்ட மகன்.

விரைகின்றன 

சூட்கேஸ் படகுகள் 

முன் வைப்பதும்

பின் வாங்குவதுமாக 

நடுங்கிக் கொண்டிருக்கிறது 

ஒரேயொரு பாதம். 

கரைகளின் 

கருப்புப் பட்டையைப் 

பிடித்தபடி 

நீந்தும் சிறுமி 

கடைசிப் படி 

பூமிக்குள் இழுக்கும்போது 

ஆனந்த குருவியாகித் தாவுகிறாள்.

தலையை ஆட்டி 

புடவையை ஏற்றியபடி 

குதிக்கிறாள் அம்மா 

எஸ்கலேட்டர் நதியில்.







Comments